திருநெல்வேலியில் கருப்பட்டியின் விலை திடீரென உயர்ந்துள்ளது.
தென் மாவட்டங்களில் கருப்பட்டிக்கு பெயர் பெற்ற உடன்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பனை தொழிலாளர்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கருப்பட்டியை தமிழ்நாடு அல்லாமல் வெளி மாநிலங்கள் வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
கோடைகாலத்தில் பதநீர் சீசன் நன்றாக இருந்ததால் கருப்பட்டி உற்பத்தி அதிகமாக இருந்தது.
இதனால் ஒரு கிலோ புதிய கருப்பட்டி 250 ரூபாய்க்கும் பழைய கருப்பட்டி 320 ரூபாய்க்கும் விற்பனைசெய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் பதநீர் சீசன் முடியும் தருவாயில் கருப்பட்டி உற்பத்தியும் குறைந்து வருகிறது. இந்த உற்பத்தி குறைவால் கருப்பட்டி விலை திடீரென நெல்லையில் உயர்ந்துள்ளது.
இது குறித்து பாளையங்கோட்டை மார்க்கெட்கருப்பட்டி வியாபாரி மாயா கூறுகையில், "ஒரு கிலோ புதிய கருப்பட்டி 280 ரூபாய்க்கும் பழைய கருப்பட்டி 350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கோடை காலத்தில் பனை மரங்களில் இருந்து பதநீர் அதிகமாக கிடைப்பதால் கருப்பட்டி உற்பத்தியும் அதிகரித்து காணப்படும்.
இன்னும் சில நாட்களில் மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், பதநீரும் குறைவாகவே கிடைக்கிறது. இதனால் கருப்பட்டி உற்பத்தியின் குறைந்துள்ளது. இன்னும் ஒரு மாதம் வரையிலுமே குறைந்த அளவு பதநீர் கிடைக்கும், எனவே அது வரையிலும் மட்டுமே புதிய கருப்பட்டி உற்பத்தி செய்யப்படும். தொடர்ந்து ஓராண்டுக்கு மேலாக இருப்பு வைக்கப்பட்ட பழைய கருப்பட்டி விற்பனைக்கு வந்துவிடும்.
பழைய கருப்பட்டிஊட்டச்சத்து மிகுதியாக இருப்பதால் ஒரு கிலோ 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் 400 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.