சென்னை: நடிகர் அல்லு அர்ஜூன், நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. ஹைதராபாத்தில் புஷ்பா 2 சிறப்புக் காட்சியைப் பார்ப்பதற்காக வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மும்பையில் உள்ள தியேட்டரில் நிகழ்ந்த சம்பவத்தால் ரசிகர்கள் அலறியடித்து வெளியேறியுள்ளனர். இதனால், படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
புஷ்பா படம் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்ததோடு மட்டுமல்லாமல், வசூலையும் வாரிக் குவித்தது. அதைத்தொடர்ந்து, இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் புஷ்பா இரண்டாம் பாகம் திரையரங்குகளில் டிசம்பர் 5 ஆம் தேதி காலை ரிலீஸானது. புஷ்பா 2 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் சாதனை முறியடித்து முதல் நாளிலேயே 175 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் முதல் நாள் வருமானம் 135 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 படத்தின் சிறப்புக் காட்சி டிசம்பர் 4 ஆம் தேதி இரவு 9.40 மணிக்கு திரையிடப்பட்டது.
இந்த சிறப்புக் காட்சியைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்தனர். அப்போது, எந்தவித முன்னறிவிப்புமின்றி நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் படக்குழுவினர் தியேட்டருக்கு விசிட் அடித்தனர். அப்போது, அல்லு அர்ஜூன் வந்திருப்பதை அறிந்த மக்கள் அவரைப் பார்ப்பதற்காக முந்தியடித்துக் கொண்டு சென்றனர்.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 37 வயதான ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவருடைய 13 வயது மகன் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, எந்தவித முன்னறிவிப்பும் செய்யாமல் வந்த நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் படக்குழுவினர் மற்றும் திரையரங்கு மீது ஹைதராபாத் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இப்பிரச்னை தெலங்கானாவில் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இனிமேல் தெலங்கானா மாநிலத்தில் எந்தவொரு படத்துக்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்படாது என்று அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டது. இப்பிரச்னைகளுக்கிடையே மும்பையில் உள்ள தியேட்டர் ஒன்றில் படம் ஓடிக் கொண்டிருக்கும்போதே ஸ்பிரே அடிக்கப்பட்டதால் தொண்டை எரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகள் ரசிகர்களுக்கு ஏற்பட்டதால் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
மும்பையில் உள்ள கெயிட்டி கேலக்ஸி என்ற திரையரங்கில் புஷ்பா 2 படம் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தைக் காண்பதற்காக ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் வந்துள்ளனர். இந்நிலையில், படம் ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென ஸ்பிரே அடிக்கப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்களுக்கு தொண்டை எரிச்சல், இருமல் உள்ளிட்ட அசெளகரியங்கள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ரசிகர்கள் தியேட்டரில் இருந்து அவசர அவசரமாக வெளியேறத் தொடங்கினர். இதனால், புஷ்பா 2 படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
Weather Data Source: Wettervorhersage 21 tage