சென்னை: ஐயப்பன் குறித்து அவதூறாக பாடல் பாடியதாக பிரபல பாடகி இசைவாணி மீது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தன்னைப் பற்றியும், தனது சாதியைப் பற்றியும் அவதூறு பரப்புவதாக பாடகி இசைவாணி அளித்த புகாரின் பேரில் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் குறித்து அவதூறாக பாடியதாக பிரபல பாடகியான இசைவாணியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
தற்போது சபரிமலை ஐயப்பனுக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வரும் நிலையில் 'ஐ எம் சாரி ஐயப்பா.. நான் உள்ளே வந்தால் என்னப்பா" என இசைவாணி பாடிய பாடல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்ல தடை உள்ள நிலையில் அது தொடர்பாகவே இசைவாணி பாடிய பாடல் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதை அடுத்து கோவை சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இசைவாணி மீது நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் கூறியிருந்தார்.
அதே நேரத்தில் இசைவாணி 5 ஆண்டுகளுக்கு முன் பாடிய பாடலை வைத்து வேண்டுமென்றே சர்ச்சைகள் கிளப்பப்படுவதாக அவர் தரப்பு கூறுகிறது. மேலும் தனக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக இசைவாணி கூறியிருந்தார். இந்நிலையில், ஐயப்ப பக்தர்களின் மனதை புண்படுத்தியதாக இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி ஆணையர் அலுவலகத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இசைவாணி மீது புகார்கள் அளிக்கப்பட்டன.
இதற்கிடையே தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும், தனது செல்போனுக்கு ஆபாச அழைப்புகள் வருவதாக இசைவாணி கூறியிருந்தார். பிரபல இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மைய இசைக் குழுவான கேஸ்ட்லஸ் கலெக்டிவ் குழுவில் பாடகியாய் இருக்கிறார் இசைவாணி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தன்னைப் பற்றியும், தனது சாதியைப் பற்றியும் அவதூறு பரப்புவதாக பாடகி இசைவாணி அளித்த புகாரின் பேரில் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மன்னடி பகுதியில் வசிக்கும் கானா பாடகியான இசைவாணி சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தன்னைப் பற்றியும் தனது சாதியை பற்றியும் சமூக வலைதளங்களில் சிலர் அவதூறாக பேசுவதாக குறிப்பிட்டிருக்கிறார். மேலும் தொலைபேசி மூலமாக தனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும், தனது புகைப்படங்களை மாஃர்பிங் செய்து பரப்புவதாகவும், சமூக வலைதளங்களில் தன்னை பற்றி அவதூறு பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளார். இதை அடுத்து சென்னை வடக்கு மண்டல சைபர் கிரைம் காவல்துறையினர் இசைவாணி அளித்த புகாரின் பெயரில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.