அம்பேத்கர் குறித்த அமித்ஷா சர்ச்சை பேச்சு- காங்கிரஸை அம்பலப்படுத்தியதாக பிரதமர் மோடி வக்காலத்து!

post-img
டெல்லி: அண்ணல் அம்பேத்கர் குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் விமர்சனம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்துள்ளார். அண்ணல் அம்பேத்கருக்கு காங்கிரஸ் செய்த துரோகங்கள், இருட்டடிப்புகளைத்தான் மத்திய அமைச்சர் அமித்ஷா ராஜ்யசபாவில் அம்பலப்படுத்தியதாகவும் அம்பேத்கரை மையப்படுத்தியே மத்திய பாஜக அரசு செயல்படுவதாகவும் தமது சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கினர். நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷாவினர் விமர்சனம் குறித்து தமது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்த பிரதமர் மோடியின் பதிவு: அண்ணல் அம்பேத்கருடன் தொடர்புடைய ஐந்து புனிதத் தலங்களை மேம்படுத்தியதும் பாஜக அரசுதான். அம்பேத்கரின் சைத்ய பூமி சர்ச்சைக்கு தீர்வு கண்டதும் நாங்கள்தான். அந்த இடத்துக்கு சென்று நான் பிரார்த்தனை செய்திருந்தேன். டெல்லியில் அம்பேத்கர் கடைசி நாட்களை கழித்த 26, அலிபூர் சாலை வீட்டை சீரமைத்ததும் பாஜக அரசுதான். இங்கிலாந்து நாட்டின் லண்டனில் அம்பேத்கர் வசித்த வீட்டை மத்திய அரசுதான் விலைக்கு வாங்கியது. அம்பேத்கருக்கான முழு மரியாதையும் எங்களது அரசு வழங்கி வருகிறது. அண்ணல் அம்பேத்கரின் அளப்பரிய பணிகளுக்காகவே நாங்கள் இதனை செய்து வருகிறோம். இந்த நாட்டில் 25 கோடி மக்களை வறுமையின் பிடியில் இருந்து விடுதலை செய்திருக்கிறோம். தலித், பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி இருக்கிறோம். மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் அனைத்தும் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கானதுதான். நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கரை இழிவுபடுத்திய- அவமானப்படுத்திய காங்கிரஸின் கடந்த கால கறுப்புப் பக்கங்களைத்தான் அம்பலப்படுத்தினார். தலித்- பழங்குடி மக்கள், காங்கிரஸ் அரசுகளில் புறக்கணிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் தலித்துகள்- பழங்குடிகள் படுகொலை செய்யப்பட்டதை அவர்களால் மறைத்துவிட முடியாது. காங்கிரஸ்தான் அம்பேத்கரை ஒரு முறை அல்ல.. இரு முறை தேர்தலில் தோற்கடித்தது. அம்பேத்கருக்கு எதிராக பண்டித ஜஹவர்லால் நேருதான் பிரசாரம் செய்தார். அண்ணல் அம்பேத்கரின் மரியாதையை இழக்கச் செய்தவர் நேருதான். அண்ணல் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது தர மறுத்ததும் காங்கிரஸ்தான். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அம்பேத்கர் படத்தை வைக்க மறுத்ததும் காங்கிரஸ்தான். அம்பேத்கரை அவமதித்து இழிவுபடுத்து மாபெரும் தவறு செய்ததும் காங்கிரஸ்தான். ஆனால் இன்று அம்பேத்கரை கொண்டாடுவதைப் போல காங்கிரஸ் கட்சி நாடகமாடுகிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Related Post