மேயர் பிரியாவிடம் "கொஞ்சம் தள்ளி நில்லுங்க ரங்கநாதன்".. எழுந்த கோரிக்கைகள்!

post-img

சென்னை மேயர் பிரியாவுக்கு பொது நிகழ்ச்சியில் மறுபடியும் அவமதிப்பு நடந்துவிட்டது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.. இதுபோன்ற விமர்சனங்களுக்கு திமுக மேலிடம் ஒரு கடிவாளத்தை போட்டே ஆக வேண்டும் என்ற கோரிக்கைகளும் வெடித்துள்ளன.

சென்னை மேயர் பிரியாவை பொறுத்தவரை, தன் மீதான விமர்சனங்களை எல்லாம் அசால்ட்டாக கடந்து செல்கிறார்.. பம்பரமாக சுழன்று சுழன்று வேலை பார்த்து வருகிறார்.

சபாஷ் பிரியா:

மழைவெள்ளத்தில் சென்னை சூழ்ந்தபோது, மிக பொறுப்புடன் அவர் காட்டிய அக்கறை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது.. முக்கியமாக மழைநீர் வடிகால் பணிகளில் வேகம் எடுத்ததுடன், புரட்சிகரமான பட்ஜெட்டையும் சமர்ப்பித்து அசரடித்து, அனைத்து சலசலப்புகளையும் கடந்து வெற்றிகரமாக 2வது ஆண்டில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆனால், அவர் மீதான விமர்சனங்களும், சர்ச்சைகளும் மட்டும் நிற்கவில்லை.. இன்றுவரை தொடர்கிறது.. அதுவும் திமுக அமைச்சர்களாலேயே இந்த சலசலப்புகள் தொடர்வது வேதனையை தந்து வருகிறது.

வணக்கத்திற்குரிய மேயர்:

சென்னை மேயர் பதவிக்கென்றே, ஒரு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது.. பெருமிதம் இருக்கிறது. இன்றைய முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் அலங்கரித்த அரியணை அது. "சிங்கார சென்னை" என்ற வார்த்தையை அனைவரும் முணுமுணுக்க காரணமாக இருந்தவர்களின் அரியணை அது.

அப்படியாகப்பட்ட இடத்தில் சென்னையின் 3வது பெண் மேயர் என்ற பெருமையுடன் பதவியேற்றவர் பிரியா ராஜன்.. ஆனால், பதவியேற்ற நாளிலிருந்தே, ஏகப்பட்ட விமர்சனங்களும், சர்ச்சைகளும், பரபரப்புகளும் இணையத்தில் றெக்கை கட்டி பறக்க ஆரம்பித்துவிட்டன.

சேகர்பாபு:

செய்தியாளர்கள் சந்திப்பில், மேயர் பிரியாவை கேள்வி கேட்டால், சேகர்பாபு பதில் சொல்கிறாரே? என்று ஆச்சரியங்கள் கிளம்பின.. அமைச்சர் சேகர்பாபு ஒருமுறை, "அவருக்கு பேச தெரியாது. அவர் ஒரு குழந்தை" என்றார்.. வயது எதுவானாலும், மதிப்பிற்குரிய பதவியில் அமர்ந்தவரை, சேகர்பாபு இப்படி சொன்னது பரபரப்பாக பேசப்பட்டது.

அதேபோல, அமைச்சர் சேகர்பாபுவுக்கு மேயர் பிரியா குடைபிடித்தது அதற்கு மேல் சோஷியல் மீடியாவில் விமர்சிக்கப்பட்டது. இதெல்லாம் போதாதென்று, அமைச்சர் கே.என்.நேரு, மேயர் பிரியாவை ஒருமையில் பேசி வீடியோ பகீரை கிளப்பியது.

