சுயமரியாதையை அடகு வைத்த அடியாள்- அன்புமணியை விமர்சித்த அமைச்சர் சிவசங்கருக்கு பாமக ஜிகே மணி பதிலடி

post-img
சென்னை: வன்னியர் உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சித் (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸை கடுமையாக விமர்சித்த அமைச்சர் சிவசங்கருக்கு உடனடியாக பாமக பதிலடி தந்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் சுயமரியாதையை அடகு வைத்த அடியாள்தான் அமைச்சர் சிவசங்கர் என்று பாமக கவுரவத் தலைவர் ஜிகே மணி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ஜிகே மணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 1000 நாட்களுக்கு மேலாகியும் அதை செயல்படுத்த போலி சமூகநீதி திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து பா.ம.க. சார்பில் நடத்தப்பட்ட போராட்டம் தமிழகத்தைத் தொடர்ந்து கொள்ளையடிக்கலாம் என்ற திமுகவின் கனவை கலைத்திருக்கிறது. அதனால் தான் அறிவாலய அடியாளை ஏவி விட்டு, சமூகநீதிக் காவலர் ராமதாஸுக்கு எதிராகவும், பாமக தலைவர் மருத்துவர் அன்புமணிக்கு எதிராகவும் ஓசையெழுப்ப வைத்திருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 1000 நாட்களுக்கு மேலாகியும் வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றாதது ஏன்? திமுகவில் துரைமுருகன் போன்ற வன்னிய சமூதாயத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சருக்கும் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படாதது ஏன்? என்பது தான் கேள்விகள். இந்த வினாக்களை புரிந்து கொள்ளாமலேயே அறிவாலய அடிமை சிவசங்கர் சீறி எழுந்திருக்கிறார். தேர்தல் வந்தால் தான் பா.ம.க.வுக்கு வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த நினைவு வரும் என்று ஏற்கனவே பலமுறை எடுத்த வாந்தியையே அவர் மீண்டும் எடுத்திருக்கிறார். காஞ்சிபுரம் போராட்டத்தில் பேசிய மருத்துவர் அன்புமணி இராமதாஸ், தேர்தல் வந்தால் தான் பாமகவுக்கு வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த நினைவு வருவதாக சில முட்டாள்கள் பேசுவதாக பெயர் குறிப்பிடாமல் விமர்சித்திருந்தார். இப்போது முந்திக் கொண்டு வந்து பழைய வாந்தியையே மீண்டும் எடுத்ததன் மூலம் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பெயர் குறிப்பிடாமல் விமர்சித்தது யாரை? என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார் சிவசங்கர். அவர் தகுதி அவ்வளவு தான். சமூகநீதி குறித்து எவ்வளவு தான் பாடம் நடத்தினாலும் திமுகவுக்கும், அதன் தலைமைக்கும் புரியவே மறுக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எந்த பங்கும் இல்லை. அதை உச்சநீதிமன்றமே அதன் தீர்ப்பில் தெளிவாக கூறியிருக்கிறது. தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி தான் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எந்த இடத்திலும் உச்சநீதிமன்றம் கூறவில்லை. வன்னியர்களின் பின்தங்கிய நிலைக்கான தரவுகளைத் திரட்டி அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பது தான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. அந்தத் தரவுகளைத் திரட்டி ஒரு மாதத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியிருக்க முடியும். ஆனால், வன்னியர்கள் மீதான வன்மம் மற்றும் இனவெறியால் தான் அதை செய்வதற்கு திமுக அரசு மறுத்து வருகிறது. ஒருவேளை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, வன்னியர்களின் மக்கள்தொகைக்கு இணையாக அதிக இட ஒதுக்கீடு வழங்க திமுக அரசு நினைத்தால், அதை மாநில அரசே செய்யலாம். அதற்கு மாநில அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. அதனால் தான் 2010&ஆம் ஆண்டு ஜூலை 13&ஆம் தேதி 69% இட ஒதுக்கீட்டு வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்தின் அன்றைய தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான