வன்னியர் 10.5% இடஒதுக்கீடு- பாமக போராட்டம்- ராமதாஸ், அன்புமணி பங்கேற்பு- உதயநிதி பேனர் கிழிப்பு!

post-img
சென்னை: வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்க கோரி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பாட்டாளி மக்கள் கட்சியினர் (பாமக) இன்று போராட்டம் நடத்தினர். விழுப்புரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காஞ்சிபுரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. விழுப்புரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேனர் கிழிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால் நீதிமன்றத் தலையீட்டால் இதனை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தவிலை. தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு, மத்திய பாஜக அரசு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால்தான் சட்டப் பாதுகாப்புடன் இந்த 10.5% இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும் என்கிறது. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்டவைகளோ, ஏற்கனவே இருக்கும் தரவுகளை முன்வைத்தே இடஒதுக்கீடு வழங்க முடியும் என்கின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்க கோரி பாமகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை வகித்தார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். விழுப்புரம் போராட்டத்தின் போது தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதியின் பேனர் கிழிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. பாமகவின் இடஒதுக்கீடு கோரிக்கை குறித்து டாக்டர் ராமதாஸ் கூறுகையில், தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லாது என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு அனைத்து அதிகாரங்களும் உண்டு; போதிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்கத் தீரப்பை கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் நாள் வழங்கியது. அதன்பின் நேரடியாக சந்திப்பு, மனுக்கள், கடிதம், சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளுடன் கலந்தாய்வு என நூற்றுக்கும் மேற்பட்ட முறை வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டியதன் தேவையை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. இவை அனைத்தையும் கடந்த ஆண்டு டிசம்பர் 29 ஆம் நாள் முதல்வரை சந்தித்த நான், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினேன். ஆனால், அவை அனைத்தும் விழலுக்கு இரைத்த நீராகிவிட்டன. வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததன் 1000 ஆம் நாள் வரும் 24 ஆம் நாள் வருகிறது. அன்று தான் சமூகநீதிக்காக குரல் கொடுத்த பெரியாரின் நினைவு நாள். அந்த நாளில், அதாவது வரும் 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு, வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், வட்டத் தலைநகரங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாபெரும் மக்கள்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது என தெரிவித்திருந்தார்.

Related Post