சென்னை: தமிழ்நாட்டில் மூத்த அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே ரெய்டு நடக்கிறது. திமுகவின் மூத்த அமைச்சர்கள் வீடுகளில் கண்டிப்பாக இந்த ரெய்டுகளை அதிகாரிகள் தொடருவார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டியில் தெரிவித்துள்ளார் .
அமைச்சர் எ.வ வேலு இடங்களில் மூன்றாவது நாளாக தொடரும் ஐடி ரெய்டு நடந்து வருகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பாக அவருக்கு சொந்தமான இடங்களில் மூன்றாவது நாளாக ரெய்டு நடந்து வருகிறது.
தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, திருவண்ணாமலையில் எ.வ.வேலுவின் வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
எ.வ. வேலுவிற்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. எ.வ.வேலு வீட்டில் வருமான வரி சோதனை நடத்துவதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜகவின் படுதோல்வியே ஐடி ரெய்டுக்கு காரணம் என்று திமுக வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார். இந்த ரெய்டு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
பேட்டி: அதில், இந்த ரெய்டு எதிர்பார்த்த ரெய்டுதான். மூத்த அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர்கள் கண்டிப்பாக இந்த ரெய்டுகளை தொடருவார்கள். இவர்கள் எல்லாம் திமுகவின் பண வங்கி. அவர்கள் திமுகவிற்கு பேங்க் போல செயல்படும் நபர்கள். அதனால் இங்கே ரெய்டு நடத்துகிறார்கள். பாஜகவின் குறி இவர்கள்தான். இவர்கள் எக்கச்சக்கமாக பணம் சம்பாதித்துவிட்டார்கள் என்பதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மற்றப்படி ரெய்டு மூலம் எதுவும் நடக்காது.
வருமான வரித்துறை ரெய்டு காரணமாக பெரிய சிக்கல் இருக்காது. ஆனால் அமலாக்கத்துறை ரெய்டு நடந்தால் அது சிக்கல் ஆகும். இந்த ரெய்டுகள் எல்லாம் எதிர்பார்த்த ஒன்றுதான். திமுகவிற்கு வரக்கூடிய பணத்தை கட் செய்ய வேண்டும். திமுகவிற்கு பணம் செல்ல கூடாது என்பதை மனதில் வைத்தே பாஜக இந்த ரெய்டுகளை ஏவி விட்டு உள்ளது. அமலாக்கத்துறை பல விஷயங்களை பின்பற்றி வருகிறது. அவர்கள் திமுகவை விடாமல் பின் தொடர்ந்து வருகின்றனர்.
திமுகவிற்கு செக்: திமுகவை எதிர்க்க வேண்டும் என்றுதான் இப்படி செய்கிறார்கள். திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்பான இடங்கள், வீடுகள், அலுவலகங்கள், கல்லூரிகள், ஹோட்டல்களில் ரெய்டு நடந்தது. வருமான வரித்துறை மூலம் இந்த ரெய்டு நடத்தப்பட்டது.
2019 லோக்சபா தேர்தலில் நிற்கும் போது தன்னுடைய சொத்து மதிப்பாக 110 கோடி ரூபாய் இருப்பதாக ஜெகத்ரட்சகன் கணக்கு காட்டினார். அதோடு தனக்கு மனைவிற்கு 43 கோடி ரூபாய் இருப்பதாக கணக்கு காட்டினார். ஆனால் அதன்பின் அவரின் சொத்துக்கள் வேகமாக உயர்ந்ததாக புகார் வைக்கப்படுகிறது. வருமான வரித்துறை சந்தேகம் அடைந்து உள்ளது. இப்படி திமுகவிற்கு நிதி திரட்டும் நபர்கள் மீதெல்லாம் ரெய்டு நடத்தப்படுகிறது.
இதில் எல்லாம் அமலாக்கத்துறை உள்ளே நுழையும் போது பிரச்சனை ஏற்படும். சமீபத்தில் அமைச்சரவை கூட்டத்தில் கூட ஸ்டாலின் இதை பற்றி எச்சரிக்கை செய்தார். நான் எச்சரிக்கை விடுகிறேன்.. ஒவ்வொரு நாளும்.. ஒவ்வொரு வீட்டில் 2 நாளுக்கு ஒரு முறை ரெய்டு நடக்கும் என்று தகவல் வருகிறது.. கவனமாக இருங்கள்.. முதல் நாள் இரவே எனக்கு தகவல் வருகிறது.
கவனமாக இருங்கள். பாதுகாப்பாக இருங்கள்.எதற்கும் இடம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் வெளியே வருவது கஷ்டம், என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்ததாக மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.