சென்னை: திண்டுக்கல் அருகே நடைபெற்ற வருமான வரி சோதனையில், தொழிலதிபர் ஒருவர் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அண்ணாமலையின் உறவினர் என தகவல் வெளியானது. இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சக்கரபாணி உள்ளிட்ட பலரும் தனது உறவினர்தான் என கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டியை சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். அதேபோல் செங்கல்சூளையும் வைத்து தொழில் செய்து வருகிறார். இதுதவிர சீட்பண்ட் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் சீட்பண்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சத்திரப்பட்டியில் உள்ள செந்தில்குமார் இல்லத்தில் 6 காரில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 18ஆம் தேதி காலை முதல் 4 நாட்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
சத்திரபட்டி செந்தில் குமார்:
அதில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்த செந்தில்குமாருக்கு தொடர்புடைய இடங்களில் 4 நாட்கள் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.10 கோடிக்கு மேல் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ. 240 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அவர், வரி ஏய்ப்பு செய்ததிற்கான சொத்து, முதலீடு ஆவணங்கள் சோதனையின் போது சிக்கியதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பாஜக அண்ணாமலை:
இதற்கிடையே சத்திரப்பட்டி செந்தில்குமார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உறவினர் என தகவல் வெளியானது. இதற்கு பதில் அளித்துள்ள அண்ணாமலை அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சக்கரபாணி உள்ளிட்ட பலரும் தனது உறவினர்தான் என கூறியுள்ளார். ”வருமான வரித்துறை அதிகாரிகள் ஒட்டன்சத்திரம் அருகே ஒருநபரின் இல்லத்தில் சோதனை செய்து உள்ளனர். அவர் எனது தூரத்து உறவினர் தான். எங்கள் சொந்தக்காரங்களுக்கு அவரது குடும்பத்தில் இருந்து பெண் எடுத்து உள்ளோம்.
செந்தில்பாலாஜி, சக்கரபாணி:
உதாரணமாக நானும் செந்தில் பாலாஜியும் உறவினர்கள்தான். நானும் செந்தில் பாலாஜியும் ஒரே கோயிலுக்கு செல்கிறோம். நானும் ஜோதிமணி அக்காவும் உறவினர்கள், நானும் சக்ரபாணி அண்ணும் உறவினர்கள், நானும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் எனது உறவினர்தான்.
வருமான வரித் துறை:
இதை ஒரு லாஜிக்காக எடுத்து அரசியல் பேசினால் எல்லோருமே உறவினர்கள்தான் என்று வரும். ரெய்டு நடந்தது என்னுடைய குடும்பமா? ரத்த சொந்தமா? என்றால் நீங்கள் கேட்பதில் நியாயம் உள்ளது. கோவையில் வருமான வரித் துறை சென்ற ஆண்டு செய்த சோதனையில் எனக்கு பாதிப் பேர் உறவினர்கள்தான். இதுவரை வருமான வரித் துறைக்கு நான் போன் செய்ததே இல்லை.
நெருக்கம்:
நான் வருமான வரித் துறைக்கு போன் செய்து 'அவர் எனது உறவினர் அங்கு செல்லாதீர்கள்’ என்றா சொல்ல முடியும். அரசியலில் வருவதற்கு முன் செந்தில் பாலாஜி எனது வீட்டில் என்னுடன் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டு சென்று உள்ளார். ஆனால் அதற்காக நான் தயவு தாட்சணை பார்ப்பது இல்லை” என கூறினார்.