திருச்சி: 108 வைணவ தலங்களில் முதன்மையாக விளங்கும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சாமி திருக்கோவிலுக்கு பலகோடி மதிப்புள்ள வைர கிரீடத்தை காணிக்கையாக வழங்கி உள்ளார் பிரபல பரத நாட்டியக் கலைஞரான ஜாகிர் உசேன். பிறப்பால் தான் இஸ்லாமியராக இருந்தாலும், அரங்கநாதர் மேல் உள்ள பற்றால் இதனை செய்ததாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ள நிலையில், அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சில மதவாதிகளால் சில பிரச்சினைகள் வந்தாலும், நம்முடைய நாட்டில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் இரு தரப்புமே சகோதரர்கள் போல ஒன்றாக பாவித்து வருகிறார்கள்.. நம்முடைய தமிழகத்திலும் இந்த சகோதரத்துவம் பல்லாண்டு காலமாக நீடித்தே வருகிறது.
குறிப்பாக பார்போற்று நன்னாடாம் தமிழ்நாட்டில், தீபாவாளி, பொங்கல் ஆனாலும், ரம்ஜான், மொகரம் ஆனாலும், இரு மத பண்டிகைகளையும், இங்குள்ள முஸ்லிம்களும், இந்துக்களும் கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
அதேபோல, மொஹரம் பண்டிகை வந்தாலும் சரி, பள்ளிவாசல்கள் திறப்பு விழா என்றாலும் சரி, இந்துக்கள் பள்ளிவாசலுக்கு திரண்டு சென்று சீர்வரிசைகளை தருவார்கள்.. அதுபோல, இந்துக்களின் திருவிழாவுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசைகளை கொண்டுவந்து சிறப்பித்து விடுவார்கள். இதுபோக, கால்நடையாக செல்லும் பக்தர்களுக்கு தண்ணீர், பால், உணவு பொருட்களையும் தந்து வழியனுப்பி வைப்பார்கள். நல்லிணக்கம்: இப்படியான மதநல்லிணக்க உணர்வுகள் இரு சமுதாய மக்களிடம் பின்னிப்பிணைந்து வருகிறது.
அந்த வகையில் தற்போது மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில், 108 வைணவ தலங்களில் முதன்மையாக விளங்கும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சாமி திருக்கோவிலுக்கு பலகோடி மதிப்புள்ள வைர கிரீடத்தை காணிக்கையாக வழங்கி உள்ளார் பிரபல பரத நாட்டியக் கலைஞரான ஜாகிர் உசேன். இன்று ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சாமி திருக்கோவிலுக்கு வந்த அவர் பல கோடி மதிப்புள்ள வைர கிரீடத்தை ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரியப்பன், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டரிடம் வழங்கினார்.
மாணிக்க கல்லை குடைந்து கிரீடம்.. சுற்றி ஜொலிக்கும் வைரம், தங்கம், மரகதம்.. ராஜஸ்தானில் எடுக்கப்பட்டு 8 ஆண்டுகளாக திருச்சியில் வடிவமைக்கப்பட்டத இந்த வைர கிரீடத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்குமாம். அப்படி விலைமதிப்பற்ற கிரீடத்தை பெருமாளுக்கு காணிக்கையாக வழங்கியது ஏன்? என கூறியுள்ளார் ஜாகிர் உசேன்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்," ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி மேல் உள்ள பக்தியால் இந்த வைர கிரீடத்தை காணிக்கையாக அளித்துள்ளேன். ஏறத்தாழ அரை அடி உயரம் கொண்ட இந்த கிரீடமானது 3160 கேரட் மாணிக்க கல், 600 வைர கற்கள் மற்றும் மரகதக் கல்லை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ஒற்றை மாணிக்க கல் கொண்டு வரப்பட்டு குடைந்து எடுக்கப்பட்டு, 400 கிராம் தங்கத்தில் வைரம்,மரகத கற்கள் பதிக்கப்பட்டு ரம்யமாக உள்ளது.
இதனை வடிவமைப்பதற்கு ஏறத்தாழ 8 ஆண்டுகள் ஆனது. உலகில் முதல் முறையாக மாணிக்க கற்களால் செய்யப்பட்ட வைரக் கிரீடம் என்பது இதன் தனி சிறப்பு என்றார். பிறப்பால் தான் இஸ்லாமியராக இருந்தாலும் அரங்கநாதர் மேல் உள்ள பற்றால் இதனை செய்ததாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்றாலும் கடைசிவரை அதன் உண்மையான மதிப்பை அவர் கூறவில்லை.