சென்னை: புதிய ரேஷன் கார்டுகள் எப்போது விநியோகிக்கப்படும் என்ற ஆர்வம் ரேஷன்தாரர்களிடம் ஏற்பட்டு வரும்நிலையில், ரேஷன் அட்டைதாரர்கள் வசதிக்காக தமிழக அரசு அறிமுகப்படுத்தியிருக்கும், புதிய செயலியின் பயன்பாடுகள் என்னென்ன தெரியும்?
தமிழகத்தில் குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.. 35,083 ரேஷன் கடைகள் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும்நிலையில், 2 கோடிக்கும் அதிகமானோர் ரேஷன் கார்டுகளை வைத்திருக்கிறார்கள். இதன்மூலம் 7 கோடிக்கும் அதிகமானோர் நேரடியாகவே பயன்பெற்று வருகின்றனர்.
அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 544 முழு நேர கடைகள், 1,126 பகுதி நேர கடைகள் என, 1,670 ரேஷன் கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன... பொருட்கள் தரத்துடனும், உரிய நேரத்திலும் வழங்க ரேஷன் ஊழியர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டும் வருகிறது..
முக்கியமாக, ஒவ்வொரு பொருளின் மாதிரியையும், ரேஷன் கடைக்கு முன்பு, சிறிய பாத்திரங்களில் வைத்து காட்சிப்படுத்த வேண்டும் என்றும், இப்படி தனித்தனியாக பொருட்களை பிரித்து வைத்து காட்சிப்படுத்துவதன் மூலம், அரிசி உட்பட அனைத்து பொருட்களின் தரத்தையும், கார்டுதாரர்கள் எளிதில் தெரிந்து கொள்ள முடியும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறது.
அதேபோல, ரேஷன் கடைகள் செயல்பாடுகள் முற்றிலுமாக டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.. ரேஷன்தாரர்களின் வசதிக்காகவே, எஸ்எம்எஸ் அனுப்புவது, பயோமெட்ரிக் என ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் TNePDS என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்காகவே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட செயலி இதுவாகும்.
இந்த செயலி மூலம் ரேஷன் சம்பந்தப்பட்ட தகவல்களை குடும்ப அட்டைதாரர்கள் தெரிந்து கொள்ள முடியும். பொருட்களை மட்டுமல்லாமல், ரேஷன் கடையின் முகவரி, அமைவிடம், கடையின் விடுமுறை நாட்கள், வேலை நேரம் போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
இந்த சேவைகளை பெற வேண்டுமானால், இந்த மொபைல் செயலியை செல்போன்களில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.. இந்த செயலியில் ஒவ்வொரு முறையும் லாகின் செய்ய ரேஷன்கடையில் ரேசன் கார்டுக்கு பதிவு செய்த மொபைல் எண்ணையும், அதன் OTP கொடுக்க வேண்டும். இதனால், தங்களது ரேஷன் கடை குறித்த மொத்த விவரங்களையும் ரேஷன்தாரர்கள எளிதாக பெற்றுக் கொள்ள முடியும்.
அதேபோல, ஸ்மார்ட் கார்ட்டில் இடம்பெற்றிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் யார் யார் என்ற விபரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும், உரிமம் பகுதியில் நமக்கு எவ்வளவு பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.. என் விருப்பத்தில் கூடுதலாக தேவைப்படும் பொருட்கள் குறித்த விபரங்களையும், புகார் பக்கத்தில் குறைகளையும் பதிவு செய்யலாம். https://tnpds.gov.in/ என்ற இணையதளத்தில் புதிய அட்டைக்கான விண்ணப்பங்களையும் அளிக்கலாம்.