புதுச்சேரி செல்லும் மக்களுக்கு ‘ஷாக்’ செய்தி.. அடுத்த மாதம் முதல் சுங்கக் கட்டணம் வசூல்!

post-img

சென்னை: விழுப்புரம் - புதுச்சேரி - நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் கெங்கராம்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்டில் வரும் ஜனவரி மாதம் 3 ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே 194 கி.மீ துாரத்திற்கு 4 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு 6,431 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. விழுப்புரம் ஜானகிபுரத்தில் துவங்கும் இந்த 4 வழிச்சாலை, புதுச்சேரி மற்றும் கடலுார், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 134 கிராமங்கள் வழியாக செல்கிறது.

இந்த நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகளை எளிதாகவும், விரைவாகவும் செய்து முடிக்க ஏதுவாக, 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, வெவ்வேறு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு சாலை அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்றன. மேம்பாலங்கள், இணைப்பு சாலை பணிகளும் வேகமாக நடைபெற்று வந்தன.
இந்த சாலை அமைக்கும் பணிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. தற்போது பணிகள் முடிவடைந்து, வரும் ஜனவரியில் முழுமையாக செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இந்நிலையில், விழுப்புரம் - நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் வரும் ஜனவரி மாதம் 3 ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சேரி அருகே உள்ள மதகடிப்பட்டு பகுதியில் உள்ள கெங்கராம்பாளையம் கிராமப் பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடி அமைக்கக் கூடாது என்று அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பையும் மீறி சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சுஙக்ச்சாவடியில் தற்போது டோல்கேட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கார், ஜீப், வேன், இலகுரக வாகனங்கள் ஒரு முறை செல்ல ரூபாய் 60, ஒரு நாளுக்குள் திரும்ப ரூபாய் 90, மாத பாஸ் கட்டணமாக ரூபாய் 1,985 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்திற்குள் ஒருமுறை செல்ல இலகுரக வாகனங்களுக்கு ரூபாய் 30 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மண் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஒரு முறை செல்ல ரூபாய் 315 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய 4 வழிச்சாலையில் சுங்கக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது வாகன ஓட்டிகள், அப்பகுதி விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டபோது 60 கி.மீ-க்கு சுங்கச்சாலை அமைக்கப்படாது என விவசாயிகளிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புதுச்சேரி எல்லைப் பகுதியான மதகடிப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவக்கல்லூரி, ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்வோரும் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே, இந்த சுங்கக் கட்டணத்துக்கு எதிராக விவசாயிகள், அப்பகுதி மக்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Post