தர்மசங்கடம்:

இதற்கு நடுவில், முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தில் மேயர் பிரியா தொங்கிக்கொண்டு சென்ற வீடியோ அதற்கு மேல் விவாதத்தை கிளப்பியது. அப்படியானால், "திமுகவில் பெண்களுக்குச் சம உரிமை இல்லையா?" என்ற தர்மசங்கட கேள்விக்கு திமுகவே ஆளானது. இதோ இப்போது அடுத்த பரபரப்பு கிளம்பி விட்டது. கடந்த கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி தீரன் சின்னமலை நினைவு தினத்தில், சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின், சென்னை மேயர் பிரியா, திமுக முன்னாள் எம்எல்ஏ ரெங்கநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது நிகழ்ச்சியில், மேயர் பிரியாவை உரசிக்கொண்டும், கையை பிடித்து இழுத்தும் அவமதிக்கும் விதமாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரெங்கநாதன் நடந்து கொண்டதாக பகீர் கிளம்பி உள்ளது. இது தொடர்பான வீடியோவும் கடந்த 2 நாட்களாகவே இணையத்தில் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.

மேயர் பிரியாவை, தனக்கு அருகில் நிற்க வைக்க ரங்கநாதன் முயல்வதும், ஆனால், அவரது செயலை விரும்பாத மேயர் பிரியா, கையை தட்டிவிட்டதும், முகசுளிப்புடன் பிரியாவின் முகம் காணப்பட்டதும் அதில் பதிவாகி இருந்தது.

கண்டனங்கள்: இதற்குதான் கண்டனங்கள் கிளம்பி உள்ளன. சென்னை மாநகராட்சியின் வணக்கத்துக்குரிய மேயர் பிரியா, தலித் சமூகத்தை சேர்ந்தவர்.. அவரை அவமதிக்கும் விதமாகவே, திமுகவின் மாஜி எம்எல்ஏ இப்படி நடந்து கொண்டதற்கு, இதுவரை எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கப்படவில்லை? குறைந்தபட்சம் கண்டனம் கூட தெரிவிக்காமல் இருக்கிறார்களே? என்று ஆதங்க கேள்விகள் எழ ஆரம்பித்துவிட்டன.

முதல் பெண் மேயர் பிரியாவை, திமுகவை சேர்ந்தவர்களே அவமதிப்பது சரியா? அதுவும் பொதுநிகழ்ச்சியில் பகிரங்கமாக, தனிநபரின் மரியாதை சீண்டப்படலாமா? இதுகுறித்து மெத்தனப்போக்கை கைவிட்டு, உடனடியாக அவமதித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வெடித்துள்ளன.

தலித் சமூகம்: இந்த கோரிக்கையானது, திமுக தொண்டர்களிடமிருந்தே கிளம்பிவருவதுதான், தற்போது பெரும் கவனத்தை திருப்பி வருகிறது. தலித் சமூகத்தை சேர்ந்த பிரியா, மேயராக தேர்ந்தெடுக்கப்படும்போதே, சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பார்களா? என்ற கேள்வி பரவலாக எழுந்தது. அந்த கேள்வி, அன்றிலிருந்து இப்போதுவரை தொடர்ந்து உண்மையாகிவரும் நிலையில், இதற்கு ஒரு கடிவாளத்தை திமுக மேலிடம் போடுவது அவசியமாகி உள்ளது. மேயர் பதவிக்கென இருக்கும் மாண்பையும் மரியாதையையும், ஆளும் கட்சியே கடைப்பிடிக்க வேண்டும், முக்கியமாக, எதிர்க்கட்சிகளுக்கு மெல்லுவதற்கான "அவலை" தந்துவிடக்கூடாது என்பதே திமுகவினரின் வேண்டுகோளாகவும் உள்ளது.

தர்மசங்கடம்:

முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை, சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம், போன்ற விஷயங்களில் உறுதியாக இருந்துவருகிறார்.. குறிப்பாக, பெண்களின் நலனுக்காகவே பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தியும் வருகிறார். எனவே, தமிழக நலனுக்காக அரும்பாடுபட்டுவரும் நம்முடைய முதல்வர் ஸ்டாலினுக்கு எந்தவிதமான நெருக்கடியையும், தர்மசங்கடத்தையும் சொந்த கட்சியினரே தந்துவிடக்கூடாது என்பதே நம் அனைவரின் விருப்பமாக உள்ளது..!!

Related Post