இதுதான் பெஸ்ட்? ஏன் தெரியுமா? : ரஜினி வாழ்க்கையை மாற்றிய 5 சினிமா

post-img
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இதுவரை 171 படங்களில் நடித்துள்ள நிலையில், அதில் 5 முக்கியமான படங்களைப் பட்டியல் போட்டுள்ளோம். ரஜினிகாந்த் தனது 74 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். ஆனால், அவர் உச்ச நடிகராக மாறிய காலத்திலிருந்தே பிறந்தநாளுக்கு முன்பாகவே இமயமலைக்குச் சென்றுவிடுவார். அந்தளவுக்கு ரசிகர்கள் தொல்லை அவருக்கு இருந்தது. ரஜினியே ஒரு விழாவில் பேசியது போல் 'இனி இந்தக் குதிரை ஓடாது' என்று பேசியவர்களின் வாயை அடைப்பதைப் போல கடந்த 40 வருடங்களாக தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக வலம் வருகிறார் இவர். இதுவரை 171 படங்களில் நடித்து முடித்த பிறகும் அவர் பக்கம் ஆஃபர் மழையில் நனைந்து கொண்டேதான் இருக்கிறார். அவரை தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக உயர்த்திய பல படங்கள் உள்ளன. குறிப்பாக 'பதினாறு வயதினிலே', 'முள்ளும் மலரும்', 'முரட்டுக்காளை', 'அபூர்வ ராகங்கள்', 'பைரவி' , 'பில்லா' எனப் பல படங்கள் இருந்தாலும் அதில் 5 பெஸ்ட் எவை என ஒரு பட்டியல் போட்டுள்ளோம். அதற்காக இவை மட்டுமே சிறந்தவை என்பது அல்ல. இது அவரது வாழ்க்கையை வர்த்தக ரீதியாக மாற்றியவை என்று சொல்லலாம். 1. அண்ணாமலை: ரஜினியை மிகப் பெரிய உச்சத்திற்குக் கொண்டு போன படம் அண்ணாமலை. இப்போது வரை அந்தப் படத்தில் 'சூப்பர் ஸ்டார் ரஜினி' என்று போடப்பட்ட டைட்டிலை மிஞ்சும் அளவுக்கு ஒன்றை யாரும் செய்ததே இல்லை. அதுதான் இன்றைய வரைக்கு எவர் க்ரீனான இருக்கிறது. பல்ப் வெளிச்சம் ஒவ்வொன்றாக எரிய அதில் ரஜினியின் பெரிய மின்னலடித்ததைப் பார்த்த அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். அந்த ஐடியாவை கொடுத்தவர்கள் இந்தப் படத்தின் எடிட்டர்கள் கணேஷ் குமார். இந்த இருவரின் ஐடியாவில் உருவானதுதான் அந்த டைட்டில் கார்டு. அதுவரை ரஜினி படங்கள் என்றாலே அதன் இசையமைப்பாளராக இளையராஜாதான் இருப்பார். அதை உடைத்து உள்ளே தேவா வரவழைக்கப்பட்டார். அதை முடிவு செய்தவர் படத்தின் தயாரிப்பாளர் பாலசந்தர். ரஜினிகாந்த் முதன்முதலாக தேவாவைச் சந்தித்தது பாலசந்தர் கம்பெனியில்தான். அண்ணாமலை படத்தைப் பற்றி ரஜினியிடம் பேச்சுவார்த்தை தொடங்கிய போதே அதற்காகப் பாடல்கள் தயாராக இருந்தன. தேவா இசையமைத்த 'அண்ணாமலை அண்ணாமலை' பாடல் பட்டி தொட்டி எல்லாம் பட்டையைக் கிளப்பியது. 