-
நமது உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு முழுக்க முழுக்க நம்மையே சாரும். அந்த வகையில் நாம் என்ன உணவுகளை சாப்பிடுகிறோம், அதில் என்னென்ன பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்வது மிக மிக அவசியம். மிகவும் சர்ச்சைக்குரிய, அதேசமயம் உலகெங்கும் பயன்படுத்தப்பட்டு வரும் செயற்கை இனிப்பானான அஸ்பார்டம் (aspartame) தற்போது ஒரு பேசும் பொருளாக மாறிவிட்டது. சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தப்படும் இந்த குறைந்த கலோரி செயற்கை இனிப்பான் பெரும்பாலான உணவுகள் மற்றும் பானங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
கோலா மற்றும் பிற உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் இந்த சர்ச்சைக்குரிய செயற்கை இனிப்பான் உலக சுகாதார மையத்தின் இன்டர்நேஷனல் ஏஜன்சி ஃபார் ரிசர்ச் ஆன் கேன்சர் (IARC) மூலமாக 'சாத்தகயமான புற்றுநோய் தூண்டி' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. அஸ்பார்டம் எந்தெந்த உணவுகளில் காணப்படுகிறது மற்றும் அவற்றை சேர்ப்பதால் என்னென்ன மாதிரியான பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை இந்த பதிவின் மூலம் பார்ப்போம்.
அஸ்பார்டம் என்றால் என்ன? அஸ்பார்டம் என்பது பல்வேறு உணவுகள் மற்றும் பானங்களில் சர்க்கரைக்கு மாற்றீடாக பயன்படுத்தப்படும் ஒரு செயற்கை இனிப்பான் ஆகும்.
அஸ்பார்டம் கொண்டுள்ள உணவுகளின் பட்டியல் - சர்க்கரை இல்லாத பானங்கள்: அஸ்பார்டம் என்பது சர்க்கரையற்ற அல்லது டயட் பானங்களில் பெரும்பாலும் இனிப்பு சுவையை சேர்க்க சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தப்படுகிறது. பல சாஃப்ட் ட்ரிங்க்ஸ், பவுடராக கிடைக்கும் ட்ரிங்ஸ் மிக்ஸ், சுவையூட்டப்பட்ட தண்ணீர் பிராண்டுகள் போன்றவை முதன்மை இனிப்பானாக அஸ்பார்டம் பயன்படுத்துகின்றன. நீங்கள் வாங்கும் உணவுப் பொருட்கள் அல்லது பானங்களில் அஸ்பார்டம் இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள, அதன் லேபிளில் 'சுகர் ஃப்ரீ', 'ஜீரோ சுகர்' அல்லது 'டயட்' போன்ற வார்த்தைகள் இருக்கிறதா என்பதை சரி பார்க்கவும்.
குறைந்த கலோரி ஸ்நாக்ஸ் வகைகள்: குறைந்த கலோரி அல்லது சர்க்கரை இல்லாத ஸ்நாக்ஸ் வகைகள் பலவற்றில் அஸ்பார்டம் சேர்க்கப்படுகிறது. சுகர் ஃப்ரீ கம், கேண்டீஸ் மின்ட் மற்றும் ஒரு சில புரோட்டின் பார்களில் கூட அஸ்பார்டம் சேர்க்கப்படுகிறது. அஸ்பார்டம் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள எப்பொழுதும் ஒரு ப்ராடக்ட்டின் ஊட்டச்சத்து தகவலை படிப்பது அவசியம்.
ஐஸ்க்ரீம் & புட்டிங்: சர்க்கரை இல்லாத தயிர், குறைந்த கொழுப்பு ஐஸ்கிரீம்கள் மற்றும் சர்க்கரையற்ற புட்டிங் போன்ற பல்வேறு லைட்டான அல்லது குறைந்த கலோரி பால் சார்ந்த பொருட்களில் அஸ்பார்டம் ஒரு பொதுவான பொருளாக சேர்க்கப்படுகிறது. ஒருவேளை இது போன்ற உணவுகளை சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், அதில் அஸ்பார்டம் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதில் கவனமாக இருக்கவும்.
சர்க்கரை இல்லாத டெசர்ட்டுகள்: ஹெல்த் கான்ஷியஸ் ஆக இருக்கக்கூடிய நுகர்வோர்களின் தேவையை பூர்த்தி செய்ய, ஒரு சில பேக்கரிகள் மற்றும் உணவு தயாரிப்பாளர்கள் சர்க்கரை இல்லாத அல்லது குறைந்த சர்க்கரை பேக் செய்யப்பட்ட உணவுகளான குக்கிகள், கேக்குகள் மற்றும் மஃபின்களில் அஸ்பார்டம் பயன்படுத்துகின்றனர்.
தானியங்கள்: ஒரு சில குறைந்த கலோரி அல்லது சர்க்கரையில்லாத தானியங்களில் கூட அஸ்பார்டம் ஒரு இனிப்பானாக சேர்க்கப்படுகிறது.
குறைந்த கலோரி காபி ஸ்வீட்னர்கள்: குறைந்த கலோரி அல்லது சர்க்கரை இல்லை என்று மார்க்கெட் செய்யப்படும் பல காபி ஸ்வீட்னர்களில் அஸ்பார்டம் காணப்படுகிறது.
நாம் அன்றாடம் உண்ணக்கூடிய உணவுகள் மற்றும் பானங்களில் என்ன மாதிரியான பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்பதில் விழிப்புடன் இருப்பது நமது வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக வழிநடத்த உதவும். எப்பொழுதும் எந்த ஒரு உணவுப்பொருளை வாங்கும் பொழுதும், அதன் லேபிளை படித்து அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் என்ன என்பதை முழுவதுமாக தெரிந்து கொண்ட பின்னரே அந்த உணவை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.
Weather Data Source: Wettervorhersage 21 tage