இரட்டை இலை சின்னம் முடக்கப்படலாம்.. எடப்பாடிக்கு காத்திருக்கும் சிக்கல்.. எச்சரித்த ப்ரியன்!

post-img
சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு எதிராக புகழேந்தி அளித்த மனுவை விரைவாக விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதில் விரைவில் தீர்வு வழங்குமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில்தான் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடங்கும் வாய்ப்புகள் இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ள நிலையில் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், அதிமுக தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது. 7-8 வருடங்களாக வரிசையாக தோல்வி அடைந்து வருகிறது. அதிமுகவின் பலம் எடப்பாடிக்கு தெரியவில்லை. கட்சியின் பலத்தை விடுங்கள் தன்னுடைய பலம் அவருக்கு தெரியவில்லை. அவர் சுயபரிசோதனை செய்ய வேண்டும். தனக்கு பலம் இருக்கிறது என்று அவர் நினைக்கிறார். ஆனால் விலகிய தலைவர்கள் காரணமாக அந்த கட்சி சரிந்துவிட்டது. அவர்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலை எடப்பாடிக்கு இல்லை. இப்பொது விஜய் வந்துவிட்டார். அவர் மேலும் வாக்குகளை பிரிப்பர். விஜய் மேலும் அதிமுக வாக்குகளை எடுப்பார். அதோடு அதிமுக கூட்டணிக்கு போகும் கட்சிகளை விஜய் தன் பக்கம் கொண்டு வர நினைப்பார். அப்படி இருக்க எடப்பாடிக்கு பெரிய பிரஷர் உள்ளது. அதிமுக பலமாக இருந்தால்தான் யார் வேண்டுமானாலும் அதிமுக உடன் கூட்டணிக்கு செல்வார்கள். ஆனால் நிலைமை அப்படி இல்லையே. அதிமுக பலமாக இல்லையே. இதை எல்லாம் பொதுக்குழுவில் பேசவில்லை. அப்படிப்பட்ட கூட்டம் எதற்கு. அதிமுக ஏற்கனவே தென் மண்டலம், சென்னை, டெல்டா மண்டலங்களில் வலிமை இழந்துவிட்டது. அப்படிப்பட்ட விஷயங்களை எல்லாம் எடப்பாடி பேச வேண்டும். அதிமுகவில் யாரும் இளைஞர்களே இல்லை. பலருக்கும் வயதாகிவிட்டது. அங்கே இளைஞர் தலைவர்களே இல்லை. அதிமுகவின் இரட்டை இலை சின்னம் பற்றி முடிவெடுக்கும் முன் ஓ பன்னீர்செல்வத்திடம் கருத்து கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் சொல்லி உள்ளது. எடப்பாடிக்கு இது கூடுதல் சிக்கல் ஆகி உள்ளது. அதிமுகவில் ஓ பன்னீர்செல்வத்தை நீக்கிய பொதுக்குழுவே சட்டத்தை திருத்தி செய்யப்பட்ட பொதுக்குழுதான். அவரை நீக்க வேண்டும் என்று பொதுக்குழு கூடும் விதிகளை கூட மாற்றினார்கள். கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவி நீக்கப்பட்டது செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம் கூறுகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் தேர்தல் ஆணையம் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. அப்போது எடப்பாடி பாஜகவோடு நெருக்கமாக இருந்தார். இப்போது இல்லை. இனி இவர்கள் சேர்வார்களா இல்லையா என்று தெரியவில்லை. விஜய் உடன் எடப்பாடி சேர்ந்தால் அங்கே பாஜக வர வாய்ப்பு இல்லை. இதனால் எடப்பாடிக்கு கால் கட்டு போட பாஜக இரட்டை இலை சின்னத்தில் கை வைக்கலாம். தேர்தல் ஆணையத்தை வைத்து பாஜக செக் வைக்கலாம். இதனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட வாய்ப்புகள் உள்ளன. எளிதாக முடிய வேண்டிய விஷயம்.. முடிந்துவிட்டது என்று நினைத்த விஷயம் மீண்டும் பெரிதாகி உள்ளது. சசிகலாவும் இதில் வழக்கு போடும் வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடக்கும் பட்சத்தில் சின்னம் முடங்கினாலும் கூட முடங்கும். இதுவரை எடப்பாடியிடம் சின்னம் தற்காலிகமாகவே உள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்று பார்க்கலாம்!, என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

Related Post