'வந்தேன்டா பால்காரன்' இன்று வரை ரஜினிகாந்த் ஹிட் லிஸ்டில் இடம்பிடித்திருக்கிறது. அண்ணாமலை படத்தில் சைக்கிளில் வலம் வந்த சாதாரண பால்காரன் ரஜினி, பிறகு எப்படி கோடீஸ்வரனாக உயர்ந்து காட்டப்போகிறான் என்ற சபதம் போட்டு சரத்பாபுவிடம் ரஜினி பேசும் காட்சி திரையரங்கில் தீயாக நெருப்பைக் கக்கியது. அண்ணாமலை சைக்கிள் சினிமாவில் மட்டும் அல்ல. தமிழ் மாநிலக் காங்கிரஸ் என்ற மூப்பனார் புதிய தொடங்கிய கட்சியின் சின்னமாக மாறி தமிழ்நாட்டின் அரசியலையே மாற்றி அமைத்தது. ஒருமுறை ரஜினிகாந்த் படங்களிலேயே இதுதான் பெஸ்ட் என்று சத்யராஜ் கூட பேட்டியில் கூறியிருந்தார். 2.'பாட்ஷா': ரஜினியை 'டான்' ஆன அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசென்ற படம் 'பாட்ஷா'. இப்போதுவரை இதற்கு இணையாக ஒரு படத்தை ரஜினி தன் ரசிகர்களுக்குக் கொடுக்கவே இல்லை. 'பாட்ஷா' வெற்றி படம்தான். பாடல்கள் மட்டும் இல்லாமல் படத்தின் பிஜிஎம் இன்றுவரை ரஜினி புகழைக் கீழே சரியவிடாமல் காப்பாற்றி வரும் படம். ஆனால், அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு 2 வருடங்கள் வாய்ப்பு கிடைக்காமல் தேவா வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்தார். அதை அவரே பேட்டிகள் மூலம் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார். படம் வெற்றி பெற்றபிறகு சினிமாவில் ஒருவரை நோக்கி வாய்ப்புகள் வந்து குவியும் என்பதுதான் நடைமுறை. ஆனால், அந்த விசயம் தேவா விசயத்தில் எதிர்மாறாக அமைந்தது. படத்தின் போஸ்டரே பேசப்பட்டது. நாற்காலியில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு நாயை தடவிக் கொடுப்பது போன்ற ஒரு வில்லத்தனமான காட்சி பலரை மிரட்டியது. ரகுவரன் நடித்த 'மார்க் ஆண்டனி' கேரக்டர் தமிழ் சினிமாவின் சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றாக இன்று வரை இருக்கிறது. இந்தப் படத்திற்கு போஸ்டருக்கான படங்களை எடுக்கும் பணி ஹைதராபாத் படப்பிடிப்பின் போது நடந்தது. 'பாஷா பாரு பாஷா பாரு' பாடல் காட்சியை அங்கேதான் எடுத்தது படக்குழு. இந்தப் படத்தின் கதையின் அளவுக்கு லைடிங் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. காட்சியில் ரஜினி மட்டும் தனியாக உட்கார்ந்திருப்பதைப் பார்க்கச் சரியாக இல்லை என்பதை உணர்ந்த சுரேஷ் கிருஷ்ணா, உடன் ஒரு மிரட்டலான நாய் இருந்தால் நன்றாக இருக்கும் என உணர்ந்தார். எங்கே போய் நாயைத் தேடுவது. அப்போது அருகிலிருந்த ஒரு வீட்டில் நாய் கிடைத்தது. அது நாய் அல்ல; குதிரை உயரத்திலிருந்தது என்று சுரேஷ் கிருஷ்ணாவே கூறியிருக்கிறார். சொல்லப் போனால் 'பாட்ஷா' படத்தின் கதை இந்தியில் நிராகரிக்கப்பட்ட ஒரு காட்சியிலிருந்து உருவானது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். அண்ணாமலை படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்ற போது அங்கே பக்கத்தில் அமிதாப்பச்சன் நடித்த 'ஹம்' படம் எடுக்கப்பட்டு வந்தது. அதில் ரஜினியும் நடித்து இருந்தார். அப்போது கல்லூரியில் சீட்டுக் கிடைக்காத ஒருவன் அதை எப்படிக் கேட்டுப் பெறுகிறான் என்ற காட்சியை அமிதாப்புக்குச் சொன்னார்கள். அதை அவர் 'என் படத்தில் செட் ஆகாது' மறுத்துவிட்டார் விட்டுவிட்டார். அதைக் கேட்ட ரஜினி இந்தக் காட்சியை சுரேஷ் கிருஷ்ணாவிடம் சொன்னார். 