நிலவின் 8 செமீ ஆழத்தில் கடுமையான குளிர்.. ஆய்வை தொடங்கிய பிரக்யான்..

post-img

நிலவின் தென்துருவத்தில் ஆய்வுப் பணியை தொடங்கியுள்ள பிரக்யான் ரோவர் மேற்பரப்பு மற்றும் அடிப்பகுதி வெப்பநிலையை கண்டறிந்துள்ளது. நிலவின் தரையில் இருந்து அடிப்பகுதிக்கு செல்லச் செல்ல வெப்பநிலை கடுமையாக குறைவது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், கடந்த 25ஆம் தேதி தரையிறங்கியது. இதனைத் தொடர்ந்து, லேண்டரிலிருந்து ரோவர் பிரிந்து சென்றது. நிலவின் மேற்பகுதியில் 14 நாட்களுக்கு ஆய்வு செய்யும் வகையில், ரோவர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிலவின் மேல் உள்ள மணல் பகுதியில் வெப்பநிலையை அளவிடும் பணி தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நிலவின் மேல் பகுதியில் உள்ள மணல் பரப்பில் வெப்பநிலையை கணக்கிடும் பணியில் சந்திராஸ் நிலப்பரப்பு வெப்ப இயற்பியல் ஆய்வுக்கருவி எனப்படும் chaSTE கருவி ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலத்துக்கு அடியில் 10 சென்டிமீட்டர் வரை ஊடுருவி வெப்பநிலையை கணக்கிடும் திறனை இந்தக் கருவி பெற்றுள்ளதாகவும், இதில், வெப்பநிலையை அளவிடுவதற்காக 10 விதமான கருவிகள் இருப்பதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

முதல்கட்டமாக மேற்கொண்ட ஆய்வு குறித்த வரைபடத்தையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இதன்படி, தரையிலிருந்து ஒன்றரை சென்டிமீட்டர் உயரத்தில் சுமார் 55 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நிலத்துக்கு கீழே செல்ல செல்ல வெப்பநிலை கடுமையாக குறைந்துள்ளது. அதாவது, 8 சென்டிமீட்டர் வரை சென்று ஆய்வுசெய்ததில், அந்தப் பகுதியில் மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் குளிர் இருப்பது உறுதியாகியுள்ளது. எனினும், தென்துருவத்தில் முதல்முறையாக மேற்கொள்ளப்பட்ட இந்த மதிப்பீடு குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது.

Related Post