அமர்வு, தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி 69% இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும்படி தீர்ப்பளித்தது. இந்த உண்மையும், அறிவும் சமூகநீதி குறித்து அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். சிவசங்கர் போன்று அறிவாலயத்தில் அடிமையாக இருந்து அடியாள் வேலை செய்பவர்களுக்கு இது குறித்தெல்லாம் தெரியாது. மத்திய அரசால் நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை சிவசங்கர் போன்றவர்கள் முகவரி இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்த காலத்திலிருந்தே பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. ஆனால், வன்னியர்கள் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் சாதிவாரி கணக்கெடுப்பே தேவைவில்லை; ஒருவேளை தேவைப்பட்டாலும் அதை மாநில அரசே செய்யலாம். தமிழக அரசுக்கு உண்மையான விருப்பம் இருந்தால் இது குறித்து உச்சநீதிமன்றத்திடமிருந்தே விளக்கம் பெறலாம். அதைவிடுத்து எல்லாவற்றுக்கும் பாரதிய ஜனதா என்ற பூச்சாண்டியைக் காட்டி மக்களை ஏமாற்ற முயலக்கூடாது. திமுகவின் இந்த பூச்சாண்டி வேலையும், நாடகங்களும் இனியும் மக்களிடம் எடுபடாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். 2021&ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளில் பிரதமர் மோடி அவர்களுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் 3 முறை கடிதம் எழுதி உள்ளார். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மாநிலங்களவையில் 6 முறை வினா எழுப்பியுள்ளார். அண்மையில் கூட மாநிலங்களவையில் உரையாற்றிய மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டியதன் தேவை குறித்து புள்ளிவிவரங்களுடன் வலியுறுத்தினார். அப்போதெல்லாம் அமைச்சர் சிவசங்கர் எங்கு, எந்த நிலையில் இருந்தார் என்பது தான் தெரியவில்லை இப்போதும் கூட எங்களுக்கு எந்தத் தடையும் இல்லை. நாளையே பாரதிய ஜனதா கூட்டணியிலிருந்து வெளிவருகிறோம். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கூறியதைப் போல திமுகவுக்கு நிபந்தனை இல்லாத ஆதரவு வழங்குகிறோம். அப்படி செய்தால் வரும் 6-ந் தேதி தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை திமுக அரசு நிறைவேற்றுமா? இப்போது உள்ளத் தடைகள் அனைத்தும் பாஜக அணியிலிருந்து பாமக வெளியேறினால் உடனடியாக விலகி விடுமா? பா.ம.க.வில் மத்திய அமைச்சர் பதவியும், கட்சித் தலைவர் பதவியும் மருத்துவர் அன்புமணி இராமதாசுக்கு மட்டும் தான் வழங்கப்படுமா? என்று வினவியுள்ளார் சிவசங்கர். இப்போது தான் அவருக்கு தெளிந்திருக்கிறது போலத் தோன்றுகிறது. திமுகவில் தான் அண்ணாவுக்குக் கூட வழங்கப்படாத தலைவர் பதவி ஸ்டாலினின் குடும்பச் சொத்தாக எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. எங்கள் கட்சியில் தலைவர் பதவியை பேராசிரியர் தீரன் பாட்டாளி மக்கள் கட்சியில் அவர் இருக்கும் வரை வகித்தார். அதன்பின் அப்பதவிக்கு வந்த நான் 25 ஆண்டுகள் அப்பதவியை வகித்தேன். அதன்பிறகு தான் மருத்துவர் அன்புமணி இராமதாசுக்கு அந்தப் பதவி வழங்கப் பட்டிருக்கிறது. இப்போதும் கூட எனக்காகவே கவுரவத் தலைவர் பதவி உருவாக்கி வழங்கப் பட்டுள்ளது. ஆனால், திமுகவில் அப்படியல்ல... சிவசங்கரின் குனிந்த முதுகு சற்று நிமிர்ந்தால் அவரது அமைச்சர் பதவியும், சட்டமன்ற உறுப்பினர் பதவியும் அவரை விட குனியக் கூடிய இன்னொரு அடிமைக்கு போய்விடும். பாட்டாளி மக்கள் கட்சி என்பது திமுகவைப் போன்றது அல்ல. அறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட திமுகவை கைப்பற்றிக் கொண்டு தாத்தா, மகன், பெயரன், கொள்ளுப் பெயரன் என வாழையடி வாழையாக பதவிகளை அனுபவிப்பது திமுகவின் எழுதப்படாத விதி. பா.ம.க.