சென்னை: போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்தி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதை எதிர்த்து ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்-கை டெல்லி போலீசார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். இந்நிலையில் திமுகவுடன் ஜாபர் சாதிக்கை தொடர்புபடுத்தி அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருவதால் ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட கோரி திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் போதைப் பொருள் பயன்பாடு குறித்து பொது ம க்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுத் தளத்தில் இருந்த தகவல்களின் அடிப்படையிலேயே ட்விட் செய்ததாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சாட்சி விசாரணையை பதிவு செய்வதற்காக வழக்கை பிப்ரவரி 3ம் தேதிக்கு மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.