சென்னை வன வாணி பள்ளியில் மாணவர்களுக்கு தாங்கு திறன் சோதனை! பெற்றோர்கள் புகார்

post-img

சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள வனவாணி எனும் தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு அனுமதியின்றி தாங்கு திறன் சோதனை நடத்தப்பட்டதாக புகார் எழுந்திருக்கிறது. புகாரின் அடிப்படையில் பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
தாங்கு திறன் சோதனை என்றால் என்ன?: பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்போது மனிதர்கள் எந்த அளவுக்கு சோதனையை தாங்குகிறார்கள் என்பதை அளவிடுவதுதான் தாங்கு திறன் சோதனை எனப்படுகிறது. வனவாணி பள்ளியில் மாணவர்களை ஓட வைத்து அவர்களுக்கு எவ்வளவு வியர்க்கிறது, வெளியேறும் வியர்வையின் அளவு என்ன என்பது குறித்தும், வியர்வை சோதனைக்காகவும் எடுத்துச்செல்லப்பட்டிருப்பதாகவும் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சஸ்பெண்ட்: இன்னும் சொல்லப்போனால், மாணவர்களுக்கு மாத்திரை உள்ளிட்டவை வழங்கப்பட்டதாகவும் பேச்சு அடிப்பட்டது. ஆனால் இதனை பள்ளி நிர்வாகம் மறுத்திருக்கிறது. இந்நிலையில் பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். மீண்டும் அவர் பணிக்கு வரும்போது வேறு இடத்திற்கு மாற்றப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெற்றோர்களின் புகாரை தொடர்ந்து நாளை மறுநாள் பள்ளியில் ஆய்வு நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விளக்கம்: இனி வரும் காலங்களில் பெற்றோரின் அனுமதியின்றி இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படாது என்றும், உரிய அனுமதி பெறப்படும் எனவும் பள்ளி நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டிருக்கிறது எனவும் பள்ளி நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.

Related Post