சென்னை: தவெகவில் இணையும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு ஆதவ் அர்ஜுனா பதில் அளித்துள்ளார். விசிகவில் துணைப் பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா, அண்மையில் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து நேற்று கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், விஜய்யின் தவெகவில் இணையும் திட்டம் உள்ளதா என செய்தியாளர்களின் கேள்விக்கு ஆதவ் அர்ஜுனா பதில் அளித்துள்ளார். “எதிர்கால திட்டம் குறித்து ஆலோசித்து விரைவில் செய்தியாளர்களை சந்தித்து என்ன முடிவு என்பதை அறிவிப்பேன். எங்கு இணைகிறேன் என்பதை விட என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் ஆதவ் அர்ஜுனா.
நேற்று விசிக தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டியில், “அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்காதது குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்து விட்டேன். என்னை யாரும் அழுத்தம் கொடுத்து இணங்க வைக்க முடியாது. சில நேரங்களில் முதல்வரை பார்க்க முடியாத தருணங்களில் மற்ற அமைச்சர்களை பார்த்து பேசுவது உண்டு. அதன்படி, அமைச்சர் எ.வ. வேலுவை நான் சந்தித்தேன்.
ஆதவ் அர்ஜுன் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கக்கூடிய சூழலில் இதுபோன்ற முரண்பாடான கருத்தை கூறுவது தவறு அவர் அப்படி பேசக்கூடாது. ஆறு மாதத்திற்குப் பின்பு கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டுமென்றால் அவர் அமைதியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு வேறு ஒரு செயல் திட்டம் இருப்பதால்தான் இது போன்ற கருத்துக்களை தொடர்ந்து பேசி வருகிறார் என்பது தற்போது உணர முடிகிறது. எங்கள் கட்சியின் நடைமுறையின் அடிப்படையில் தான் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என தெரிவித்தார்.
இதையடுத்து நேற்று மாலை விசிகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார் ஆதவ் அர்ஜுனா. என்னைப் பற்றிய தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக என்னை விடுவித்துக்கொள்வது என்று முடிவெடுத்துள்ளேன். மக்களுக்கான ஜனநாயகம், சமத்துவம், சமநீதி என்ற அடிப்படையில் எனது அரசியல் பயணம் தொடரும் என அறிவித்தார் ஆதவ் அர்ஜுனா.
விசிகவில் இருந்து விலகி உள்ள ஆதவ் அர்ஜுனா, விஜய் தலைமையிலான தவெக கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன. விஜய் பங்கேற்ற விழா மேடையை முன்வைத்து எழுந்த பிரச்சனையால் தான் ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து விலகியுள்ளார். கூடிய விரைவில் விஜய் கட்சியிலேயே அவர் இணைவார் என அரசியல் அரங்கில் யூகங்கள் உலவுகின்றன.
இந்தச் சூழலில் தான் இன்று அதுபற்றிய கேள்விக்கு ஆதவ் அர்ஜுனா பதில் அளித்துள்ளார். “எதிர்கால திட்டம் குறித்து ஆலோசித்து விரைவில் அறிவிப்பேன். எங்கு இணைகிறேன் என்பதை விட என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தீவிரமாக யோசித்து வருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார் ஆதவ் அர்ஜுனா.
மேலும் பேசிய ஆதவ் அர்ஜுனா, “திருமாவளவன் என்றைக்கும் என் ஆசான். தலைவரின் வார்த்தைகளுக்கு நான் கட்டுப்படுபவன். அவர் சொன்ன அறிவுரைகளை எடுத்துக்கொண்டு பயணிப்பேன். கொள்கைத் தலைவர்கள் எல்லோருமே புதிய அரசியலை உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அதைச் சொன்னதற்காகத்தான் எனக்கு தண்டனை கிடைத்தது.” எனத் தெரிவித்துள்ளார்.