சென்னை: உலகம் முழுவதும் திடீரென்று வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்கள் முடங்கி உள்ளன. இதனால் பயனாளர்கள் அவதியடைந்தனர்.
நாம் அனைவரும் பல்வேறு சமூக வலைதள பக்கங்களை பயன்படுத்தி வருகிறோம். தற்போது ஒருவரையொருவர் இந்த செயலிகள் வழியாக தான் அதிகமாக நாம் தொடர்பு கொண்டு வருகிறது.
குறிப்பாக கூற வேண்டும் என்றால் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட வலைதளங்கள் முக்கியமானதாகும். நம்மில் பலரும் இந்த செயலிகளை தான் பயன்படுத்தி வருகிறோம்.
இந்நிலையில் தான் இன்று இரவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்கள் திடீரென்று முடங்கி உள்ளன. இதனால் பல பயனாளர்கள் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். அதாவது பேஸ்புக்கை எடுத்து கொண்டால் உள்ளே நுழைவதில் பயனாளர்கள் சிரமப்பட்டனர். மேலும் போட்டோ, வீடியோ போஸ்ட் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமை பொறுத்தவரை போஸ்ட்டை அப்டேட் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதேபோல் வாட்ஸ்அப்பிலும் போட்டோ, வீடியோ அனுப்புவதில் பலரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இதையடுத்து எக்ஸ் பக்கத்தில், #Instagramdown என்ற ஹேஷ்டேக் டிரெண்ட்டிங் ஆனது.
இந்த பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட 3 சமூக வலைதளங்களும் மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த பிரச்சனையால் மெட்டா நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
இதுதொடர்பாக மெட்டா நிறுவனம் நள்ளிரவு 12.18 மணிக்கு தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛தொழில்நுட்ப பிரச்சனையால் சில பயனாளர்கள் செயலிகளை பயன்படுத்த முடியாத நிலையை எதிர்கொண்டுள்ளனர். இதுபற்றி நாங்கள் அறிந்துள்ளோம். முடிந்தவரை விரைவாக இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம். தற்போதைய சிரமத்துக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்'' என கூறப்பட்டுள்ளது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்பில் இப்படி பொதுமக்கள் பிரச்சனைகளை எதிர்கொள்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பலமுறை இதுபோன்ற பிரச்சனைகளை மக்கள் சந்தித்து இருக்கின்றனர். அதன்பிறகு சிறிது நேரத்தில் பிரச்சனை என்பது சரிசெய்யப்பட்டு மீண்டும் செயலிகள் வழக்கம்போல் செயல்படும். இதனால் தற்போதைய பிரச்சனையும் விரைவில் சரிசெய்யப்பட்டு விடும் என்பதால் பயனாளர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.