திருச்சி: பாம்பு போல நாக்கை பிளவுபடுத்தும் டாட்டூ கடை நடத்தி வந்த ஹரிஹரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த டாட்டூ கலாச்சாரம் எப்படி தொடங்கியது? அதன் பூர்வீகம் என்ன என்பதைப் பற்றி அறிந்துகொள்வோம்.
திருச்சியில் உள்ள வெனிஸ் தெருவைச் சேர்ந்த இளைஞர் ஹரிஹரன். இவர் சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஒரு ஏலியன் என்ற பெயரில் டாட்டூ கடை நடத்தி வந்துள்ளார். இந்தக் கடை வழக்கமான டாட்டூ கடை அல்ல என்பதை இந்தச் செய்தியைப் படிப்பவர்கள் அறிந்திருக்க முடியும். ஏனெனில் நேற்றிலிருந்து இவர்தான் இன்ஸ்டாகிராமில் வைரலாக மாறி இருக்கிறார்.
இவரது தோற்றத்தைப் பார்த்தாலே ஏதோ வேற்று கிரகத்து மனிதனைப் போல காட்சி தருகிறார். இவர் தனது நாக்கின் நுனியைப் பாம்பு போல் இரண்டாக துண்டித்துக் கொண்டு கழுத்தில் பச்சை குத்திக் கொண்டு மாடர்ன் ஆக இருந்துள்ளார். அதேபோல் சிலருக்கு நாக்கு வெட்டும் வேலையைப் பார்த்தும் வந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ எம்டி படித்துவிட்டு அறுவை சிகிச்சை மருத்துவராகப் பணி செய்து வரும் பலரையே அலற விட்டிருக்கிறது. அந்தளவுக்கு வைப் செய்துள்ளார் இந்த இளைஞர். வீடியோ தீயாகப் பரவியதால் திருச்சி நகர போலீஸார் இந்த இளைஞரை தட்டித்தூக்கி இருக்கின்றனர். அவர் அதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் ஜாலியாக போலீஸ் ஜீப்பில் வலம் வருகிறார்.
அவருக்கு சாதாரண மனிதனைப் பிடிக்காதாம். ஏலியன் போல் இருப்பதையே விரும்புகிறாராம். அவருக்குப் பாம்பு பிடிக்கும் என்பதால் நாக்கை பாம்பு போல் இரண்டாக வெட்டிக்கொண்டிருக்கிறார். அதைப் பற்றி பேட்டிகளைக் கொடுத்து வந்துள்ளார். இவரைப் பார்த்து பலர் பாம்பு போல நாக்கை வெட்டிக் கொண்டுள்ளனர். சொல்லப் போனால் டாட்டூ கடை என்ற பெயரில் தனியார் மருத்துவமனையை நடத்தி வந்திருக்கிறார் இந்த ஹரிஹரன்.
இந்த மாதிரி செய்வது எவ்வளவு ஆபத்தானது? அதைப் பற்றி மருத்துவர் செல்வ சீதாராமன், “நம் உடலிலேயே அதிக ரத்த ஓட்டம் உள்ள பகுதிதான் நாக்கு. ஆகவே அதைக் கத்தியைக் கொண்டு வெட்டினால் அதிக அளவிலான ரத்தம் வெளியேறும். இதனால் உயிருக்கே ஆபத்து வரலாம். இந்தச் செய்தியைக் கேட்கும்போதே ஒரு மருத்துவராகப் பதற்றம் வருகிறது” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் இந்த மாதிரியான அறுவை சிகிச்சைகள் முறையான மருத்துவர்களே செய்ய மாட்டார்கள். அப்படியான ஒரு அறுவை சிகிச்சையை இவர்கள் எப்படிச் செய்தார்கள் என்பதே புரியவில்லை என்றும் அவர் அச்சத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்..
