அல்லு அர்ஜுனை ஜாமீனில் வெளிக்கொண்டு வந்த வக்கீலுக்கு.. 1 மணி நேர கட்டணம் எவ்வளவு தெரியுமா?

post-img
ஹைதராபாத்: தெலுங்கு சினிமா திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்ட செய்தி நாடு முழுக்க தலைப்பு செய்தியாக மாறியிருந்தது. அவரது படம் 'புஷ்பா-2' பிரீமியர் ஷோவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்ததும், பலர் காயமடைந்ததும் இந்த கைதுக்கு காரணம். இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் மற்றும் சந்தியா தியேட்டர் நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அல்லு அர்ஜுன் தனது வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. இதற்கு எதிராக அல்லு அர்ஜூன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது வழக்கை பிரபல வழக்கறிஞர் நிரஞ்சன் ரெட்டி வாதிட்டார். நிரஞ்சன் ரெட்டி, முன்னாள் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கையும் வாதிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. நிரஞ்சன் ரெட்டி, அல்லு அர்ஜூனை கைது செய்தது தவறானது எனவும், இதேபோன்ற சம்பவம் ஷாருக்கான் நடித்த படத்தின் போது நடந்தபோது அவர் விடுவிக்கப்பட்டதையும் எடுத்துக்காட்டினார். அல்லு எந்த தவறும் செய்யவில்லை, அதற்கு ஆதாரமும் இல்லை என்று வாதிட்டார். இந்த வாதத்திற்கு பிறகு, நீதிமன்றம் அல்லு அர்ஜூனுக்கு நான்கு வாரங்கள் இடைக்கால பிணைப்பை வழங்கியது. இந்த வழக்கை வாதிட்டதற்காக நிரஞ்சன் ரெட்டிக்கு ஒரு மணி நேரத்திற்கு 5 லட்சம் ரூபாய் என்கிற அளவில் கட்டணம் வழங்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளதாக, "தெலுங்கு ஒன்இந்தியா" செய்தி வெளியிட்டுள்ளது. மணிக்கணக்கில்தான் அவர் கட்டணம் வாங்குவார் என்றும், அதன்படி ஒரு மணி நேரத்திற்கு வக்கீல் கட்டணமாக ரூ.5 லட்சம் செலுத்தப்பட்டது என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, அல்லு அர்ஜுனை பற்றி கவலைப்படுகிறீர்களே, அந்த கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டு ஒரு பெண் உயிரிழந்தார், சிறுவன் கோமாவில் உள்ளான், அவனை பற்றி ஏன் யாரும் கவலைப்படுவதில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி.

Related Post