கேஸ் சிலிண்டர் காலி? வீட்டு சமையல் சிலிண்டரை மாற்றும்போது,கவனிக்க வேண்டிய மேட்டரே இது

post-img

சென்னை: எவ்வளவுதான் பாதுகாப்பாக கையாண்டாலும்கூட, சிலசமயங்களில் கேஸ் சிலிண்டர்கள் வெடித்து உயிரையே பறித்துவிடுகின்றன.. எப்படித்தான் சமையல் கேஸ் சிலிண்டர்களை கையாள்வது?


கேஸ் சிலிண்டர்களை வாங்கும்போதே கவனமுடன் இருக்க வேண்டும்.. உண்மையான டீலர்களிடமிருந்தான், சிலிண்டரை வாங்குகிறோமோ என்பதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல, பிளாக் மார்க்கெட்டில் சிலிண்டரை வாங்க வேண்டாம். வீட்டுக்கு வந்து டெலிவரி செய்யப்படும் சிலிண்டர், சரியாக சீல் வைக்கப்பட்டுள்ளதா? அதன் பாதுகாப்பு மூடி சேதமடையாமல் இருக்கிறதா? என்பதை உடனடியாக பார்க்கவேண்டும். லேசான கசிவு என்றாலும், அது விபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்.


காற்றோட்டம்: கிச்சனில் கேஸ் சிலிண்டரை எப்போதுமே, தரைமட்டத்திலிருந்து ஏறத்தாழ இரண்டடி உயரத்திலும், சுவரை ஒட்டியும் இருக்கும்படி வைக்க வேண்டும்.. முக்கியமாக காற்றோட்டம் நிறைந்த இடத்தில் வைத்திருக்க வேண்டும்.. அதேபோல, பக்கவாட்டில் படுக்க வைக்காமல் நிற்க வைத்துதான், சிலிண்டரை உபயோகிக்க வேண்டும்..


வீட்டிலுள்ள குழந்தைகள், கேஸ் சிலிண்டர் குழாயை திருப்பாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களின் கைகளுக்கு எட்டாதவாறு சிலிண்டரை வைத்திருக்க வேண்டும்.


ரப்பர் குழாய்கள்: இதில் பெரிதும் கவனம் செலுத்தவேண்டியது, கேஸ் சிலிண்டரின் ரப்பர் குழாய்களில்தான்.. 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது பைப் லைனை மாற்ற வேண்டும்.. ஐஎஸ்ஐ முத்திரை உள்ள அடுப்பு, ரெகுலேட்டர் மற்றும் ரப்பர் குழாய்களையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


விளக்குகள், ஊதுபத்திகள் ரப்பர் குழாயில் வெடிப்பு அல்லது துளை இருக்கிறதா என்பதை அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும்.. கேஸ் சிலிண்டரிலோ, ரப்பர் குழாயிலோ கசிவு இருப்பதாக சந்தேகம் தோன்றினால் உடனடியாக கதவுகள், ஜன்னல்கள் அனைத்தையும் திறந்துவிட வேண்டும்... முக்கியமாக, சிலிண்டருடன் இணைந்திருக்கும் சேப்பு கேப்பினால் சிலிண்டர் வால்வை அழுத்தி மூட வேண்டும். இது வால்விலிருந்து கேஸ் கசிவை தடுக்கும்.


சிலிண்டர் மாற்றும்போது: அடுப்பை அணைக்கும்போது முதலில் ரெகுலேட்டர் வால்வை மூடிவிட்டு, அதற்கு பிறகே வால்வை மூட வேண்டும். அடுப்பின் வால்வையும், சிலிண்டர் வால்வையும் மூடிய பிறகு, சிலிண்டரை மாற்ற வேண்டும்.. சிலிண்டரை மாற்றும்போது, எலக்ட்ரிக்கல் சம்பந்தமாக எதுவுமே இயங்கக்கூடாது.. ஊதுவத்திகூட அணைத்து விட வேண்டும்.


அதேபோல, கேஸ் பற்ற வைக்க லைட்டரை பயன்படுத்துவதையும் குறைத்து கொள்ள வேண்டும். காரணம், லைட்டரில் ஏதாவது அடைப்பு இருந்தால், உடனே நெருப்பு பொறி வெளிவராது. இதனால், கேஸ் வெளியேறி, வீணாகிவிடும். பிறகு குபீர் என ஸ்டவ் பற்றும்போது, முகத்திலும் நெருப்பு பட்டுவடும். எனவே, தீக்குச்சிகளை பயன்படுத்தினால், இந்த பிரச்சனையும் வராது.


ரெகுலேட்டர்: ஏதாவது பழுது என்றால் நாமே அதை சரிசெய்ய முயற்சிக்க கூடாது.. அதேபோல, கேஸ் உபகரணங்களை ரிப்பேர் செய்வதற்காக, வேறு யாரையும் அனுமதிக்கவும் கூடாது. விற்பனையாளர்களிடமே இந்த பொறுப்பை விட்டுவிட வேண்டும்.


அதன்படி ஏஜென்சி ஊழியர்கள், நுகர்வோர்களின் வீடுகளுக்கு சென்று சிலிண்டர்களில் உள்ள வாஷர், ரெகுலேட்டர், ரப்பர் குழாய் இணைப்பை பரிசோதிக்கின்றனர். ஏதாவது பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டால் அவற்றை உடனடியாக சீரமைத்து தருவார்கள்..


அதேபோல, சிலிண்டர் அகற்றும் போதும், பொருத்தும்போதும், கவனிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை, சரியான முறையில் ரெகுலேட்டரை எவ்வாறு பொருத்துவது, அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நுகர்வோர்களுக்கு விளக்கமாக சொல்வார்கள்.


லைட்டர்கள்: இப்போதெல்லாம் மாடுலர் கிச்சன் வந்துவிட்டது. அதாவது, சிலிண்டரை வைப்பதற்காகவே, பிரத்யேக இடம் ஒதுக்கப்பட்டு, பிரத்யேக கப்போர்டுகளும் வைத்து, அதை இறுக்கமாக மூடிவிடுவார்கள். இப்படி மூடிவைத்துவிட்டால், சிலிண்டரில் லீக் ஆனாலும், வெளியே தெரியாமல் போய்விடும்.. எனவே, எப்போதுமே, சிலிண்டரை காற்றோட்டமான இடத்தில் நிற்க வைக்க வேண்டும்... சிலர் சிலிண்டரை செங்குத்தாக வைப்பார்கள். அதுவும் ஆபத்துதான்.

 

Related Post