சென்னை: சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விசிக துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சை திமுகவினர் மட்டுமல்லாது விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளையே கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா நீக்கப்படலாம் என சமூக வலைதளங்களில் செய்திகள் உலாவுகின்றன. மேலும் இது தொடர்பாக சீனியர்களுடன் திருமாவளவன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
தேர்தல் வியூக நிறுவனங்களை நடத்தி வந்த ஆதவ் அர்ஜுனா அரசியலில் குதிக்கப் போகிறார் என்ற தகவல் அப்போதே பேசுபொருளாக இருந்தது. பிரதான கட்சிகளை தவிர்த்து விடுதலை சிறுத்தைகளின் தன்னை இணைத்துக் கொண்டார்.
அதே நேரத்தில் விடுதலை சிறுத்தைகளின் மாநாடுகள், சமூக வலைதள பக்கங்கள் உள்ளிட்டவற்றையும் அவரது நிறுவனமே பார்த்து வந்தது. கட்சியில் எடுத்த எடுப்பிலேயே அவருக்கு துணை பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டதும் பலரை ஆச்சரியப்படுத்தியது. இந்த நிலையில் கட்சியில் சேர்ந்த சில மாதங்களில் ஆதவ் அர்ஜுனாவின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகவும், ஏற்கனவே கட்சியில் இருக்கும் சீனியர்கள் எம்பி எம்எல்ஏக்கள் பலர் அவர் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.
குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட்டணி குறித்து ஆர்வம் அர்ஜுனா பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இங்கு யாருமே பெரிய கட்சி கிடையாது. தமிழகத்தில் நாங்கள் தான் பெரிய கட்சி என்று கூறுபவர்கள் 2016 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா நின்றது போல தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்து நின்று இருக்கலாம். கூட்டணி கட்சிகள் இல்லாமல் திமுக ஜெயித்து இருக்க முடியாது" என பேசியது கூட்டணி கட்சியான திமுகவை கோபத்தில் ஆழ்த்தியது.
அவரது இந்த பேச்சு திமுக- விசிக இடையேயான கூட்டணியில் பிளவை ஏற்படுத்துவதைப் போல உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தது. சில விசிக தலைவர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக மறைமுகமாக கருத்து கூறினர். குறிப்பாக வன்னி அரசு, ரவிக்குமார், ஷா நவாஸ் உள்ளிட்ட பலர் சமூக வலைதளங்களிலும், பேட்டிகளிலும் திமுகவுடன் தான் கூட்டணி, அதனை உடைப்பது போல் பேசுபவர்களின் பேச்சை கேட்கக் கூடாது என கூறினர்.
இதற்கு விளக்கம் அளித்து அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார் விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவரான திருமாவளவன். இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா நிறுவனத்தின் சார்பில் அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டதும், அதில் திருமாவளவன் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ள போவதில்லை என திருமாவளவன் விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நேரடியாக திமுகவை விமர்சிப்பது போலவே இருந்தது ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு. திரைத்துறையில் கட்டுப்பாட்டை வைத்திருப்பது, ஊழல், வேங்கை வேல் சம்பவம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் திமுகவை மறைமுகமாக சாடி இருந்தார். மேலும் விஜய் திமுக குறித்து பேச பேச கைதட்டி உற்சாகப்படுத்தினார். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளே தற்போது அவரை விமர்சித்து வருகின்றனர்.
விஜய்க்காக வேலை பார்க்கிறார் என ஷா நவாசும் பிற நிர்வாகிகளும் விமர்சித்தனர். இந்நிலையில் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு திமுக கூட்டணிக்கு எதிராக இருப்பது உண்மைதான் என ஒப்புக் கொண்டுள்ளார் திருமாவளவன். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என கூறினார். இதற்கிடையே ஆதவ் அர்ஜுனாவை கட்சியை விட்டு நீக்க சீனியர்கள் வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே திமுக கூட்டணி குறித்தும் கட்சி குறித்தும் பொதுவெளிகளில் ஆதவ் அர்ஜுனா பேசுவது முறையல்ல, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தனர். ஆனால் கட்சியின் எதிர்காலம் கருதி ஆதவ் அர்ஜுனாவை உடன் வைத்திருக்க திருமாவளவன் விரும்பினார். ஆனால் இன்று மற்றொரு அரசியல் கட்சித் தலைவரின் முன்னிலையில் திமுக கூட்டணியை விமர்சித்து பேசியதை திமுக விரும்பவில்லை. இது தொடர்பாக திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விரைவில் ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கப்படலாம் எனவும் தொடர்பாக தீவிர ஆலோசனையில் திருமாவளவன் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.
Weather Data Source: Wettervorhersage 21 tage