இந்தியாவின் செல்வம் பகிர்ந்தளிக்கப்படும் பேச்சு- ராகுல் காந்தி ஜன.7-ல் ஆஜராக பரேலி கோர்ட் நோட்டீஸ்!

post-img
டெல்லி: ஜாதிவாரி மக்கள் தொகை, நிதி விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு இந்தியாவின் செல்வம் பகிர்ந்தளிக்கப்படும் என பேசியது தொடர்பான வழக்கில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜனவரி 7-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உ.பி. பரேலி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ராகுல் காந்தியின் பேச்சு உள்நாட்டு யுத்தத்தைத் தூண்டும் வகையில் இருப்பதாக குற்றம்சாட்டி தொடரப்பட்ட வழக்கில் பரேலி நீதிமன்றம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. லோக்சபா தேர்தலின் போது ஹைதராபாத்தில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆய்வின் மூலம் தலித்துகள், பழங்குடிகள் மற்றும் அனைத்து ஜாதிகளைச் சேர்ந்த ஏழை மக்கள் மற்றும் சிறுபான்மையினர் இந்தியாவில் தங்கள் பங்கேற்பு எவ்வளவு என்பதை அறிந்து கொள்வார்கள். இதற்குப் பிறகு நாங்கள் நிதி மற்றும் நிறுவன ஆய்வு நடத்தி இந்தியா உண்மையில் யாருடைய கைகளில் உள்ளது என்பதைக் கண்டுபிடிப்போம். இந்த வரலாற்று நடவடிக்கைக்குப் பிறகு நாங்கள் ஒரு புரட்சிகர நடவடிக்கை எடுப்போம என ராகுல் காந்தி பேசியிருந்தார். ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை வலியுறுத்தும் வகையில் ராகுல் இப்படி பேசியிருந்தார். ராகுல் காந்தியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையானது. மக்களின் சொத்துகளை முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் கொடுத்துவிடப் போகிறது என பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் விமர்சித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. லோக்சபா தேர்தல் களத்தில் ராகுல் காந்தியின் பேச்சை பாஜக ஆயுதமாக கையில் எடுத்திருந்தது. இது தொடர்பாக உத்தரப்பிரதேச மாநிலம் எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமம்ன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. பங்கஜ் பதக் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கில், உள்நாட்டு யுத்தத்தை தூண்டும் வகையில் ராகுல் காந்தி பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் சிறபு நீதிமன்றம் ராகுல் காந்திக்கு எதிரான இந்த மனுவை டிஸ்மீஸ் செய்தது. இதனையடுத்து பரேலி மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த பரேலி நீதிமன்றம், ராகுல் காந்தி ஜனவரி 7-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது..

Related Post