தடம் புரண்ட பெட்டிகள்.. ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரயில்கள்..

post-img

பாட்னா: பீகார் மாநிலத்தில் பயணிகள் ரயில் தடம்புரண்ட நிலையில், இரு திசைகளிலும் ஏராளமான ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாம் மாநிலம் காமாக்யா நோக்கிச் செல்லும் 12506 நார்த் ஈஸ்ட் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸின் சில பெட்டிகள் நேற்று (அக்டோபர் 11) இரவு 9.35 மணிக்கு டானாபூர் பிரிவின் ரகுநாத்பூர் ஸ்டேஷன் அருகே தடம் புரண்டன. பக்ஸர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்தில் பல பயணிகள் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காயம் அடைந்த பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ரயில் தடம்புரண்ட விபத்தில் 4 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டது. ரயில் தடம் புரண்ட சம்பவத்தைத் தொடர்ந்து பாட்னாவில் உள்ள எய்ம்ஸ், ஐஜிஐஎம்எஸ் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ரயில் தடம்புரண்ட விபத்து காரணமாக, டெல்லி நோக்கியும், அசாம் நோக்கியும் செல்லும் ரயில் பாதைகளில் இயக்கம் தடைபட்டுள்ளது. இதனால் பல பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் திருப்பி விடப்பட்டன. ரயில்வே உயர் அதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்கு வந்து தடம் புரண்டதற்கான காரணத்தை ஆய்வு செய்து வருகின்றனர். தடம் புரண்ட பெட்டிகளில் இருந்து பயணிகளை மீட்கும் முயற்சியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
தடம் புரண்ட ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் இருந்து அகற்றுவது சிரமமான வேலை என்பதால், தண்டவாளம் சீரமைக்கப்படுவதற்கு சிறிது நேரம் எடுக்கும். அதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன. இந்த சம்பவத்தால் ஏற்பட்ட இழப்பை ரயில்வே இன்னும் மதிப்பிடவில்லை என்று கிழக்கு மத்திய ரயில்வேயின் சிபிஆர்ஓ, பிரேந்திர குமார் தெரிவித்துள்ளார்.
ரயில் தடம் புரண்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை, மேலும், இந்த ரயில் விபத்து குறித்து விசாரிக்க ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு வருகிறது என டானாபூர் டிஆர்எம் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

pic.twitter.com/kA0zWGiY84

பயணிகள் ரயில் தடம் புரண்டதால் அந்த இடத்தில் பல தூண்கள், மின்கம்பங்கள், சிக்னல் கம்பங்கள் மற்றும் இரண்டு தண்டவாளங்களும் சேதமடைந்துள்ளன. எனவே டெல்லி - ஹவுரா மெயின் லைனில் இயக்கப்படும் பல ரயில்கள் ஆங்காங்கே பல இடங்களில் நிறுத்தப்பட்டதால் அனைத்து ரயில்களும் இலக்கை அடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பாட்னா, ஜாஜா, கியுல், ஜசிதி மற்றும் பாடலிபுத்ரா ஆகியவற்றை இணைக்கும் முக்கியமான தீன் தயாள் உபாத்யாய் - ஹவுரா எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் இந்த ரயில் தடம் புரண்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏராளமான ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படுவதாக கிழக்கு மத்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

Related Post