பல்லாவரம் விவகாரம்.. கழிவுநீர் கலக்கவில்லை என்றால் அந்த தண்ணீரை அமைச்சர் குடிப்பாரா? அண்ணாமலை கேள்வி

post-img

சென்னை: பல்லாவரத்தில் மலைமேடு பகுதியில் நேற்று திடீரென 30+ பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், அவர்களில் 3 பேர் உயிரிழந்தனர். அப்பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து இருப்பதே அதற்குக் காரணம் எனச் சொல்லப்பட்ட நிலையில், அதற்கு அமைச்சர் தா. மோ. அன்பரசன் மறுப்பு தெரிவித்து இருந்தார். இதற்கிடையே குடிநீருடன் கழிவுநீர் கலக்கவில்லை என்றால் அந்த நீரை அமைச்சர் குடிப்பாரா என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை புறநகரான பல்லாவரம் அருகே உள்ள மலைமேடு பகுதியில் வசிக்கும் சுமார் 30 பேருக்கு நேற்று திடீரென வாந்தி, தலைச்சுற்றல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

உயிரிழப்பு: இதையடுத்து அவர்கள் குரோம்பேட்டையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இதுபோல மொத்தம் 32 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் நேற்று உயிரிழந்த நிலையில், இன்று மேலும் இருவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அப்பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததே இதற்குக் காரணம் என்று பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்தாலேயே உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறினர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன் அமைச்சர் தா. மோ அன்பரசன் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தார். மேலும், அப்பகுதியில் மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டது.
அமைச்சர் தா.மோ.அன்பரசன்: ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறுகையில், "நாங்கள் நடத்திய ஆய்வில் குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை என்றே தெரிகிறது. உணவில் தான் ஏதோ கலந்து இருப்பது தெரிய வந்துள்ளது. ஏனென்றால் குடிநீரில் எதாவது கலந்திருந்தால் அங்கிருந்த 300 பேரும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். உணவில் தான் ஏதோ கலந்து இருப்பது போலத் தெரிகிறது. பாதிக்கப்பட்ட அனைவரும் கடைசியாக அங்குப் பிடித்த மீனைச் சாப்பிட்டதாகவே சொல்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.

உணவு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவை வந்த பிறகே என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரிய வரும். இதற்கிடையே உணவில் கழிவுநீர் கலக்கவில்லை என்றால் அமைச்சர் தா. மோ. அன்பரசன் அந்தப் பகுதியில் வழங்கப்படும் குடிநீரைக் குடிக்க முன்வருவார்களா என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணாமலை: இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "சென்னை பல்லாவரம் அருகே, குடிநீரில் கழிவு நீர் கலந்ததால், உடல் நலம் பாதிக்கப்பட்டு, 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதும், மூன்று உயிரிழந்திருப்பதும் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடல் நலம் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவாக நலம்பெற வேண்டும் கொள்கிறேன்.
அமைச்சர் குடிப்பாரா: இது குறித்து கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்களிடம், குடிநீரில் கழிவு நீர் கலந்திருந்தால், 300 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் 20 பேர் மட்டும்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்கள் மீது தான் தவறு இருக்கிறது என்று திமிராகப் பதிலளித்துள்ளார் அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன். குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை என்றால், அமைச்சரும், திமுகவினரும் அந்தப் பகுதியில் வழங்கப்படும் குடிநீரைக் குடிக்க முன்வருவார்களா?

அதுமட்டுமின்றி, தெருக்களில் ப்ளீச்சிங் பவுடருக்குப் பதிலாக, மைதா மாவு தூவப்பட்டதா என்ற கேள்வியை எழுப்பிய ஊடக சகோதரரிடம், ப்ளீச்சிங் பவுடர் விலை ரூ. 10 - 13 தான் என்கிறார் அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன். ஆனால், ப்ளீச்சிங் பவுடரை ஏன் ரூ.55க்கு மாநகராட்சி கொள்முதல் செய்திருக்கிறது என்ற ஊடக சகோதரரின் கேள்விக்கு அமைச்சரிடம் பதில் இல்லை.
ஊழல்: எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என, மக்கள் நலன் குறித்த அக்கறை சிறிதும் இன்றிச் செயல்படும் இந்த மக்கள் விரோத அரசால், அப்பாவி பொதுமக்கள் தினம் தினம் உயிரிழப்பு வரை பாதிக்கப்பட்டும், சிறிதும் வெட்கமே இன்றி, திராவிட மாடல் அரசு என்று விளம்பரம் செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, உண்மையில் கள நிலவரங்கள் தெரிவிக்கப்படுகின்றனவா என்ற கேள்வி வலுப்படுகிறது" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Post