இந்தச் சம்பவம் பற்றி கேள்விப்பட்ட மருத்துவர்கள் பலரும் இந்த நாக்கை வெட்டுவது என்பது அழகுக் கலைக்குள் வரவே வராது. இது ஒரு பைத்தியக்காரத்தனம் என்றே சொல்கிறார்கள். அழகுக் கலை என்ற விருப்பத்தின் அடிப்படையில் ஒருவர் விரும்பும் அறுவை சிகிச்சை அனைத்தையும் மருத்துவர்கள் செய்ய மாட்டார்கள். அதற்கு என்று ஒரு மருத்துவக் கொள்கை உள்ளது. அதை மீறி ஒருவர் இறங்கினால், மருத்துவர்கள் எச்சரித்தே அனுப்பி வைப்பார்கள்.
ஆனால், அடிப்படை அறிவுகூட இல்லாமல் ஒரு டாட்டூ சென்டரில் இந்த நாக்குப் பிளவு அறுவை சிகிச்சையைச் செய்துள்ளார்கள். இது எந்தளவுக்கு முட்டாள்தனமான காரியம் என்பதை அறியாமல் பல இளைஞர்கள் இதற்குப் பலியாகி உள்ளனர் என்பது இன்னும் கொடுமை" என்று பேசி இருக்கிறார்.
இன்றைக்கு உலகம் முழுக்க இருக்கும் நவ நாகரிக மக்கள் டாட்டூ என்ற வார்த்தை மிக எளிதாக உச்சரிக்கிறார்கள். ஆனால், இந்த ஆங்கில வார்த்தையின் மூலச் சொல் எங்கே இருந்து வந்தது என்பது பலருக்கும் தெரியாது. பிரஞ்சு நாட்டின் அருகே உள்ளது பாலினீசியா என்ற ஒரு தீவு. இங்குள்ள மக்கள் பேசும் மொழியாக தாஹிதியன் உள்ளது.
இந்த மொழி பேசும் மக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ள 'டாட்டாவ்' என்ற வார்த்தைதான் ஆங்கிலத்திற்கு வந்து 'டாட்டூ’ என்று மாறியது. இந்த வார்த்தை கடந்த 18 ஆம் நூற்றாண்டில்தான் ஆங்கிலத்தில் இறக்குமதியானது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவியது. பச்சை குத்திக் கொள்வதைத்தான் பாலினீசியா மக்கள் 'டாட்டாவ்' என்று குறிப்பிட்டனர். ஆனால், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் 18 நூற்றாண்டுக்கு முன்பே இந்தப் பச்சை குத்திக் கொள்ளும் கலாச்சாரம் புழக்கத்தில் இருந்ததாக நம்புகிறார்கள்.
பண்டைய காலத்து மம்மிகளில் உடலில் பச்சை குத்தப்பட்டு இருப்பதைப் பற்றி பெரிய ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன. அதைப் பற்றி பல்வேறு கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஐரோப்பாவின் மிகப் பிரபலமான மம்மியை 'தி ஐஸ்மேன்’ என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள். அதன் உண்மையான பெயர் ஓட்ஸி. இதை 19921 ஆம் ஆண்டு ஆல்ப்ஸில் ஜெர்மன் மலையேற்றத்தில் போது ஒரு குழு கண்டுபிடித்தது என்கிறது நேஷனல் ஜியோகிராபிஃப் பத்திரிகையில் வெளியான கட்டுரை ஒன்று. இந்த ஓட்ஸி 5,200 ஆண்டுகள் முன்பாக இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து எல்லையில் உள்ள மலைப்பகுதியான டைரோலில் வாழ்ந்து வந்துள்ளார். அவர் இறந்த பின் அவரது உடலில் பச்சை குத்தி புதைக்கப்பட்டுள்ளார்.
இதே மாதிரி உடலில் பச்சை குத்தும் வழக்கம் இந்தியாவில் பல பகுதிகளிலும் தமிழர்கள் மத்தியிலும் இருந்துவந்துள்ளது. ஆகவே, பச்சை குத்திக் கொள்வது தமிழர்களின் புதிய பழக்கம் இல்லை. ஆனால், இன்றைக்கு புழக்கத்தில் உள்ள டாட்டூ கலாச்சாரத்திற்கும் பச்சை குத்திக் கொள்ளும் பழக்கத்திற்கும் பல வேறுபாடுகள் உள்ளன.