திருநெல்வேலியில் நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தவரை கொலை செய்தது யார்? நீதிமன்றத்திற்குள் அரிவாள் போன்ற ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டது எப்படி? போலீசார் கண் முன்னே நடந்த கொலையின் பின்னணி என்ன?
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் மாநகர பகுதிக்குள்ளேயே திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ளது. நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு வழக்கு தொடர்பாக வந்து செல்வதுண்டு. எப்போதும் பரபரப்பாக காணப்படும் நீதிமன்ற வளாக வாசலில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுவார்கள். வாசலில் சோதனைகளுக்குப் பிறகு அனைவரும் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இந்த நிலையில் இன்று காலை 10:20 மணியளவில் நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளே இருந்து ஏழு பேர் கொண்ட கும்பல் ஒரு நபரை கொலை செய்வதற்காக அரிவாளுடன் விரட்டி வந்தனர்.
நீதிமன்றத்திற்கு வெளியே வாசலில் அந்த நபரை சுற்றி வளைத்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தது. கொலை செய்து விட்டு அந்த கும்பல் அரிவாளுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நின்ற நிலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் உய்க்காட்டான் மட்டும் கொலையாளிகளை துரத்திக் கொண்டு ஓடினார். அதில் கொலைகார கும்பலை சேர்ந்த ஒருவரை மட்டும் எஸ்.ஐ. உய்க்காட்டான் லாவகமாக பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்.
நீதிமன்றம் முன்பு கொலை சம்பவம் நடந்ததால் அதிர்ச்சி அடைந்த வழக்கறிஞர்கள் வாயிலில் நின்றபடி காவல்துறைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். நீதிமன்றத்திலேயே பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த நபர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் வழக்கறிஞர்கள் மீதும் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் ரூபேஷ் குமார் மீனா வந்து ஆய்வு நடத்தினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறோம். நீதிமன்ற வாசலில் பாதுகாப்பு குளறுபடி குறித்தும் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, கொல்லப்பட்ட நபர் மாயாண்டி என்ற இளைஞர் என்பது தெரியவந்துள்ளது. விசாரணையில் 38 வயதான மாயாண்டி திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தம் பகுதியில் சேர்ந்தவர் என்பதும் இவர் மீது கீழநத்தம் வார்டு உறுப்பினர் ராஜாமணி கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
இன்று கொலை முயற்சி வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த நிலையில், அதனை தெரிந்து கொண்ட கும்பல் அவரை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி உள்ளது. நீதிமன்ற வாயிலில் விசாரணை கைதி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
சம்பவ இடத்தில் காவல்துறையைச் சார்ந்த தடய அறிவியல் பிரிவின் உதவி இயக்குனர் ஆனந்தி ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்து சென்றார்.
பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் ராஜாமணி கொலை சம்பவத்திற்கு பழிக்கு பழி யாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமகிருஷ்ணன் என்பவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் மூவர் என மொத்தமாக நான்கு பேரை இந்த கொலை சம்பவத்தில் கைது செய்துள்ளனர்.
கொலை சம்பவத்திற்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து அரிவாள், துப்பாக்கி போன்ற ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, உயிரிழந்த மாயாண்டியின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.