முன்னணி தமிழ் நடிகையும், பாஜகவை சேர்ந்தவரும், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு கடந்த ஜூன் 15 ஆம் தேதி ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் தனது கணவரும் பிரபல இயக்குநரும், நடிகருமான சுந்தர் சியின் படங்களை பதிவிட்டு, தங்களின் காதல் பற்றி பதிவிட்டு இருந்தார். - அதில், "நான் 28 ஆண்டுகளுக்கு முன் காதலில் விழுந்த முகம். என் இதயத்தை இன்னும் படபடக்க வைக்கும் இந்த மனிதருக்கு" என்று குறிப்பிட்டு அன்பை வெளிப்படுத்தும் ஹார்ட்டின் எமோஜியை குறிப்பிட்டு இருந்தார்.
இந்த பதிவுக்கு கீழே ஜெயசங்கர் கெனாத் என்ற பத்திரிகையாளர், "இந்த மனிதரின் பணத்தை பாதுகாக்க நீங்கள் பாஜகவிற்குள் குதித்தீர்கள்." என கருத்திட்டார். இதனால் ஆத்திரமடைந்த நடிகை குஷ்பு, "நீங்கள் வேண்டுமானால் உங்கள் தொழிலை பாதுகாப்பதற்காக உங்கள் வீட்டின் பெண்களை பயன்படுத்துபவராக இருக்கலாம். வெட்கம்கெட்டவர்கள்." என்று கருத்திட்டு இருந்தார்.
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருந்துகொண்டு ட்விட்டரில் ஒருவரது வீட்டு பெண்கள் பற்றி நடிகை குஷ்பு தகாத முறையில் பதிவிட்டு இருப்பதாக பலரும் அவரது செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஒருவர், "இந்த லட்சணத்தில் நீங்கள் செருப்பால் அடிப்பதை பற்றி பேசுகிறீர்கள்? உங்கள் நடத்தை அவமதிப்புக்கு கீழ் உள்ளது." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மற்றொரு நபர், "உங்களை யாராவது கடுமையாக விமர்சிக்கும் நேரத்தில் எல்லாம், உடனடியாக அவர்களின் குடும்ப பெண்களை நீங்கள் வரம்பு மீறி இழுக்கின்றீர்கள். உங்களுக்கு எதிரான விமர்சனங்களை மறைப்பதற்கு மலிவான, பழைய கோழைத்தனமான தந்திரங்களை கையில் எடுக்கின்றீர்கள். இது தாழ்வு மனப்பான்மையா அல்லது குற்ற உணர்ச்சியா?" என்று குறிப்பிட்டு உள்ளார்.
குஷ்பு அவர்களே இது மிகவும் கண்டிக்கத்தக்கது... அவர் வீட்டு பெண்கள் எல்லாம் பெண்கள் இல்லையா?? தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக உள்ள நீங்களே இப்படி பேசலாமா?? ஏன் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து உங்கள்மீது நடவடிக்கை எடுக்க கூடாது... நீங்கள் அந்த பதவியில் தொடரவே தகுதியில்லை..." என்று மற்றொரு நபர் கருத்திட்டு கண்டித்து உள்ளார்.
"நல்ல மனிதர் தவறான இடத்தில் இருக்கிறார் என்று நாங்கள் உங்களை பற்றி நினைத்தேன். ஆனால், நீங்கள் இப்போது பாஜகவில் இருப்பதற்கு தகுதியான ஆள்தான் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்." என்று மற்றொரு நபர் விமர்சித்து இருக்கிறார்.
இதற்கிடையே குஷ்புவை முதலில் விமர்சித்த ஜெயசங்கர் கெனாத்த் நேற்று குஷ்புவின் விமர்சனத்துக்கு பதிலளித்து உள்ளார். அதில், "உங்கள் தரத்துக்கு நான் இறங்கி வர மாட்டேன். தமிழ்நாடு உங்களை பற்றி அனைத்தையும் அறிவார்கள். 2024 லோ சபா தேர்தலுக்கு பிறகு இந்த அகங்காரம் எல்லாம் எங்கே போகிறது என்று பார்ப்போம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.