சென்னை: தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற பல பாடல்கள் அப்பட்டமான காபி என்பதை ஆதாரப்பூர்வமாக எடுத்துக்காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
தமிழ் சினிமாவில் அடிக்கடி கதை திருட்டு பற்றி விவாதங்கள் அல்லது சர்ச்சைகள் அதிகம் வரும். ஆனால், குற்றச்சாட்டு வைக்கப்படும் எந்த இயக்குநர்களும் இதுவரை கதைத் திருட்டை நேரடியாக ஒப்புக் கொண்டதே இல்லை. வேறு மொழி படங்களின் கதையை திருடுவதைக்கூட சில பேர் மன்னித்துவிடுவார்கள். ஆனால், அட்லி போன்ற சில இயக்குநர்கள் தமிழ் சினிமாவையே அப்படியே திருப்பி போட்டு ஆனியன் மசாலா படமாக கொடுத்ததைக் கூட ஏற்றுக் கொண்டு பல வெற்றிகளைக் கொடுத்துள்ளார்கள் தமிழக மக்கள்.
இப்போது கதைத் திருட்டு பற்றி நாம் சொல்லவரவில்லை. சமூக வலைத்தளத்தில் எந்தளவுக்கு ஹாலிவுட் உள்ளிட்ட வேறுமொழி பாடல்களைக் காபி அடித்து அதை அப்படியே டியூனாக போட்டு ரசிகர்கள் நமது தமிழ் சினிமா இசையமைப்பாளர்கள் எந்தளவுக்கு ஏமாற்றி உள்ளார்கள் என்பது பற்றி ஒரு வீடியோ வேகமாகப் பரவி வருகிறது.
அந்த வீடியோ பதிவில் பல இசையமைப்பாளர்களை வச்சு செய்திருக்கிறார்கள். 1975இல் வெளியான Mamma Mia (ABBA) பாடல் உலக அளவில் மிகப் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தது. ஹாலிவுட்டில் இந்தப் பாடலை முணுமுணுக்காத ஆட்களே கிடையாது என்ற அளவுக்குப் பிரபலமானது. அப்படித்தான் இந்தப் பாட்டின் வெற்றி இந்தியாவை வந்து எட்டியது. இந்த மெட்டை அப்படியே காப்பி செய்து பாடலாக மாற்றி உருவானதுதான் 'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் இடம்பெற்ற 'சாயோனரா வேஷம் கலைந்தது' பாடல். இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கிய இந்தப் படத்தில் இந்தப் பாட்டுக்கு இசையமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
அதேபோல் 1983இல் வெளியான Genesis ஆல்பத்தில் இடம்பெற்ற Mama பாடலை அப்படியே உருவி எடுத்து உருவான பாடல்தான் அஜித்தின் 'ஆசை' படத்தில் இடம்பெற்ற 'மீனம்மா' என்ற பாடல். இந்தப் படத்தை இயக்கியவர் வஸந்த். அந்தக் காலத்தில் படத்தின் பாடல்கள் உட்படப் படமும் மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்தப் பாட்டை இசையமைத்தவர் தேவா.
அடுத்து Unfaithful திரைப்படம். இது கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியானது. Barbadian பாடகரான ரிஹானா பாடியது. இவர் ஒரு தொழிலதிபரும் கூட. ஹஸ்கி வாய்ஸில் உருவான இந்தப் பாடலைக் கேட்டு உருகாதவர்களே இல்லை. அந்தளவுக்கு மொழியைக் கடந்து பலரையும் உலுக்கி எடுத்த பாடல் இது. இதை அப்படியே கட் அண்டு பேஸ்ட் செய்து இசையமைக்கப்பட்ட பாடல்தான் 'உனக்கென நான் எனக்கென நீ' பாடல். நகுலின் நடிப்பில் வெளியான 'காதலில் விழுந்தேன்' படத்தில் இடம்பிடித்த இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் விஜய் ஆண்டனி.
