அதிமுக 'குரங்கு கையில் கிடைத்த பூமாலை'..ஜெ.,வுக்கு மீண்டும் பதவி! பரபரப்பை பற்ற வைத்த பன்னீர்செல்வம்

post-img

சென்னை: இரட்டை இலை சின்னம் வழங்குவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் கருத்தையும் கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உற்சாகம் அடைந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டியுள்ள ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவுக்கு மீண்டும் அதிமுகவில் பதவி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பதவி ஏற்றிருக்கிறார்.

இந்த நிலையில் கட்சி சின்னம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் ஓபிஎஸ், சசிகலா தரப்பால் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கிறது. ஆனாலும் கட்சியினரின் விருப்பப்படி எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்றது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது.
அதே நேரத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அது நீதிமன்றம் வரை வந்திருக்கிறது. திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர், உள்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்னை தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டுமெனவும் உத்தரவிட்டனர். இதனால் உற்சாகமடைந்துள்ளது ஓபிஎஸ் தரப்பு நீண்ட நாட்களுக்கு பிறகு சற்றே தங்களுக்கு நிம்மதியளிக்கும் தீர்ப்பு கிடைத்துள்ளதால் மீண்டும் அதிமுகவில் சில சீனியர்களுக்கு தூண்டில் போட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் இன்று திடீரென அதிமுக தொண்டர் மீட்பு குழுவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன், பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது. மதுரை சென்னையில் மாநாடு நடத்துவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறத. குறிப்பாக ஜெயலலிதாவுக்கு மீண்டும் பதவி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முக்கியமாக ஜெயலலிதாவுக்கு மீண்டும் பதவி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதுதான் ஹைலைட்டே..
தீர்மானம் 1 : பெஞ்சல் புயல், திருவண்ணாமலை நிலச்சரிவு, மற்றும் கழிவுநீருடன் கூடிய குடிநீரை பருகி உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

தீர்மானம் 2: அதிமுகவின் பொதுச்செயலாளராக கிட்டத்தட்ட 30 வருடங்கள் பதவி வகித்து, இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக அதிமுகவை உருவாக்கிய அம்மா அவர்களை மீண்டும் பொதுச்செயலாளராக நியமிக்க தீர்மானம்.
தீர்மானம் 3: அதிமுக 'குரங்கு கையில் கிடைத்த பூமாலை' போல சிக்கித் தவிப்பதை தொண்டர்களின் துணையோடு முறியடித்து, தொண்டர்களின் இயக்கமாக மாற்றிட சூளுரை.
தீர்மானம் 4: 'அதிமுக தலைமையை தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்' என்ற எம்ஜிஆர் வகுத்த விதியை நிகர்ந்தெடுக்க வேல்
தீர்மானம் 5: நீட் தேர்வு ரத்து, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம், மருத்துவர்களுக்கு பதவி, ஊதிய உயர்வு, மாதமொருமுறை மின்கட்டணம் என அனைத்திலும் மாறி மாறி நிலைபாட்டை எடுத்து வரும் திமுக அரசை 2026 இல் வீட்டுக்கு அனுப்பி, அம்மா அவர்களின் ஆட்சியை அமைக்க சூளுரை.
தீர்மானம் 6: சொத்து வரி, குடிநீர் வரி, மின்கட்டணம், பதிவுக் கட்டணம், முத்திரைக் கட்டணம், வாகனக் கட்டணம் என அனைத்தையும் உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசை ஆட்சியில் இருந்து அகற்றிட உறுதியேற்பு.
தீர்மானம் 7 : அரசு துறையிலுள்ள 3 1/2 இலட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும், 2 இலட்சம் புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்து, வெறும் 35,000 பணியிடங்களை மட்டுமே நிரப்பி, மக்களின் நலனையும் இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ள திமுக அரசிற்கு கடும் கண்டனம்.
தீர்மானம் 8: மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதில் இரட்டை வேடம் போடும் திமுக அரசிற்கு கடும் கண்டனம்.
தீர்மானம் 9: தமிழர்களின் உரிமையான காவிரி, முல்லை, பெரியாறு நதிநீர் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்காத திமுக அரசிற்கு கடும் கண்டனம்.
தீர்மானம் 10: கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தராமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கும் திமுக அரசிற்கு கடும் கண்டனம்
தீர்மானம் 11: வளர்ச்சியடைந்த மாநிலங்களுக்கு கூடுதல் நிதி பகிர்வை வழங்கவேண்டுமென மத்திய அரசிற்கு வலியுறுத்தல்" ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Related Post