இஸ்ரேல் - காசா போர் நிறுத்தம் சாத்தியமா.. ஆண்டனி பிளிங்கனை சந்திக்கும் தலைவர்கள்!..

post-img

டெல் அவிவ்: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் 29வது நாளாக இன்றும் தாக்குதலை தொடுத்துள்ள நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக சவுதி அரேபியா, கத்தார், எகிப்து, ஜோர்டன் மற்றும் பாலஸ்தீனத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனை இன்று சந்திக்கின்றனர்.


கடந்த 7ம் தேதியன்று அதிகாலையில் மத்திய கிழக்கில் திடீரென குண்டு சத்தங்கள் கேட்க தொடங்கின. இதற்கு காரணம் ஹமாஸ் படைகள்தான். பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து மீட்க வேண்டும் என்று கூறி ஹமாஸ், காசாவிலிருந்து சுமார் 5000 ராக்கெட்களை ஒரேநேரத்தில் வீசியது. கடந்த காலங்களில் ஹமாஸுக்கும், இஸ்ரேலுக்கும் மோதல் போக்கு நீடித்து வந்ததால், இப்படியான தாக்குதல் நடக்கும் என ஏற்கெனவே இஸ்ரேல் கணித்திருந்தது.


எனவே இதை தடுக்க அயன் டோம் எனும் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியிருந்தது. இது இஸ்ரேல் மீது பாயும் ராக்கெட்டுகளை வானத்திலிலேயே வழி மறித்து தாக்கி அழித்துவிடும். இருப்பினும் ஒரே நேரத்தில் அதிக அளவில் ராக்கெட்கள் பாய்ந்ததால் அயன் டோம் பாதுகாப்பையும் மீறி இஸ்ரேலுக்குள் விழுந்தன. இதில் 1,400 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இஸ்ரேல், காசாமீது கடுமையான தாக்குதலை தொடுத்தது.


இந்த தாக்குதல் 29வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. அதேபோல இஸ்ரேல் ராணுவத்திற்கு சவால்விடும் வகையில், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு மோதலில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலின் தாக்குதலை அனைத்து இஸ்லாமிய நாடுகளும் கண்டித்திருக்கின்றன. தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன. ஐநா சபையிலும் போர் நிறுத்தம் குறித்து ஜோர்டன் கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனாலும் இஸ்ரேல் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.


இப்படி இருக்கையில் போர் நிறுத்தம் தொடர்பாக சவுதி அரேபியா, கத்தார், எகிப்து, ஜோர்டன் மற்றும் பாலஸ்தீனத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் ஆன்டனி பிளிங்கனை இன்று சந்திக்கின்றனர். இஸ்ரேலின் தாக்குதலில் 9 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில், இப்போர் மத்திய கிழக்கு முழுவதும் பரவுவதை தடுக்கும் நோக்கில் இந்த சந்திப்பு நடத்தப்படுகிறது.


ஏற்கெனவே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கு நாடுகள் அணி திரண்டுள்ளன. அதேபோல பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் குரல் எழுப்ப தொடங்கியுள்ளன. மத்திய தரைக்கடலில் இரண்டாம் உலகப்போரின் போது நிறுத்தப்பட்ட கப்பலின் எண்ணிக்கையை விட தற்போது அதிக போர் கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. எனவே இந்த பதட்டத்தை இப்பேச்சுவார்த்தை தனிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Post