பலரும் காபி அடிப்பதைத் தெரியாமல் கொஞ்சம் மாற்றி யூடியூன் அமைப்பார்கள். அதை இளையராஜா உட்படப் பலர் செய்துள்ளனர். இந்த உண்மையை கங்கை அமரனே பல மேடைகளில் போட்டு உடைத்திருக்கிறார். ஆனால், இவர்களைப் போல இளையராஜா அப்பட்டமாகக் காபி அடிக்கமாட்டார். மேலே குறிப்பிட்டுள்ள பாடல்கள் அப்பட்டமான காபி.
இவை மட்டும் தான் என நினைத்து விடாதீர்கள். இன்னும் வருகிறது. 1995இல் வெளியான In The Summertime பாடல் அந்தக் காலத்துக் காதல் காவியமாக இருந்தது. தமிழில் சுருக்கமாகச் சொன்னால் 'ஏப்ரல் மேயில பசுமையே இல்ல'மாதிரியான பாடல். இளைஞர்களை டேட்டிங் செய்ய அழைக்கும் ஹாலிவுட் பாடல் அது.
இதனை கார்த்திக் நடித்த 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தில் வரும் 'அடி அனார்கலி' பாடலாக மாற்றிக் கொடுத்திருந்தார் இசையமைப்பாளர் சிற்பி. இந்தப் பாட்டு என்னவோ ஹாலிவுட் காபியாக இருக்கலாம். இதைப் போட்டு வெற்றியும் கொடுத்துப் படத்தை ஹிட் ஆகவும் மாற்றி இருக்கிறார் படத்தின் இயக்குநர் சுந்தர் சி. அதே மாதிரி இதே படத்தில் இடம்பெற்ற 'அழகிய லைலா' பாடலும் காபிதான். Ahla Ma Fiki என்ற அரபி பாடலை அப்படியே சுட்டு தமிழில் போட்டிருந்தார்.
பலர் சர்வதேச தரத்தில் பலரும் உலகத்தில் இசையமைக்கலாம். ஆனால், மொழி வேறுபாடு பார்க்காமல் அதை அப்படியே காபி அடிப்பதில் தமிழ் சினிமாவில் உள்ளவர்களைப் போல உலகத்தில் வேறு யாருமே இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.
இந்த காபி அடிக்கும் வரிசையில் விஜய் படமும் இடம்பெற்றுள்ளது. 'துள்ளாத மனமும் துள்ளும்'படத்தில் வெளியான 'மேகமாய் வந்து போகிறேன்' பாடல் 1992இல் வெளியான Junoon படத்தில் இடம்பிடித்திருந்த Sayonee மெட்டின் அப்பட்டமான காபிதான். இதை உருவியவர் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார்.
இந்தப் பட்டியல் இத்துடன் முடிந்துவிடவில்லை. Whistle Stop படத்தின் பாடலை அப்படியே சுதி சுத்தமாக எடுத்து 'தெய்வத் திருமகள்' படத்தில் செம்மறி ஆட்டுக்குட்டிகள் மத்தியில் விக்ரம் பாடுவதைப்போன்ற ஜி.வி.பிரகாஷ் குமார் உருவாக்கி இருந்தார். இந்த இரு பாடல்களையும் கேட்கும்போது எந்தளவுக்கு ஒரு மெட்டை அப்படியே போட்டு பணம் சம்பாதித்திருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. ஒரு பாடலிலிருந்து வரும் பாதிப்பில் உருவாகும் பாடல் என்பது வேறு. அதையே அப்படியே தமிழில் மொழி மாற்றம் செய்து தருவது தான் ஒரு இசையமைப்பாளர் வேலையா என யோசிக்க வைக்கிறது.
இப்படி 'ஜூன் போனால் ஜூலை காற்று;, 'மொட்டு ஒன்று மலர்ந்திட துடிக்கும்' , 'ஏய் கீச்சுக் கிளியே', 'சலோமியா', 'உசுமுலரசே', 'அகிலா அகிலா', 'பாக்காதே பாக்காதே பஞ்சாங்கத்த பாக்காதே', 'ரம்பம்பம் ஆரம்பம்' ஆகிய பாடல்களும் 'முகவரி'யில் வரும்'ஓ நெஞ்சே' பாடலும் அப்படியே சொந்த கற்பனையே இல்லாமல் பல படங்களிலிருந்து சுட்டு உருவானவைதான் என்பது தெரியவந்துள்ளது.