சென்னை: கோவை குண்டு வெடிப்பு வழக்கின் முதன்மை குற்றவாளியான தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத்தின் தலைவர் பாட்ஷா மறைவையொட்டி அவரை கதாநாயகன் போல சில அரசியல் கட்சிகள் சித்தரிப்பதற்கு தமிழ்நாடு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் கொலை குற்றவாளிகளை, பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டோரை 'ஹீரோக்களாக' சித்தரிப்பது குண்டு வெடிப்பு நிகழ்த்தியதை விட படு பாதக செயல் என்றும் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமது சமூக வலைதளப் பக்கத்தில் நாராயணன் திருப்பதி பதிவிட்டுள்ளதாவது: தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான அல்-உம்மா இயக்க நிறுவனரும், 60 க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்ட கோவை குண்டுவெடிப்பிற்கு காரணமான, அவ்வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளி, சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருக்கிற 'பாஷா' நேற்று உயிரிழந்த நிலையில், சில அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் அந்த நபரை ஏதோ கதாநாயகன் போல் போற்றுவதும், போராளி என்று குறிப்பிட்டு புளகாங்கிதம் அடைவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. கொலை குற்றவாளிகளை, பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டோரை 'ஹீரோக்களாக' சித்தரிப்பது குண்டு வெடிப்பு நிகழ்த்தியதை விட படு பாதக செயல்.
மேலும், இன்று பாஷா வின் இறுதி ஊர்வலம் திட்டமிடப்பட்டுள்ளது என்று ஊடகங்களின் செய்திகள் மூலம் அறிய முடிகிறது. எந்த ஒரு தனிநபரின் இறுதி சடங்கும் மரியாதையோடு அனுமதிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், பல இறுதி ஊர்வலங்களுக்கு காரணமான ஒரு நபரின் இறுதி சடங்கை பெரிய அளவில் நடத்த அனுமதிப்பது முறையல்ல. வங்காள தேச ஹிந்துக்களுக்காக குரல் கொடுத்த தமிழக மக்களை, ஹிந்து உணர்வாளர்களை கைது செய்து ஒரு நாள் முழுக்க சிறையில் வைத்த திராவிட மாடல் அரசு, 60 உயிர்களை பலி கொண்ட, பல நூற்றுக்கணக்கான மக்களை செயலிழக்கச் செய்த, கோடிக்கணக்கான மதிப்புள்ள பொது சொத்துக்களை இழப்பதற்கு காரணமான ஒரு நபரின் இறுதி ஊர்வலத்தை ஒரு தலைவரின் இறுதி ஊர்வலத்திற்கு இணையாக நடத்த அனுமதிப்பது கண்டனத்திற்குரியது.
பாஷாவின் இறுதி சடங்கு சாதாரண மனிதர்களின் சடங்கு போன்று நடைபெற வேண்டுமேயன்றி ஏதோ ஒரு தியாகியின் இறுதி ஊர்வலத்தை போன்று நடைபெற அனுமதித்தால் அது தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்தி விடுவதோடு, சட்ட ஒழுங்கு பிரச்சினைகளையும் உருவாக்கும். மேலும் ஒரு மத வெறியனின், பயங்கரவாத செயல்களை செய்த நபரை தியாகியாக்க முயற்சிப்பது வருங்கால தலைமுறைக்கு தவறான செய்தியை கொண்டு போய் சேர்க்கும். அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தில் குண்டு கலாச்சாரத்தை உருவாக்கியது அல்-உம்மா இயக்கம் தான், அதன் முன்னோடிகளில் ஒருவரான பாஷா தான். இன்றும் அல்-உம்மாவை தோற்றுவித்த, தீவிரமாக செயல்பட்ட பலர் தீவிர அரசியலிலும், மத அமைப்புகளிலும் உள்ளனர் என்பதை தமிழக அரசும், காவல் துறையும் மறந்து விடக்கூடாது.
மீண்டும் சொல்கிறேன், பல உயிர்களை பறித்த கோவை குண்டுவெடிப்புக்கு காரணமான நபராக இருந்தாலும், ஒரு மனிதனின் இறுதி சடங்கு, இறந்த நபரின் மத வழக்கப்படி உரிய மரியாதையோடு அமைதியாக நடைபெற வேண்டுமேயன்றி, ஊர்வலமாக செல்ல அனுமதிக்க கூடாது. அப்படி நடைபெற்றால் கோவை குண்டுவெடிப்பில் பறிபோன 58 உயிர்களை அவமதிக்கும் செயலாகும்.
பாஷா என்ற நபர் இன்றும் பரோலில் வெளியே வந்திருக்கக்கூடிய கொலை குற்றவாளி, கைதி தான் என்பதை தமிழக அரசு மறந்து விடக்கூடாது. இறுதி ஊர்வலத்தை அனுமதிப்பது முறையற்ற செயல். எல்லோருக்குமான முதல்வர் என்று தன்னை சொல்லிக்கொள்கிற திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்த வரலாற்று தவறை, சரித்திர பிழையை செய்ய மாட்டார் என நம்புகிறேன். இவ்வாறு நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
முன்னதாக அல் உம்மா பாட்ஷா மறைவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தனர். இதில் வன்னி அரசு, பாட்ஷாவுக்கு வீரவணக்கம் செலுத்துவதாக குறிப்பிட்டிருந்தார். சீமான், அப்பா பாட்ஷாவுக்கு கண்ணீர் வணக்கம் என தெரிவித்திருந்தார்.