சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இன்று நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு பரிந்துரைத்தபடி, இந்த மசோதா உருவாக்கப்பட்டு அது அமைச்சரவை ஒப்புதலும் பெறப்பட்டு தற்போது தாக்கலாக உள்ளது .
முக்கிய கேள்வி: இந்தியாவில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா வெற்றிபெற்று சட்டமாகும் பட்சத்தில் தமிழ்நாட்டில் முன்கூட்டியே தேர்தல் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தலை அவ்வளவு எளிதாக நடத்தி விட முடியாது. இதற்கு சட்டம் ஒன்று கொண்டு வர வேண்டும் என்பதை தாண்டி அதோடு சில சட்டங்களை திருத்த வேண்டும். இன்று மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில் வேறு சில சட்டங்களை திருத்த வேண்டும்.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த இந்திய அரசியலமைப்பில் குறைந்தபட்சம் ஐந்து பிரிவுகளில் திருத்தங்கள் தேவைப்படும்.
1. பாராளுமன்றத்தின் அவைகளின் காலம் தொடர்பான பிரிவு 83,
2. குடியரசுத் தலைவரால் மக்களவையை கலைப்பது தொடர்பான பிரிவு 85,
3. மாநிலத்தின் பதவிக் காலம் தொடர்பான பிரிவு 172 சட்டமன்றங்கள்,
4. மாநில சட்டமன்றங்களை கலைப்பது தொடர்பான சட்டப்பிரிவு 174
5.மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பான பிரிவு 356 ஆகியவற்றில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.
'ஒரே நாடு ஒரு தேர்தல்' (ONOP) செயல்படுத்த அரசாங்கம் என்ன மாதிரியாக திட்டமிட்டுள்ளது என்று இங்கே பார்க்கலாம்:
ஒரே நேரத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும்
முதல் கட்டமாக மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படும்
இரண்டாம் கட்டமாக, பஞ்சாயத்து மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.
இரண்டாம் கட்ட தேர்தல் முதல் பொதுத் தேர்தல் முடிந்த 100 நாட்களுக்குள் நடத்தப்படும்
அனைத்து தேர்தல்களுக்கும் பொதுவான வாக்காளர் பட்டியல் இருக்கும்
நாடு முழுவதும் விரிவான பிரச்சாரம் நடக்கும். இதனால் 5 வருடத்திற்கு ஒரு முறை அந்த 3 மாத காலம் மட்டும் தேர்தல் காலமாக இருக்கும். ராம்நாத் கோவிந்த் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற அமலாக்கக் குழு அமைக்கப்படும்.
செலவுகள் குறையும்: தேர்தல் செலவுகள் இதன் மூலம் குறையும். அதேபோல் தேவையில்லாத பிரச்சார செலவுகளும் இதன் மூலம் குறையும். கடந்த மார்ச் மாதம் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு பரிந்துரைத்தபடி இந்த தேர்தல் முறை கொண்டு வரப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஆனால் சில சிக்கல்கள் உள்ளன: ஆனால் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையில் சில சந்தேகங்கள் ஏற்பட்டு உள்ளது. அரசியல் வல்லுனர்கள் இது தொடர்பாக முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளனர்.
1. தேர்தல் முடிந்த பின் மாநில அரசு திடீரென கவிழ்ந்தால் என்ன ஆகும்?
2. தேர்தல் முடிந்த பின் மத்திய அரசு கவிழ்ந்தால் என்ன ஆகும்?
3. ஒரு சில மாநிலங்களில் மட்டும் மெஜாரிட்டி கிடைக்காமல் போனால் என்ன ஆகும்?
4. இப்போது சமீபத்தில் தேர்தல் நடந்த மாநிலங்களில் ஆட்சி நீடிக்கப்படுமா, கவிழ்க்கப்படுமா?
5. சட்டமன்றங்கள், மாநில சட்டமன்றங்களை கலைப்பது தொடர்பான சட்டப்பிரிவு 174 ல் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வரும். ஆனால் அப்படி செய்தால் மாநிலங்களின் உரிமை நீக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.