துபாய்: அமீரகம், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் விசா விதிகளை, குடியுரிமை விதிகளை மாற்ற தொடங்கி உள்ளன. இதனால் இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது, பணி நிமித்தமாக இடம் மாறுவது , ஏன் சுற்றுலா செல்வதே சிக்கலாக மாறி உள்ளது.
அமீரகத்தின் ரூல்ஸ்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புதிய சுற்றுலா விசா கொள்கையை அறிமுகம் செய்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பொதுவாக கடுமையான சுற்றுலா விசா கொள்கையை கொண்டது. தற்போது தங்கள் கொள்கைகளை மேலும் கடினமாக்கி உள்ளது. புதிய விதிமுறையின் கீழ், சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய ஹோட்டல் முன்பதிவுச் சான்று, விமான டிக்கெட்டுகள் மற்றும் திரும்புவதற்கான டிக்கெட்டுகளை வளைகுடா நாட்டின் குடியேற்றத் துறையின் போர்ட்டலில் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதலாக, பயணிகள் துபாயில் தங்குவதற்கு போதுமான வங்கி இருப்பு இருப்பதையும் நிரூபிக்க வேண்டும். தனிநபர்கள் தங்களுடைய கடைசி மூன்று மாத பேங்க் ஸ்டேட்மெண்ட்டுகளை வழங்க வேண்டும். இதில் குறைந்தபட்சம் ₹50,000 இருக்க வேண்டும். பான் கார்டு விவரங்களை வழங்க வேண்டும். கடன் வாங்கி நாட்டிற்கு ஓடி வருபவர்களை தடுக்க இந்த முறை. அங்கே ஹோட்டல்களில் தங்குவதற்குத் முன்பதிவு செய்ய வேண்டும். அதோடு போதிய பணம் வைத்திருக்க வேண்டும் என்று பல விதிகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
முன்னதாக, துபாய்க்கான சுற்றுலா விசா விண்ணப்பங்களில் கிட்டத்தட்ட 99 சதவீதம் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் தற்போது, நன்கு தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் கூட நிராகரிக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வளைகுடா நகரத்திற்குச் செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு UAE சமீபத்தில் புதிய மற்றும் கடுமையான தேவைகளை அறிமுகப்படுத்தியது. இந்த விதிமுறைகளின்படி, சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய ஹோட்டல் முன்பதிவு விவரங்களையும், திரும்ப டிக்கெட்டுகளையும் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அவர்களது உறவினர்களுடன் தங்கியிருப்பவர்களுக்கு, தங்குமிடத்திற்கான சான்றும் தேவை. அதாவது ஒருவருக்கு மட்டுமன்றி துபாயில் உங்களுடன் பயணிக்கும் எல்லோருக்கும் சான்று தேவை.
தினசரி விசா நிராகரிப்புகள்: முந்தைய விசா நிராகரிப்பு விகிதமான 1-2 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது விசா நிராகரிப்பு 5-6 சதவிகிதமாக உயர்ந்து உள்ளது. சுற்றுலாப் பயணிகள் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 10 விண்ணப்பங்களை செய்தாலும் கூட அவை நிராகரிக்கப்படுகின்றன.
அமெரிக்கா முடிவு: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றுள்ள நிலையில் அமெரிக்காவில் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்சிப் முறையில் மாற்றத்தை கொண்டு வர அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்ஷிப் மூலம் பலன் அடைந்த பல ஆயிரம் இந்தியர்கள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் ஏற்கனவே விசா கிடைப்பதில் சிக்கலை சந்தித்து வருகின்றனர். அதோடு இல்லாமல் கிரீன் கார்டு பெறுவதிலும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். மற்ற நாட்டினருக்கு கிடைக்கும் அளவிற்கு கூட இந்தியர்களுக்கு எச்1 பி விசா தொடங்கி மற்ற விசாக்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில்தான் டிரம்ப் அமெரிக்காவில் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்சிப் முறையில் மாற்றத்தை கொண்டு வர அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவரின் தேர்தல் அறிக்கையில் இது இடம்பெற்றுள்ளது. டிரம்ப் ஆட்சிக்கு வரும் முதல் நாளே.. அதாவது ஜனவரி 20ம் தேதியே அமலுக்கு வரும் என்கிறார்கள்.
இந்த புதிய விதிப்படி.. அமெரிக்காவில் பிறக்கும் வந்தேறி பிரிவை சேர்ந்த குழந்தைகளுக்கு இனி ஆட்டோமேட்டிக் சிட்டிசன்சிப் கிடையாது. அதாவது இவர்களில் ஒருவர் கண்டிப்பாக அமெரிக்கராக இருக்க வேண்டும். அல்லது அமெரிக்காவில் ஏதாவது ஒரு கிரீன் கார்டு அல்லது அதிகாரபூர்வ இருப்பிட சான்று வைத்து இருக்க வேண்டும்.
இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் என்று டிரம்ப் மிக முக்கியமான முடிவை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்ஷிப் மூலம் பலன் அடைந்த பல ஆயிரம் இந்தியர்கள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.