வாஷிங்டன்: சிரியாவில் கடந்த 2000 ஆம் ஆண்டு அவரது தந்தைக்கு பிறகு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பஷார் அல் ஆசாத் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்கள் வசம் சிரியா சென்றுள்ளதால், நாட்டை விட்டு பஷார் அல் ஆசாத் தப்பி ஒடினார். சிரியாவில் ஆசாத் ஆட்சி கவிழ்க்கப்பட்டு இருப்பதால் அந்த நாட்டில் அடுத்து என்ன நடக்கும்.. அங்குள்ள மக்கள் நிலை எப்படி இருக்கும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதிபர் பஷார் அல் - ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சி குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதில் அதிபா் அல்-அசாத் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யாவும், கிளா்ச்சிப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும் செயல்பட்டன.
கடந்த 27 ஆம் தேதி ஹயாத் தஹ்ரீா் அல்-ஷாம் என்ற கிளர்ச்சிப்படை திடீரென்று சிரியாவின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதலை தொடங்கியது. இதை சற்றும் எதிர்பார்க்காத ராணுவம் பின்வாங்கியது. தலைநகரை பிடித்து அதிபர் ஆசாத் ஆட்சியை கவிழ்ப்பதே இலக்கு என்று கிளர்ச்சிப்படையின் தலைவர் அபு முகமது அல்-ஜோலானி தெரிவித்தார். முதலில் டமாஸ்க சின் புறநகர் பகுதிகளை பிடித்தனர்.
நாட்டைவிட்டு தப்பி ஓடினார்: இன்று டமாஸ்கசையும் சுற்றி வளைத்தனர். இதனால், சிரியா அதிபர் நாட்டை விட்டு தப்பியுள்ளார். அதுமட்டுமின்றி ஆட்சி மாற்றத்தை சுமூகமாக மேற்கொள்ளவும் சிரியா அதிபர் அல் ஆசாத் ஒப்புக்கொண்டார். தலைநகர் டாமஸ்கஸ் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய நிலையில் தொடர்ந்து கிளர்ச்சிப் படையினரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சிரியாவை சுமார் 54 ஆண்டுகளாக கட்டுப்பாட்டில் வைத்து இருந்த அல் ஆசாத் குடும்ப ஆட்சி வீழ்த்தப்பட்டுள்ளது.
அடுத்து என்ன நடக்கும்?: சிரியா கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுள்ள நிலையில் அங்கு அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.. கிளர்ச்சியாளர்கள் குழு தலைவர் அபு முகம்மது அல் கோலானி , சிரியாவில் இடைக்கால நிர்வாகம் அமைக்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார். தற்போது சிரியாவில் அரசு அமைப்புகளுக்கு பொறுப்பு நபராக அதாவது காபந்து பொறுப்பை சிரியா பிரதமர் முகம்மது அல் ஜலாலி நியமிக்கப்பட்டுள்ளார்.
எப்போது அமைதி திரும்பும்?: அதிபர் ஆசாத் ஆட்சி முடிவுக்கு வந்து இருப்பதால் அங்கு உடனடியாக அமைதி திரும்பும் என்று சொல்ல முடியாது. ஹயாத் தஹ்ரீா் அல்-ஷாம் கிளர்சிப்படையின் கடந்த கால செயல்களை வைத்து பார்க்கும் போது சிரியாவில் கடுமையான சர்வாதிகார ஆட்சி நடத்தப்பட வாய்ப்புள்ளதாக சர்வதேச அரசியல் நோக்கர்களால் சொல்லப்படுகிறது. சிரியாவில் மக்களும், வெளிநாட்டில் சிரியா மக்களும் நாட்டில் அடுத்தகட்டமாக என்ன நடக்கும் என்பதை ஒருவித அச்சத்துடனேயே கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
சிரியாவில் கடந்த 1971 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரையிலும் ஹசீப் அல் ஆசாத் அதிபராக இருந்தார். அவருக்கு பிறகு அவரது மகன் பஷீர் அல் அசாத் அதிபராக பொறுப்பேற்றார். 24 ஆண்டுகளாக சிரியாவில் அதிபராக பஷீர் அல் அசாத் இருந்து வந்த நிலையில் கிளர்ச்சியாளர்களால் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage