வேலூரில் ஆட்கொல்லி சிறுத்தை.. இதையெல்லாம் செஞ்சா தப்பிச்சுக்கலாம்! வனத்துறை அறிவுறுத்தல்

post-img
வேலூர்: இரண்டு நாட்களுக்கு முன்னர் வேலூர் மாவட்டத்தில் சிறுத்தை தாக்கியதில் இளம்பெண் உயிரிழந்திருந்தார். இந்நிலையில், சிறுத்தை தாக்குதலிலிருந்து தப்பிக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து வனத்துறையினர் விளக்கியுள்ளனர். கிழக்கு தொடர்ச்சி மலைகள் படர்ந்திருக்கும் வேலூர் மாவட்டத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் அரிதாக காணப்படுகிறது. ஆனால் ஆந்திராவை ஒட்டிய மலைப்பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டத்தை உள்ளூர் மக்கள் அடிக்கடி பார்த்திருக்கிறார்கள். குடியாத்தம் அருகே உள்ள துர்கம் கிராமத்திலும் மக்கள் சிறுத்தை நடமாட்டத்தை மூன்று தினங்களுக்கு முன்னர் கண்டுபிடித்துள்ளனர். சிலர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க தொடங்கியுள்ளனர். இப்படி இருக்கும்போதுதான் நேற்று அந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது மாடு மேய்க்க சென்ற 22 வயது இளம்பெண் சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்துள்ளார். துருவம் கிராமத்தில் பலரும் மாடுகளை வளர்த்து வருகின்றனர். மாடுகள் அருகில் உள்ள காப்புக்காட்டில் மேய்ச்சலுக்கு ஓட்டி சென்று வருகின்றனர். நேற்றும் அப்படித்தான் சிவலிங்கம் என்பவரது இளைய மகள் அஞ்சலி மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றிருக்கிறார். வழக்கமாக 5 மணிக்குள் அஞ்சலி வீடு திரும்பிவிடுவார். ஆனால் நேற்று அப்படி நடக்கவில்லை. சந்தேகமடைந்த சிவலிங்கம் அஞ்சலியை தேடி சென்றிருக்கிறார். காட்டில் மாடுகள் தனியாக நின்றுக்கொண்டு கத்திக்கொண்டிருந்திருக்கின்றன. எவ்வளவு சத்தமாக கூப்பிட்டும் அஞ்சலி மட்டும் பதிலளிக்கவில்லை. நீண்ட நேரம் தேடிய பின்னர் காட்டில் 100 மீட்டர் தொலைவில் ரத்த வெள்ளத்தில் அஞ்சலி சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சிவலிங்கம் உடனடியாக ஊர் மக்களுக்கு தகவல் கொடுத்திருக்கிறார். அவர்கள் அஞ்சலியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அஞ்சலி சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து ஆட்கொல்லி சிறுத்தையை பிடிக்க பிரத்யேக கூண்டுகளை வனத்துறையினர் அமைத்துள்ளனர். இருப்பினும் சிறுத்தை குறித்து ஊர் மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் சிறுத்தையிடம் சிக்காமல் எப்படி தப்புவது என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த சம்பவம் நடந்ததிலிருந்து இரண்டு நாட்களாக நாங்கள் காப்புக்காட்டில் தீவிர தேடுதல் வேட்டையை மேற்கொண்டிருக்கிறோம். ட்ரோன் கேமரா உள்ளிட்டவற்றை கொண்டு தேடி வருகிறோம். தவிர, 4 சிறப்பு கேமராக்களை கொண்டும் தேடி வருகிறோம். இதுவரை சிறுத்தை எங்கள் கண்களுக்கு அகப்படவில்லை. கூண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே மக்கள் அச்சமடைய வேண்டாம். நாங்கள் 24 மணி நேரமும் நிலைமையை கண்காணித்து வருகிறோம். மக்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இரவில் வீட்டிற்கு வெளியில் விளக்கை போட்டு வைத்திருங்கள். இரவு நேரங்களில் குழந்தைகளை வெளியில் விடாதீர்கள். மாடு உள்ளிட்ட கால்நடைகளை திறந்தவெளியில் கட்டாமல், பட்டிகளில் கட்டி வையுங்கள்" என்று கூறியுள்ளனர். மனிதர்களுக்கும் சிறுத்தைகளுக்குமான மோதல்கள் அரிதானவைதான் என்றாலும், இப்போதெல்லாம் இப்படியான சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன என்று சூழலியலாளர்கள் கூறுகின்றனர். புலியை ஒப்பிடும்போது சிறுத்தையின் எடை குறைவுதான். அதே நேரம், நகத்தின் வலுவும் அவ்வளவு தீவிரமாக இருக்காது. இப்படி சொல்வதால் சிறுத்தை தாக்கினால் பாதிப்பு ஏற்படாது என்று அர்த்தமல்ல. சிறுத்தையின் தாக்குதிலிலிருந்து தப்பிக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்பதே இதன் அர்த்தம். சிறுத்தை உங்களை தாக்க வருகிறது என்றால் உடனே இரண்டு கைகளையும் உயர்த்தி கூச்சலிடுங்கள். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் சிறுத்தையைவிட பெரிய உருவம் என்பதை காட்டுகிறீர்கள். வன விலங்குகள் தங்களை விட பெரிய விலங்குகளை அரிதாகவே வேட்டையாடுகின்றன. எனவே, தப்பிக்க வாய்ப்பு அதிகம். தவிர, காட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக உணர்ந்தால், தலைக்கு பின்புறம் மனித முகமூடியை அணிந்துக்கொள்ளுங்கள். சிறுத்தைகள் முதுகு பக்கம்தான் தாக்கும். நீங்கள் முகமூடி அணிந்திருந்தால் அது குழப்பமடைய வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

Related Post