'வீரா' ஃபுல் பேக் எண்டர்டெய்னர் படத்தை முடித்தது டான்'பாட்ஷா' உருவானது. ஹைதராபாத் போய் கதையை ரஜினியுடன் உட்கார்ந்து உருவாக்கினார் இயக்குநர். தங்கச்சிக்காக ஒருவர் எப்படி கல்லூரியில் சீட்டு வாங்குகிறார் என்பதுதான் கதைக்கு அடிப்படை. அது இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்கவைத்தது. 3.படையப்பா: ரஜினி படங்களில் பொதுவாக ஒரு பெண் வில்லி கதாபாத்திரம் இருக்கும். அதற்கு உதாரணமாக 'மாப்பிள்ளை'யை சொல்லலாம். மாமியாரை எதிர்த்து மாயாஜாலம் செய்யும் மருமகன் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருப்பார். அதேபோல வில்லி 'நீலாம்பரி' வேடத்தில் படையப்பாவில் ரம்யாகிருஷ்ணன் நடித்திருப்பார். மன்னன் படத்தில் எப்படி விஜயசாந்தி கேரக்டர் பேசப்பட்டதோ அதைவிட அதிகம் பேரை நீலாம்பரி ஈர்த்தார். மேலும் இதில் நடிகர் திலகம் சிவாஜியுடன் ரஜினி இணைந்து நடித்ததால் கூடுதல் சிறப்பு அவரது திரை வாழ்வில் ஏற்பட்டது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவான இதன் வெற்றி இந்தக் கூட்டணியைப் பல ஆண்டுகள் தொடரச் செய்தது. 4.சிவாஜி: குறைந்த பட்ஜெட் படங்களை மட்டுமே எடுத்துக் கொண்டிருந்த ஏவி.எம் நிறுவனத்தை மெகா பட்ஜெட் பக்கம் தள்ளிய திரைப்படம் சிவாஜி. அதுவரை முந்தைய தலைமுறைக்கு சிவாஜி என்றால் அது வி.சி. கணேசனை மட்டுமே குறிக்கும். 2கே குழந்தைகளுக்குச் சிவாஜி என்றால் அது ரஜினியைக் குறிக்கும் அளவுக்கு மனதில் பசக் என்று போய் ஒட்டிக் கொண்ட படமாக இது அமைந்தது. 200 நாட்கள் வரை ஓடி ரஜினிக்கு மீண்டும் ஒரு உலக அளவிற்காகச் சந்தையைத் திறந்து வைத்தார் ஷங்கர். 'சிவாஜி: தி பாஸ்' படம் ஷங்கர், ரஜினி, ரஹ்மான் கூட்டணியில் உருவான ஒரு சூப்பர் ஹிட் காம்போ என்று சொல்லலாம். அதேநேரம் படம் வெளியான காலத்தில் அங்கவை, சங்கவை ஆகிய இரண்டு கதாபாத்திரங்களைக் கண்ட தமிழ் அறிஞர்கள் கொதித்துப் போய் சர்ச்சையில் இறங்கி இருந்தனர். 5. 'எந்திரன்': இந்தப் படத்தில் உருவாக்கப்பட்ட 'சிட்டி' கதாபாத்திரம் ரஜினியின் சினிமா வாழ்க்கையில் மறக்கவே முடியாத ஒன்று. சன் பிக்சர் சாதனை படங்களில் எந்திரனுக்கு தனி இடமே உண்டு. இதன் இரண்டாம் பாகம் எடுக்கும் அளவுக்கு ரசிகர்கள் இதை வெற்றிப்படமாக மாற்றினர். 2010 படம் வெளியான போது ஸ்பெஷல் ஷோவுக்கு அன்றைய திமுக தலைவர் கருணாநிதி சக்கர நாற்காலியில் வந்து பார்த்தார். ரஜினியை ஒரு சர்வதேச பிராண்ட் ஆக மாற்றியதில் இந்தப் படத்திற்கு முதல் இடம் உண்டு.

Related Post