டெல்லி: காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பி அபிஷேக் மனு சிங்வியின் நாடாளுமன்ற இருக்கைக்கு கீழே கட்டுக்கட்டாக பணம் கிடைத்ததாகவும், அதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கர் கூறியுள்ளார். இந்நிலையில் தான் அபிஷேக் மனு சிங்வியின் சொத்து மதிப்பு, வழக்கறிஞராக அவர் ஒரு முறை நீதிமன்றத்தில் ஆஜராக வாங்கும் சம்பளம் உள்ளிட்ட விபரங்கள் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. லோக்சபா, ராஜ்யசபாக்களில் தொடர்ந்து அமளி நடந்து வருகிறது. அதானி விவகாரம் உள்பட பல்வேறு முக்கிய பிரச்சினைகளை விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுகின்றன.
ஆனால் அதுபற்றி விவாதிக்க நேரம் ஒதுக்கப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி செய்து வருகின்றன. இந்நிலையில் தான் நேற்று ராஜ்யசபா (மாநிலங்களவை)தலைவரான துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அவர் கூறுகையில், ‛‛ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்வி இருக்கைக்கு கீழே பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சபை முடிந்த பிறகு வழக்கமான சோதனைகளின்போது இந்த பணம் சிக்கியது. இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றார். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாகி உள்ளது.
இதற்கு காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பி அபிஷேக் மனு சிங்வி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛இப்போது தான் முதல் முறையாக கேள்விபட்டேன். தற்போது வரை இதுபற்றி எனக்கு தெரியவில்லை. நான் எப்போதும் ராஜ்யசபாவுக்கு வரும்போது ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டை தான் கொண்டு வருவேன். நேற்று பகல் 12.57 மணிக்கு ராஜ்யசபாவுக்குள் நுழைந்தேன். 1 மணிக்கு அவை முடிந்தது. பிறகு 1.30 மணி வரை நான் கேன்டீனில் அமர்ந்து விட்டு வீடு திரும்பினேன்'' என்று கூறினார். இதன்மூலம் தனது இருக்கைக்கு அடியில் கட்டுக்கட்டாக பணம் கிடைத்தது தொடர்பான குற்றச்சாட்டை அபிஷேக் மனு சிங்வி முற்றிலுமாக மறுத்துள்ளார்.
இது ஒருபுறம் இருக்க அபிஷேக் மனு சிங்வி பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது அபிஷேக் மனு சிங்வி அடிப்படையில் வழக்கறிஞர். உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராகவும், பிரபல வழக்கறிஞராகவும் அறியப்படுகிறார். இவர் காங்கிரஸ் கட்சி சார்பில் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து லோக்சபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இவரது சொத்து மதிப்பு என்பது இது கடந்த 2022-23ம் ஆண்டுக்காலத்தில் ரூ.360 கோடி என்று அவர் ராஜ்யசபா எம்பி தேர்தலுக்கு வழங்கிய வேட்புமனுவின் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக 2021-2022ல் ரூ.291 கோடியாக சொத்து மதிப்பு இருந்துள்ளார். அதேபோல் அவரது மனைவி அனிதாவின் சொத்து மதிப்பு ரூ.11.42 கோடியாக இருக்கிறது.
இது அவரது வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து மதிப்பாக இருந்தாலும் கூட அவரிடம் கூடுதலாக சொத்துகள் இருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டுள்ளன. அதன்படி அவரது சொத்து மதிப்பு ரூ.649 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அபிஷேக் மனு சிங்வி பிரபல வழக்கறிஞராக உள்ளார். இவர் ராஜீவ் காந்தி வழக்கு உள்பட பல பிரபலங்களின் வழக்குகளில் ஆஜராகி வாதாடியுள்ளார். இவர் ஒருமுறை நீதிமன்றத்தில் ஆஜராக குறைந்தது ரூ.6 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.11 லட்சம் வரை கட்டணமாக பெறுகிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage