இரட்டை இலை விவகாரம்.. டெல்லியில் சி வி சண்முகம்.. தேர்தல் ஆணையத்தில் திடீர் பரபரப்பு! பின்னணி என்ன

post-img
டெல்லி: இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் அனைத்து தரப்பினரிடமும் விளக்கம் கேட்டு முடிவெடுக்கத் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்தச் சூழலில் அதிமுக சார்பில் விளக்கமளிக்க முன்னாள் அமைச்சரும் ராஜ்யசபா எம்பியுமான சி.வி. சண்முகம் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி இருக்கிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவில் இருந்தே அதிமுகவில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக அதிமுக இரட்டை இலை சின்னம் யாருக்குச் செல்லும் என்பதில் பல காலமாக குழப்பம் நிலவியது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் அந்த குழப்பம் நீங்கியது. எடப்பாடி பழனிசாமி தரப்பு தேர்தல் ஆணையம் மூலம் அங்கீகரிக்கப்பட்டு, இரட்டை இலை சின்னமும் ஒதுக்கப்பட்டது. மீண்டும் வழக்கு: இதற்கிடையே மீண்டும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கு ஒதுக்கக் கூடாது என்று திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்திருந்தார். இருப்பினும் தேர்தல் ஆணையம் இந்த மனு மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து அந்த மனுவைப் பரிசீலிக்க உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் சூரியமூர்த்தி வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் சமீபத்தில் முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது. அதாவது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் என அனைத்து தரப்பினரின் கருத்துகள் மற்றும் விளக்கத்தைக் கேட்டு, இந்த விவகாரம் குறித்து நான்கு வாரங்களில் முடிவெடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்குச் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. தேர்தல் ஆணையம்: சென்னை ஐகோர்ட் அளித்த இந்த உத்தரவின் அடிப்படையில் டிசம்பர் 19ம் தேதிக்குள் முதலில் எழுத்துப்பூர்வமான விளக்கத்தை அளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து இன்று டிசம்பர் 23ம் தேதி டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி இரட்டை இலை தொடர்பாக விளக்கம் தருமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், புகார்தாரர் சூர்யமூர்த்தி உள்ளிட்டோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. சி.வி. சண்முகம்: அந்த நோட்டீஸ் அடிப்படையில் இன்று அதிமுக சார்பில் விளக்கமளிக்க முன்னாள் அமைச்சரும் ராஜ்யசபா எம்பியுமான சி.வி. சண்முகம் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி இருக்கிறார். அவர் இரட்டை இலை சின்னம் தொடர்பாகத் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு முக்கிய விளக்கங்களை அளிக்க இருக்கிறார். அடுத்து என்ன: இந்த விவகாரத்தில் எடப்பாடிக்குச் சாதகமாகவே முடிவு வரும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள். ஏனென்றால் கடந்த 2022ம் ஆண்டு நடந்த அதிமுக பொதுக்குழுவில் தான் எடப்பாடி பழனிசாமி பொது செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். மேலும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த பொதுக்குழுவும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வேண்டுமானால் மனுதாரர்கள் சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெறலாம் என்று மட்டுமே உச்ச நீதிமன்றம் சொல்லி இருப்பதாகவும் உரிமையியல் வழக்கு முடியும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் எங்கும் சொல்லவில்லை என்று அதிமுகவினர் சுட்டுக்காட்டுகிறார்கள். இதனால் இந்த விவகாரத்தில் எடப்பாடிக்குச் சாதகமாகவே முடிவு வரும் என்ற நம்பிக்கையில் அவர்கள் உள்ளனர்.

Related Post