சென்னை: பாஜகவில் அண்ணாமலைக்கு நெருக்கமாக இருந்த நடிகர் ஆர்.கே சுரேஷ் மீது ஆருத்ரா மோசடி வழக்கில் புகார் சொல்லப்பட்டது. அவர் பாஜகவில் இருந்து விலகி ஐஜேகவில் இணைந்தார். இந்நிலையில் விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்தும், 2026 சட்டமன்ற தேர்தல் குறித்தும் சுரேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
சினிமா தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே சுரேஷ் பாஜகவில் ஓபிசி பிரிவு துணைத் தலைவராக இருந்தார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் நெருக்கமாக இருந்தார். ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்.கே சுரேஷ் பெயர் அடிபட்டது. இதையடுத்து அவர் சிறிது காலம் தலைமறைவாக இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை, "அரசியலால் என் சினிமா வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. எனவே சினிமாவில் கவனம் செலுத்தப் போகிறேன்." என்று கூறியிருந்தார்.
அண்ணாமலை லண்டனில் இருந்து திரும்பும் வரை அவர் பாஜகவில் தான் இருந்தார். அண்ணாமலை தமிழ்நாடு திரும்பிய சில நாட்களில் சுரேஷ் பாஜகவில் இருந்து விலகினார். அதன்பிறகு ஐஜேக கட்சியில் இணைந்தார். அந்தக் கட்சியில் அவருக்கு அகில இந்திய அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.கே சுரேஷ், “அரசியலில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு செல்வது எல்லாம் அனுபவம் தான். பாஜகவில் கடந்த ஏழு ஆண்டுகள் மக்களை சந்தித்த அனுபவத்துடன் தற்போது ஐஜேகவில் இணைந்துள்ளேன். இங்கு என்னுடைய தகுதிக்கேற்ற பதவியும் கொடுத்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்தித்து ஆசிர்வாதம் வாங்கினேன்.
என் மீது விமர்சனங்கள் ஆயிரம் இருக்கலாம். நாம் எப்படிப்பட்ட நபர் என்பது உலகுக்கு நன்கு தெரியும். கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து திரைத்துறையில் இருக்கிறேன். எவ்வளவு தூய்மையானவாக இருக்கிறேன் என்று அனைவருக்கும் தெரியும். விமர்சனங்கள் வர வர தான் ஒரு மனிதன் வளர முடியும். எனக்கு பாஜகவில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூட நல்ல நண்பர்தான். அதில் அரசியல் ரீதியாக சிலருடன் முரண்பாடுகள் இருந்தன. மற்றபடி பாஜகவில் எந்த வருத்தமும் இல்லை. அது அரசியலில் இருக்கத்தான் செய்யும். ஐஜேகேவை சின்ன கட்சி என்று சொல்ல முடியாது. கடந்த 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடர்ந்து 14 ஆண்டுகளாக கட்சி வெற்றிகரமாக இயங்குவதே பெரிய சாதனை தான்.
கட்சியை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்வதற்காக தான் எனக்கு பதவி கொடுத்துள்ளார்கள். விஜய் சாரின் அரசியல் வருகை தமிழ்நாட்டுக்கு தேவை. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம். புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ள அவருக்கு என் வாழ்த்துகள். இப்போதுதான் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இன்னும் ஓராண்டு உள்ளது. அவர் களத்தில் இறங்கி விளையாடட்டும். இங்கு எல்லா அரசியல் கட்சிகளும் அனுபவம் வாய்ந்தவை தான். திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களத்தில் உள்ளன. 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணியின் உண்மையான பலம் தெரிய வாய்ப்புள்ளது. இதுவரை சந்தித்த தேர்தல்கள் வேறு. இந்தத் தேர்தல் வேறு மாதிரி இருக்கும். களம் சூடாக இருக்கும்.” என்றார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage