சென்னை: கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பலமுறை வங்கிகள் சார்பாகவும், கிரைம் போலீசார் சார்பாகவும் அறிவுறுத்தப்பட்டே வருகிறது. எனினும், பணமோசடிகள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.. இதோ சென்னையிலும் ஒரு விநோத மோசடி நடந்துள்ளது.
உங்கள் வங்கியில் போதுமான இருப்பு இல்லாவிட்டாலும்கூட, கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்த முடியும். இது ஒரு வகையான கடன் வசதியாகும். எனினும், இந்த கடனை பின்னாளில் கட்டாயம் நீங்கள் திருப்பி செலுத்திவிட வேண்டும். இதற்கான சலுகை காலமும் உண்டு.. சலுகை காலத்தில் செலவழித்த தொகையை நீங்கள் திருப்பி செலுத்தினால், அந்த தொகைக்கு வட்டி எதுவும் வங்கி வசூலிக்காது.
ஆனால் இதற்கு கிரெடிட் கார்டுகளை நாம் தொடர்ந்து பயன்படுத்தி, செயல்பாட்டிலேயே வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, எப்போதுமே, கிரெடிட் கார்டுகளுக்கான மாத பில்லை பாதுகாத்து சேகரித்து வைத்து கொண்டால், கணக்கு சரியாக உள்ளதா என்பதை அறிய வசதியாக இருக்கும்.
கிரெடிட் கார்டு: அதேபோல, கிரெடிட் கார்டை பயன்படுத்தியதற்கு தரப்படும் பில்லில் கையெழுத்திடும் முன்பு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை சரி பார்க்க வேண்டும். ஏதாவது காலியிடங்கள் இருந்தால் அடித்துவிட வேண்டும்.. இல்லாவிட்டால் கடைக்காரர்கள் ஏதாவது ஒரு தொகையை எழுதிவிட்டு வங்கிக்கு அனுப்ப வாய்ப்புள்ளது. இவ்வளவு கவனமாக இருந்தாலும்கூட கிரெடிட் கார்டு விஷயங்களில் ஆங்காங்கே மோசடிகள் நடந்துவிடுகின்றன.
இதோ சென்னை ராயப்பேட்டையில் ஓடிபி இல்லாமலேயே, பணத்தை களவாடியிருக்கிறார்கள்.. ராயப்பேட்டை, சீனிவாச பெருமாள் சன்னதி முதல் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன்.. 42 வயதாகிறது.. இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.. கடந்த, 10 ஆண்டுகளாக இவர் கிரெடிட் கார்டினை பயன்படுத்தி வருகிறார்
பெட்ரோல்: இந்நிலையில், கடந்த 7ம் தேதி, ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் தியேட்டர் அருகே உள்ள, இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்கிற்கு சென்று தன்னுடைய பைக்கிற்கு 300 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுள்ளார்.. இதற்கான பணத்தை, கிரெடிட் கார்டு வாயிலாகவும் செலுத்தினார்.. பிறகு வீட்டிற்கு வந்து, செல்போனில் வந்த மெசேஜ்ஜை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில், அவரது கிரெடிட் கார்டில் 1.38 லட்சம் ரூபாய் பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது.
அதாவது, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட இடங்களில் 13 முறை, 10,000 ரூபாயும், 2 முறை 4,000 ரூபாயும் என மொத்தம் 1.38 லட்சம் ரூபாய் பயன்படுத்தி உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், உடனடியாக வங்கியை தொடர்பு கொண்டு சீனிவாசன் கேட்டிருக்கிறார்.. அதற்கு வங்கியில், போலீசில் இதுதொடர்பாக புகார் அளிக்கும்படி அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
அதிர்ச்சி: அதன்படியே, சைபர் கிரைம் போலீசில் சீனிவாசன் புகார் அளித்துள்ளார்.. இந்த புகாரை போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள். ரகசிய குறியீடு எண் இல்லாமலேயே, கிரெடிட் கார்டில் 1.38 லட்சம் ரூபாயை மர்மநபர்கள் எடுத்திருப்பது ஒட்டுமொத்த பேருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.