வில் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம். பாட்டாளி மக்கள் கட்சிக்கு எந்தனை மத்திய அமைச்சர் பதவிகள் கிடைத்தன? மருத்துவர் அன்புமணி இராமதாசுக்கு எப்போது மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது? என்பதெல்லாம் வரலாறு அறிந்தவர்களுக்கு தெரியும். 1998&ஆம் ஆண்டு பாமகவுக்கு கிடைத்த முதல் அமைச்சர் பதவி தலித் எழில்மலை என்ற பட்டியலின உறுப்பினருக்குத் தான் வழங்கப்பட்டது. 1999&ஆம் ஆண்டில் கிடைத்த இரண்டாவது மத்திய அமைச்சர் பதவியும் பொன்னுசாமி என்ற இன்னொரு பட்டியலினத்தவருக்கு தான் வழங்கப்பட்டது. மூன்றாவது அமைச்சர் பதவி என்.டி.சண்முகத்துக்கும், நான்காவது அமைச்சர் பதவி ஏ.கே.மூர்த்திக்கும் வழங்கப்பட்ட பின்னர் ஐந்தாவதாகத் தான் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அமைச்சராக்கப்பட்டார். இந்த உண்மைகள் அனைத்தும் வரலாறு தெரிந்தவர்களுக்குத் தெரியும்; சிவசங்கர் போன்ற வாயிற்காப்போன்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. தமிழ்நாட்டில் அருந்ததியர் இட ஒதுக்கீட்டிற்கான பரிந்துரை 2008&ஆம் ஆண்டில் 243 நாட்களில் நீதிபதி ஜனார்த்தனன் ஆணையத்திடமிருந்து பெறப்பட்டது. இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டிற்கான பரிந்துரை 6 மாதங்களில் பெறப்பட்டது. ஆனால், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த பரிந்துரையை மட்டும் இரு ஆண்டுகளாகியும் வழங்காமல் மிக்சர் தின்று கொண்டிருக்கிறது தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம். அதை தட்டிக் கேட்காமல் முதலில் 3 மாதங்கள் மட்டுமே காலக்கெடு வழங்கிய தமிழக அரசு, பின்னர் 6 மாதங்கள், ஓராண்டு என காலநீட்டிப்பு வழங்கி மிக்சர் சப்ளை செய்து கொண்டிருக்கிறது. இதற்கான காரணமும் வன்னியர்கள் மீதான வன்மமும், இனவெறியும் தான். இவையெல்லாம் மானமுள்ள வன்னியர்களுக்குப் புரியும். எஸ்.எஸ்.சிவசங்கர் போன்ற அறிவாலயத்து அடியாட்களுக்கு ஒருபோதும் தெரியாது. உண்மையில் சிவசங்கரைப் பார்த்து நான் பரிதாபப்படுகிறேன். மருத்துவர் அய்யா அவர்களோ, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களோ திமுகவை விமர்சித்தால், திமுகவில் உள்ள ஒரு வன்னியரை வைத்தே அவர்களை இழிவுபடுத்துவதும், திமுகவை பட்டியலினத்து தலைவர்கள் எவரேனும் விமர்சித்தால் அவர்களை பட்டியலினத்தவரை வைத்தே இழிவுபடுத்துவதும் கலைஞர் காலத்திலிருந்தே திமுகவின் வாடிக்கை. அதை இப்போது ஸ்டாலினும் பின் தொடர்கிறார். ஆடுகளை மோத விட்டு ரத்தம் குடிக்கும் ஓநாய் தந்திரத்திற்கு சிவசங்கர் பலியாகியிருக்கிறார். அதனால் தான் அவரை அறிவாலயத்தில் அடிமை என்று அழைக்கிறோம். கடந்த ஆட்சியில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உறவினர்கள் நிர்வாகிகள் நடத்தும் இசை வேளாளர் இளைஞர் பேரவை திருச்சியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்குத் தொடர தீர்மானிக்கப்பட்டது. அதன்பின் வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அனைவருக்கும், அனைத்து உதவிகளையும் திமுக தான் வழங்கியது. மானமுள்ள வன்னியராக இருந்திருந்தால் இதற்கு எதிராக சிவசங்கர் பொங்கியிருப்பார். ஆனால், சுயமரியாதை குறித்து எதுவும் அறியாத, அடிமை ரத்தம் உடலில் ஊறியிருப்பதால் தான் வன்னியர் சமூகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை கண்டிக்காமல், வன்னியர்களின் சமூகநீதிக்காக பாடுபடும் மருத்துவர் அய்யா அவர்களையும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களையும் விமர்சிக்கிறார். இவரைப் போன்றவர்களை ஏவி விடுவதன் மூலம் பிரச்சினையை திசை திருப்பி விடலாம் என்று முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைத்தால் அவருக்கு எனது அனுதாபங்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் சமூகஅநீதி கட்சியான திமுகவை மக்கள் வீழ்த்தப்போவது உறுதி. இவ்வாறு ஜிகே மணி தெரிவித்துள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post