கருங்காலி மாலை.. செவ்வாய் தோஷம்.. கடன் பிரச்சினை.. யார் அணிந்தால் யோகம்?

post-img

சென்னை: கருங்காலி மாலை அணிவது இப்போது பேஷனாக மாறி வருகிறது. கருங்காலி கெட்ட சக்திகளிடம் இருந்து நம்மை பாதுகாக்கும். எதிர்மறை எண்ணங்களை தடுத்து நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும். எந்த ராசிக்காரர்கள் கருங்காலி மாலையை அணிந்தால் யோகம் என்று பார்க்கும் அதே நேரத்தில் போலியான கருங்காலி மாலைகளை எப்படி கண்டு பிடிப்பது என்று பார்க்கலாம்.


இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதல், தனுஷ், சிவகார்த்திகேயன் என பல நடிகர்கள் கருங்காலி மாலை சமீபத்தில் பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம். பல கோவில்களில் இன்றைக்கு கருங்காலி மாலையை வியாபாரமாகவே செய்யத் தொடங்கி விட்டனர். கருங்காலி இருக்கும் இடத்தில், தெய்வீக சக்தி சற்று அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே பணம் மற்றும் செல்வம் பெருக கருங்காலி மாலையை அணியலாம் அல்லது அதன் குச்சிகளை பூஜை அறையில் வைக்கலாம். குல தெய்வத்தின் அருளை முழுமையாகப் பெற்ற பெருமை கருங்காலி மாலைக்கு உண்டு.


ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட மரம் ராசியாக இருக்கும். அனைத்து ராசிகாரர்களுக்கும், அனைத்து நட்சத்திரகாரர்களுக்கும் உகந்த மரங்களில் ஒன்று தான் கருங்காலி. மிருகசீரிஷம் மற்றும் திருவாதிரை நட்சத்திரத்தின் மரம் கருங்காலி மரம். கருங்காலி மரம் ​முருகனுக்கு உகந்த மரமாகும். அதாவது செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் பெற்றதாக பார்க்கப்படுகிறது. உறுதியான, வலுவான அனைத்து பொருள்களுக்கும் காரகர் நமது செவ்வாய் பகவான் தான். செவ்வாய் என்றால் சொத்து, சகோதரம், ரத்தம், வீரம், தைரியம், வீரியம், கடன், இனம் புரியாத நோய் போன்றவற்றை குறிக்கும். செவ்வாய் பெண் ஜாதகத்தில் கணவரையும் ஆண் ஜாதகத்தில் சகோதரத்தைப் பற்றியும் கூறும் கிரகமாகும்.


ஜாதகத்தில் செவ்வாய் வலிமை குன்றியவர்களுக்கு ஏற்படும் நோய், விபத்து, கடன், சொத்து பிரச்சினை, திருமணத் தடை மண வாழ்வில் நிம்மதியின்மை போன்ற அசவுகரியங்களை கருங்காலி மாலை குறைக்கிறது. கருங்காலியில் செவ்வாய் கிரகத்தின் சுப கதிர்வீச்சுக்கள் அதிகமாக இருப்பதால் இதனை பயன்படுத்த செவ்வாய் பகவானால் ஏற்படக் கூடிய அனைத்து துன்பங்களும் நீங்கும். கருங்காலி மாலை அணிவதால் குலதெய்வ வழிபாடு தடை, பித்ரு தோஷம், செவ்வாய் கிரக தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. சொத்து பிரச்சினை, சகோரதர்களிடையே உள்ள கருத்து வேறுபாடு நீங்கும். ஜோதிட சாஸ்திரப்படி ஜனன கால ஜாதகத்தில் செவ்வாய் சுப வலிமை பெற்றவர்களுக்கு செவ்வாய் கிரகத்தின் நல்ல கதிர் வீச்சுக்கள் நன்மையை தருகிறது.


அதனால் இந்த கருங்காலி மர கட்டையால் செய்யப்பட்ட மாலையை மேஷம், விருச்சிகம், மிதுன ராசிகளில் உள்ள சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அணியலாம். மிருகசீரிஷம், திருவாதிரை, அஸ்வினி, பரணி, விசாகம், அனுஷம், கேட்டை, திருவோணம், அவிட்டம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் இந்த கருங்காலி மாலையை அணிவது நன்மை தரும் என கூறப்படுகிறது. திருவாதிரை நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் செங்கருங்காலி மாலை அணிவது கூடுதல் நன்மை தரும். கருங்காலி மேஷம் ராசி, விருச்சிகம் ராசி, மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம், திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், செவ்வாய்க்கிழமை, 9, 18, 27-ம் தேதிகளில் பிறந்தவர்களுக்கும் மிகவும் உகந்தது. கருங்காலி மாலை அணிவது இப்போது ட்ரெண்ட் ஆகி வருவதால் கடைகள், ஆன்லைன் என பலவற்றிலும் கருங்காலி மாலைகள், பிரேஸ்லெட் உள்ளிட்ட கருங்காலி மரத்தால் செய்யப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வர துவங்கி விட்டன. அது உண்மையான கருங்காலி மாலைதானா என்று பலருக்கும் தெரியாது அதிக விலை கொடுத்து கருங்காலி மாலையை வாங்கி பலரும் ஏமாறுகிறார்கள்.


நீங்கள் வாங்கும் கருங்காலி மாலை உண்மையானது தானா என்பதை கண்டறிய, வாங்கி வந்ததும் அந்த மாலையை ஒரு மணி நேரமாவது ஊறவைக்க வேண்டும். அந்த தண்ணீர் பழுப்பு நிறமாக மாறி, கருங்காலி மரத்தில் உள்ள சாறுகள் தண்ணீரின் மேல் எண்ணெய் படலம் போன்று உருவாக வேண்டும் அப்படி மாறாவிட்டால் அது போலி என்று அறிந்து கொள்ளலாம்.

 

 

Related Post