கோவை: கோவை தடாகம் சாலை கணுவாய் அருகே சிலிண்டர்களை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. அப்போது சிலிண்டர்கள் சாலையில் உருண்டு ஓடின. அங்கு என்ன நடக்கிறது என்பது புரியாமல் மக்கள் அதிர்ச்சியில் திகைத்து நின்றனர். இதுகுறித்து வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியளவில் சாலை விபத்து அதிகம் நடைபெறும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் மாவட்டங்களில் கோவை முதலிடத்தில் உள்ளது. கடந்தாண்டு மட்டுமே சாலை விபத்துகளில் 1,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். கோவையில் போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய பிரச்னையாக மாறி வருகிறது.
மாநகர் மட்டுமல்லாமல் புறநகர் பகுதிகளிலும் அதிகளவு விபத்துகள் நடைபெறுகின்றன. கோவை தடாகம் சாலை கேரளா மாநிலம் ஆனைக்கட்டி, அட்டப்பாடியை இணைக்கும் முக்கிய பகுதியாகும். விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் அங்கு மக்கள் அதிகளவு செல்வது வழக்கம்.
இந்நிலையில், கோவை தடாகம் சாலை கணுவாய் அடுத்த நர்சரி பகுதியில் இன்று காலை ஒரு வேன் சிலிண்டர்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வேன் திடீரென சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வாகனம் வேகமாக சென்றதால் திடீரென நிலை தடுமாறி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
விபத்து நிகழ்ந்தவுடன் வாகனத்தில் இருந்த சிலிண்டர்கள் சாலைகளில் உருண்டு ஓடின. இதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த வழியாக வந்த வாகனங்களும் என்ன செய்வதென்று அறியாமல் வாகனங்களை அப்படியே நிறுத்தி திகைத்து போனார்கள். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை.
அருகில் இருந்த மக்கள் உடனடியாக சாலைகளில் உருண்டு சென்ற சிலிண்டர்களை எல்லாம் எடுத்து சாலையோரம் வைத்தனர். மேலும் அந்த வேனையும் சாலையோரம் நிமிர்த்தி ஓரம் கட்டினார்கள். இந்த சம்பவத்தில் வேன் ஓட்டுநர் மட்டும் லேசாக காயமடைந்தார்.
இந்நிலையில் விபத்தின்போது சிலிண்டர்கள் சாலையில் வேகமாக உருண்டு ஓடிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.