ஐகோர்ட் ஆர்டர் சரியே: பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் விநாயகர் சிலைகளுக்கு தடையை உறுதி செய்தது

post-img

டெல்லி: பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் கொண்டு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை விற்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவிற்கு எதிரான மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது உச்சநீதிமன்றம்.


விநாயகர் சதுர்த்தியின் போது போலீசார் அனுமதிக்கும் இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், 'பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்' பயன்படுத்தி தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை தயாரிக்கவோ விற்கவோ கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சிலை செய்யும் இடங்களில் காவல்துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.


இதையடுத்து நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சிலை தயாரிக்கும் பிரகாஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதிக்கும் பொருட்களை பயன்படுத்தி கடவுள் சிலைகளை தயாரித்து வருகிறோம், விநாயகர் சிலைகள் விற்பனை தொழிலில் தலையிடக் கூடாது என நெல்லை மாவட்ட ஆட்சியர், நெல்லை மாநகர் காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும் என்று அவரது மனுவில் கோரப்பட்டிருந்தது.


இந்த மனு அண்மையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் அனுமதிக்கப்பட்ட அளவில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார். இந்த சிலைகளை வாங்குபவர்கள் வீடுகள், கோயில்கள், திருமண மண்டபங்களில் வைக்கலாம். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்க முடியாது. அந்த சிலைகள் விற்கப்படுவதை அதிகாரிகள் தடுக்க முடியாது என நீதிபதி உத்தரவிட்டார்.


'பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்' பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்யலாம், நீர் நிலைகளில் கரைக்க அனுமதியில்லை என தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த உத்தரவை எதிர்த்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சார்பில் மேல்முறையீடு மனு செய்யப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவசர வழக்காக நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது 'பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்' மூலப்பொருட்கள் கொண்டு விநாயகர் சிலைகளை தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை விதித்து இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது. விஷம் என்பதில் ஒரு துளி விஷம், அதிக விஷம் என்பது இல்லை. எல்லாமே விஷம் தான். பிளாஸ்டர் ஆப் பாரீஸ் மூலம் செய்யப்பட்ட சிலைகள் தயாரிக்கவோ விற்கவோ கூடாது எனக் கூறி, தனி நீதிபதி தீர்ப்புக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்து உத்தரவிட்டது.


இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றமும் தடை விதித்துள்ளது. மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.


பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கொண்டு தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அனுமதிக்கலாம் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்த இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பில் தலையிட முடியாது. பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகளை, நீர்நிலைகளில் கரைக்க கூடாது என்பது சரியே எனத் தெரிவித்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது உச்சநீதிமன்றம்.

 

Related Post