சென்னை: மழை பாதிப்புகளை மதிப்பீடு செய்ய மத்திய குழு முடிவு செய்துள்ளது. மிக்ஜாம் புயல் - மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள் |மற்றும் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நிவாரணப்பணிகளை நேரடியாக ஆய்வு செய்து மதிப்பிடுவதற்காக மத்திய அரசின் குழு நாளை தமிழ்நாடு வருகை செய்ய உள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மொத்தமாக பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பாக அறிக்கை அளிக்கவும் அதிகாரிகள், அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசு நிதி: இதற்காக மத்திய அரசிடம் 5000 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு கேட்டது. ஆனால் மத்திய அரசு நிவாரண நிதி + சென்னை வடிகால் திட்டத்திற்கு சேர்த்து 1010 கோடி ரூபாய் நிதி மட்டுமே கொடுத்துள்ளது. நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலினுளுடன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னையில் சந்திப்பு நடத்தினார். பாதிப்புகளை சீர் செய்திட தேவையான நிதியினை விரைவில் விடுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
ஆலோசனை: தமிழ்நாட்டில் 'மிக்ஜாம்' புயல் காரணமாக ஏற்பட்ட பெருமழையின் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு ஆலோசனை மேற்கொள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று (7.12.2023) சென்னைக்கு வருகை தந்தார். பாதுகாப்புத் துறை அமைச்சருடன், ஒன்றிய மீன்வளம், கால்நடை, பால்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செயலாளர் கமல் கிஷோர் ஆகியோரும் வருகை தந்தனர்.
பின்னர், சென்னை, தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்; பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஒன்றிய, மாநில அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வங்கக் கடலில் உருவாகிய புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர். வேலூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய 12 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை செய்யப்பட்டது.
மத்திய குழு வருகை: இந்த நிலையில்தான் மழை பாதிப்புகளை மதிப்பீடு செய்ய மத்திய குழு முடிவு செய்துள்ளது. மிக்ஜாம் புயல் - மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள் |மற்றும் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நிவாரணப்பணிகளை நேரடியாக ஆய்வு செய்து மதிப்பிடுவதற்காக மத்திய அரசின் குழு நாளை தமிழ்நாடு வருகை செய்ய உள்ளது.
வெள்ள பாதிப்புகள் குறித்த இறுதி அறிக்கையைத் தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த பிறகு, அதற்கான விரிவான மதிப்பீட்டை இக்குழு தயாரிக்க உள்ளது. அதிகாரிகள் அளிக்கும் அறிக்கையின்படி.. நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாம். ஏற்கனவே 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு நிவாரணமாக கேட்டுள்ளது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு மக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதில் 500 கோடி மட்டுமே கொடுக்கப்பட்டு உள்ள நிலையில் அறிக்கைக்கு பின் மொத்த தொகை வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.