சென்னை: மெட்ரோ ரயில்வே நிா்வாகம் சாா்பில் இன்று நடத்தப்படும் 'ராக் ஆன் ஹாரிஸ் 2. 0’ என்ற இசைக் கச்சேரிக்கு செல்பவா்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக செல்லலாம் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் அறிவித்து இருக்கிறது.
'ராக் ஆன் ஹாரிஸ் 2.0’ என்ற தலைப்பில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்ஜின் இசைக் கச்சேரியை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மெட்ரோ ரயில்வே நிா்வாகம் நடத்துகிறது. இன்று நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவா்களுக்கு தடையற்ற போக்குவரத்தை ஏற்படுத்தும் வகையில் இன்று சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவனம் 'நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் பிரைவேட் லிமிட்டெட்’ என்ற நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து கட்டணம் இல்லாத மெட்ரோ ரயில் பயணத்தை வழங்க ஒப்பந்தம் செய்து உள்ளது.
இதன் மூலமாக தனிப்பட்ட மெட்ரோ ரயில் சீட்டுகளை கூடுதல் கட்டணமின்றி இசைக் கச்சேரிக்கு வருபவா்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் வழங்க உள்ளது. இந்தப் பயணச் சீட்டு மூலம் அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் சென்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் தங்கள் இருப்பிடங்களுக்கு மீண்டும் மெட்ரோ ரயில் மூலம் திரும்பலாம். இந்த இலவச பயணச் சீட்டுகளை ஒரு சுற்றுப் பயணத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.
சென்னை நந்தனம் - விம்கோ நகா் பணிமனை வரை செல்லும் கடைசி ரயில் இரவு 11. 17 மணிக்கும், சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம் வரை செல்லும் கடைசி ரயில் 11. 37 க்கும் புறப்படும் என தெரிவித்து இருக்கும் சென்னை மெட்ரோல் ரயில் நிர்வாகம், கடைசி ரயில் புறப்படுவதற்கு 10 நிமடங்களுக்கு முன்பாகவே பங்கேற்பாளா்கள் நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் வர வேண்டும் என தெரிவித்து இருக்கிறது. பச்சை வழித் தடத்தில் பயணிக்கும் பயணிகள் சென்னை சென்ட்ரல் மற்றும் ஆலந்தூரில் வழித் தடத்தை மாற்றிக் கொள்ளலாம். என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.