திருச்செந்தூர் மண்ணில் மூன்று நாட்களாக நடக்கும் அதிசயம்.. கொட்டும் மழையிலும்.. வியப்பில் பக்தர்கள்

post-img
திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்று நாட்களாக மழை பெய்து வரும் நிலையிலும், திருச்செந்தூரில் மூன்று நாட்களாக எரிந்து வரும் சொக்கப்பனை பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. திருச்செந்தூரில் கார்த்திகை தீபத்தின்போது சொக்கப்பனை கொளுத்தப்பட்டுள்ளது. இந்த சொக்கப்பனை மழை பெய்து வரும் நிலையிலும் விடாமல் தொடர்ந்து மூன்று நாட்களாக எரிந்து வருகிறது. திருவண்ணாமலையில் பிரசித்திப்பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக இது விளங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை தீபத்திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களிலும் கார்த்திகை தீபத்திருநாள் வழிபாடு சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் கடந்த 13 ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. விடியற்காலை மூலவர் மற்றும் ஜெயந்திநாதருக்கு கார்த்திகை தீப சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, மாலையில் மகா மண்பத்தில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் நாரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி - தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளினார். கார்த்திகை தீபத்தையொட்டி, கோயில் முன்புறமுள்ள கடற்கரையில் சுமார் 25 உயரமுள்ள சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தப் பெருமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சண்முக விலாச மண்டபத்தில் இருந்த சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி ஜெயந்திநாதர் உட்பிரகாரத்தில் வலம் வந்தார். கார்த்திகை தீபத்தையொட்டி, ஒவ்வொரு இடங்களிலும் கொளுத்தப்படும் சொக்கப்பனையும் மறுநாள் காலை வரை எரிவது வழக்கம். ஆனால், எங்கும் காணாத அதிசயமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை முன்பு கொளுத்தப்பட்ட சொக்கப்பனை மூன்று தினங்களாக அணையாமல் எரிந்து வருகிறது. குறிப்பாக, கடந்த இரண்டு நாட்களாக திருச்செந்தூர் பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையிலும் சொக்கப்பனை அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் சம்பவம் முருக பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மழை மற்றும் வெள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு டிசம்பர் 14ஆம் தேதி மற்றும் 15 ஆம் தேதிகளில் வெளியூரிலிருந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Post