வியன்னா: ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த தம்பதி 45 ஆண்டுகளில் 12 முறை திருமணம் செய்து 12 முறை விவாகரத்து செய்துள்ளனர். ஏன் ஒரே நபரை 12 முறை திருமணம் செய்து 12 முறை விவாகரத்து செய்துள்ளனர் என்று ஆய்வு மேற்கொண்ட அரசுக்கு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன.
திருமண பந்தத்துக்குள் நுழையும் எந்தவொரு தம்பதியாக இருந்தாலும் சண்டை, கோபம், மனக்கசப்பு போன்றவை ஏற்படுவது வழக்கம்தான். ஒரு சிலர் சண்டைக்குப் பிறகு ஒருவருக்கொருவரை சமாதானம் செய்து கொண்டு வாழ்பவர்களும் உண்டு. சில பிரச்னைகள் விவாகரத்து வரை கொண்டு போய் விடுவதும் உண்டு.
சமீபகாலமாக திருமண விவாகரத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், ஆஸ்திரிய நாட்டில் உள்ள தம்பதி ஒருவர் 12 முறை திருமணம் செய்து கொண்டு 12 முறை விவாகரத்து செய்து கொண்டுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. எதற்காக ஒரே தம்பதி 12 முறை திருமணம் செய்து கொண்டு 12 முறையும் விவாகரத்து செய்துள்ளனர் என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்..
ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணம் நடந்துள்ளது. இவரது கணவர் 1981 இல் உயிரிழந்துள்ளார். இதன் பிறகு கைம்பெண் ஓய்வூதியம் பெறுவதற்காக அரசாங்கத்திடம் விண்ணப்பித்து ஓய்வூதியத்தைப் பெற்று வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, 1982 இல் அப்பெண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனாலும் தொடர்ந்து அரசாங்கம் கொடுத்து வந்த கைம்பெண் ஓய்வூதியத்தை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், அப்பெண் மறுமணம் செய்துள்ளது குறித்து ஆஸ்திரிய அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, அரசாங்கம் அந்த கைம்பெண் வழங்கி வந்த ஓய்வூதியத்தை நிறுத்தியது. ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதால் கடும் சிரமமடைந்த அப்பெண் மீண்டும் ஓய்வூதியம் பெற வேண்டும் என நினைத்து தனது இரண்டாம் கணவரை விவாகரத்து செய்துள்ளார்.
மீண்டும் கைம்பெண் ஓய்வூதியத்துக்கு விண்ணப்பித்து பணத்தைப் பெறத் தொடங்கியுள்ளார். பின்னர், அரசாங்கத்திற்கு எந்தவொரு தகவலும் தெரிவிக்காமல் மீண்டும் அந்த நபரையே திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். அவர் திருமணம் செய்தது குறித்து மீண்டும் தெரியவரவே அரசாங்கம் சார்பில் வழங்கப்பட்டு வந்த பணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் விடாத அந்தப் பெண் மீண்டும் ஓய்வூதியம் பெறுவதற்காகவே தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார். பின்னர், அரசாங்கத்திடம் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு, அதே கணவரை மீண்டும் திருமணம் செய்து ஜாலியாக வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். கடைசியில் இந்த நடவடிக்கையை வாடிக்கையாகவே அவர் ஆக்கிக் கொண்டார்.
அரசு எப்போதெல்லாம் திருமணத்தைக் கண்டுபிடித்து ஓய்வூதியத்தை நிறுத்துகிறதோ அப்போதெல்லாம் விவாகரத்து செய்வதையும், ஓய்வூதிய வரத் தொடங்கிய பின்னர் மீண்டும் அதே நபரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இப்படியே அந்தப் பெண் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை விவாகரத்து வாங்கிக் கொள்வதையும், திருமணம் செய்வதையுமே செய்து வந்துள்ளார்.
இதுபோன்று தொடர்ந்து 43 ஆண்டுகளாக, 12 முறை திருமணம் செய்வது, விவாகரத்து செய்வது என வாழ்ந்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் இவருடைய இந்த மோசடி குறித்து அறிந்த ஆஸ்திரிய அரசு அவருக்கு கொடுத்து வந்த ஓய்வூதியத்தை நிறுத்தியது. ஆனால், கஜினி முகமது படையெடுப்பது போல தொடர்ந்து 13 ஆவது முறையும் தன்னுடைய கணவரை டைவர்ஸ் செய்து ஓய்வூதியத்துக்கு விண்ணப்பித்து அதிர்ச்சி அளித்துள்ளார்.
இந்த முறை உஷாராகிய ஆஸ்திரிய அரசு, அப்பெண்ணுடைய உறவினர்களையும், அக்கம் பக்கத்தினரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டது. விசாரணையில், வெளியில் இருவரும் பிரிந்து வாழ்வது போல காட்டிக் கொண்டு, வீட்டுக்குள் ஒற்றுமையக வாழ்ந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அப்பெண்ணுக்கு வழங்கப்பட்டு வந்த கைம்பெண் ஓய்வூதியம் முற்றிலுமாக அரசு சார்பில் நிறுத்தப்பட்டது.
இதனால் மனமுடைந்த அப்பெண் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த ஆஸ்திரியா உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை 2023 ஆம் ஆண்டில் தள்ளுபடி செய்தது. மேலும், தொடர் திருமணம், விவாகரத்து செய்து கொள்வது மிகவும் தவறு. அதுமட்டுமல்லாமல் உங்களுடைய திருமணமும், விவாகரத்துகளும் கைம்பெண் ஓய்வூதியத்தைப் பெறுவதற்காகவே நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது. அந்தப் பெண் 73 வயது வரை ஓய்வூதியமாக 3,42,000 டாலரை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.