சென்னை: நானும் ஆம்ஸ்ட்ராங்கும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அப்படியிருக்கும் போது அவரை நான் கொல்வேனா என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் என ரவுடி நாகேந்திரன் உருக்கமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரவுடி நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத்தாமன் உள்பட 28 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஏற்கெனவே திருவேங்கடம் என்ற ரவுடி, தனது ஆயுதங்களை அடையாளம் காட்ட சென்ற போது போலீஸாரை தாக்கிய போது தற்காப்புக்காக அவர் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதனால் அவர் இறந்துவிட்டார். இந்த நிலையில் மற்ற 27 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது ரவுடி நாகேந்திரன், நானும் ஆம்ஸ்ட்ராங்கும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். அப்படியிருக்கையில் அவரை நான் கொல்வேனா என உருக்கமாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பின் வழக்கறிஞரை நியமிக்க நீதிபதி , கால அவகாசம் வழங்கினார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னையில் ஒரு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே சிறையில் இருந்த ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், வழக்கறிஞர் அருள், ராமு, திருமலை, மணிவண்ணன், சிவா, அப்பு என்ற விஜய், கோழி என்ற கோகுல், சந்தோஷ், செல்வராஜ், அஞ்சலை, பொற்கொடி, மலர்கொடி என மொத்தம் 28 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை செம்பியம் போலீஸார் எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். இந்த குற்றப்பத்திரிகையின் நகல் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு கடந்த 29ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ரவுடி நாகேந்திரன் உள்பட 27 பேரும் முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ரவுடி நாகேந்திரன், நான் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளேன். என் மீது பொய்யாக இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளனர் என தெரிவித்த நாகேந்திரன், தனக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதால் தன்னை வேலூர் சிறையிலிருந்து புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் எங்களுக்காக வழக்கறிஞர்களை நியமிக்க முடியவில்லை. அப்படியே நியமித்தாலும் வழக்கறிஞர்களை மிரட்டுகிறார்கள் என நீதிபதியிடம் புகார் தெரிவித்தார். இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ரவுடி நாகேந்திரன், "நானும் ஆம்ஸ்ட்ராங்கும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். அப்படியிருக்கையில் அவரை நான் கொல்வேனா" என உருக்கமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பின் வழக்கறிஞரை நியமிக்க நீதிபதி , கால அவகாசம் வழங்கினார்.