ஷோபனாவை அழ வைத்த ஒரே படம்? ரஜினியை காயப்படுத்திய திரைப்படம்? ‘தளபதி’ பிளாஷ்பேக்

post-img
சென்னை: கடந்த 30 வருடங்களுக்கு முன் வெளியாகி சினிமா ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றிருந்த ரஜினிகாந்த்தின் 'தளபதி' மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், அப்படம்பற்றிய பழைய நினைவுகளைப் பற்றி கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாம். ரஜினிகாந்த்தின் 'தளபதி' திரைப்படம் வெளியாகி 33 வருடங்களைக் கடந்துவிட்ட நிலையில் அந்தப் படம் மறுபடியும் ரசிகர்களின் விருப்பத்திற்காக ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1991 ஆம் ஆண்டு மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரஜினியின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியான இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இதோடு சேர்ந்து வெளியான கமல்ஹாசனின் 'குணா' சோர்ந்து போய் தாக்குப் பிடிக்க முடியாமல் மூலையில் முடங்கியது. நடிப்பில் கமல்ஹாசன் செய்யும் எந்தவிதமான விஷப் பரீட்சைகளையும் ஏற்றுக் கொண்டு படங்களை விரும்பி பார்க்கும் அவரது ரசிகர்களே கொஞ்சம் 'குணா'வைக் கண்டு கவலையில் மூழ்கினர் என்பதுதான் உண்மை. 'குணா' வெளியான திரையரங்குகளில் அமைதிதான் நிலவியது. பல அடி உயரத்திற்கு குணா கமலுக்காக வைக்கப்பட்ட கட் அவுட்டுகள் கலை இழந்து இருந்தன. அதற்கு மாறாக ரஜினியின் 'தளபதி' வெளியான திரையரங்கங்கள் நிரம்பிவழிந்தன. பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படமாக வசூலை வாரிக் குவித்தது. படத்தில் இடம்பெற்ற 'தேவா' மற்றும் 'சூர்யா' கதாபாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். அந்தக் காலகட்டத்தில் அதிகம் கமர்ஷியல் கதைகளை மட்டுமே கவனம் செலுத்தி வந்த ரஜினிகாந்த் திடீரென்று மகாபாரத பின்னணியில் உள்ள குந்தி, கர்ணன் கதைக் கருவாகக் கொண்ட ஒரு மாடர்ன் கதாபாத்திரத்தில் வெளிப்படுவார் என அவரது ரசிகர்களே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். எனவே 'தளபதி' ஒரு இன்ப அதிர்ச்சியாகப் பலருக்கும் அமைந்தது. இளையராஜாவின் பாடல்கள், ஒளிப்பதிவு, லைட்டிங் எனப் பட வேற லெலவில் வெளிப்பட்டது. 'தளபதி' இடம்பெற்ற பிஜிஎம் இன்றுவரை எட்டிப் பிடிக்கவே முடியாத உயரத்தில்தான் இருக்கிறது. கிட்டத்தட்ட 'தளபதி' மற்றும்'குணா' வெளியாகி 33 வருடங்களைக் கடந்துவிட்ட பின்பும் இன்றைக்கு ரஜினிகாந்த் Vs கமல்ஹாசன் என்ற இருதுருவ சினிமா அரசியலில் இந்த இருவரும் தலைப்புச் செய்தியாக இருந்துவருவது என்பது உண்மையில் ஒரு சாதனைதான். 'தளபதி' பற்றி கவிஞர் வாலி சில நினைவுகளைப் பகிர்ந்துகொண்டிருந்தார். இந்தப் படத்திற்காகப் பாடல்கள் அனைத்தும் மும்பையின் தான் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. அப்போது மும்பைக்கு வாலியால் செல்ல முடியாத சூழல். அவர் சென்னையிலிருந்து பாட்டுகளை எழுதி அனுப்பி அனைத்து பாடல்களும் பதிவு செய்யப்பட்டன. படத்தில் 'சின்னதாய் அவள்' பாட்டு சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதில் சிறப்பு என்ன எனில் ராஜாவின் அம்மா பெயர் சின்னதாய். அதே மாதிரி 'ராக்கம்மா கையை தட்டு' பாடல் வரிகள் மிக மலினமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இளையராஜா இப்படி ஒரு பாட்டை இசையமைக்கலாமா? என்று சர்ச்சை நடந்தது. ஆனால், இத்தனை வருடங்களைக் கடந்தும் தலைமுறை தாண்டி 'கண்மணி கண்ணால் ஒரு சேதி' பாடல் பல லட்சம் மனங்களை இசை மழையில் நனைத்து வருகிறது. பலரும் தளபதி போல ஒரு கதையில் மீண்டு ரஜினி நடிக்கமாட்டாரா? என்று ஏங்கி வருகின்றனர். ஆனால், பலருக்கும் இன்ப நினைவுகளாக அமைந்த இந்தப் படம் ரஜினிக்கு கசப்பான அனுபவத்தைத்தான் கொடுத்தது. மணிரத்னம் பாணி சினிமாவில் நடிக்க அவர் பல வகைகளில் போராடினார். அதை ரஜினியே 'பொன்னியின் செல்வன்' விழாவில் போட்டு உடைத்திருந்தார். அவருக்கு மேக் அப் கூட படத்தில் போடப்படவில்லை. குளம் ஒன்றில் ஷோபனாவுடன் சேர்ந்து நடித்த காட்சியில் அவருக்கு ஷூ கூட சரியாக வழங்கப்படவில்லை. அதற்குக் காரணம் கதையின் அமைப்பு. பாத்திரம் அப்படி. ஆனால், ரஜினி தனது ஸ்டைலான நடிப்பு இதில் இல்லையே எனக் கவலை கொண்டார். அதேபோல்தான் நடிகை ஷோபனா. அவரது சினிமா வாழ்க்கையில் அழு மூச்சாக நடித்த ஒரே படம் 'தளபதி'தான் என்பதை அவர் சுட்டிக் காட்டி பேசி இருக்கிறார். இதன் படப்பிடிப்பின் போது அவர் மலையாளத்தில் ஒரு படத்தை 20 நாட்களில் எடுத்து முடிக்கவேண்டிய கட்டாயத்தில் மாட்டிக் கொண்டிருந்தார். அப்போது ஷோபனாவுக்கு 20 வயதுதான். தளபதி படத்திற்காக அவரது கால்ஷீட் முடிந்த பிறகும் படம் பல நாட்கள் இழுத்துக் கொண்டிருந்தது. அதனால் சோகத்திலிருந்தார் ஷோபனா. முதுமலை படப்பிடிப்பிலிருந்த ஷோபனா ஒரு கட்டத்தில் வெடித்து அழுதேவிட்டார். அவர் சின்ன பிள்ளை போல் 'அம்மா அப்பாவைப் பார்க்கவேண்டும்' என அழுது நின்றபோது மம்மூட்டிதான் அவருக்கு அக்கறையாக ஆறுதல் சொன்னார். ரஜினி, ஷோபனா உட்படப் பலருக்குச் சோக அனுபவத்தைக் கொடுத்த 'தளபதி', திரையில் வெளியானபோது பலருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்ததுதான் சினிமா மேஜிக்.

Related Post